புயலால் சாய்ந்த மரங்களை மீண்டும் நட்டு வளர்க்க முதல்வரிடம் கோரிக்கை

புயலால் சாய்ந்த மரங்களை மீண்டும் நட்டு வளர்க்க முதல்வரிடம் விவேக் கோரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் விவேக் கிரீன் கலாம் என்ற பெயரில் நாடு முழுவதும் லட்சக்கணக்கான மரங்களை நட்டு வருகிறார். இவருடைய இலக்கு 1 கோடி மரங்களை தமிழகத்தில் நடவேண்டும் என்பதுதான். அந்த இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் சமீபத்தில் சென்னையை தாக்கிய வர்தா புயல் ஏகப்பட்ட மரங்களை வேரோடு சாய்த்துள்ளது.

பசுமையை இழந்து தவிக்கும் சென்னையை மீண்டும் பசுமையாக்குவதற்கு பலரும் பல்வேறு முயற்சிகளை எடுத்துவரும் நிலையில், விவேக் இன்று இதுதொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்தார். முதல்வருடனான சந்திப்புக்கு பிறகு விவேக் கூறும்போது, புயலால் சாய்ந்த மரங்களை மீண்டும் நட்டு வளர்க்க முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறினார்.

மேலும், அவ்வாறு நடப்படும் மரங்களில் அரச மரம், வேப்ப மரம் உள்ளிட்ட மரங்களை அதிகளவில் நடவேண்டும் என்றும் முதல்வரிடம் கேட்டுக் கொண்டதாக கூறியுள்ளார். இவரது கோரிக்கையை முதல்வரும் பரிசீலிப்பதாக கூறியுள்ளதாக தெரிவித்தார்.