வடகிழக்கு ஊடகவியலாளர்கள் மீதான வன்முறை தெற்குக்கும் பரவியுள்ளது.

வடக்கு கிழக்கு ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை தற்போது தெற்கு ஊடகவியலாளர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டு உள்ளது என யாழ்.ஊடக அமையம் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் கடற்படை தளபதியினால் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் வைத்து ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து யாழ்.ஊடக அமையம் அறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது.
குறித்த அறிக்கையிலையே அவ்வாறு சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது ,வடகிழக்கு  தமிழர் தாயகத்தினில் ஊடகவியலாளர்கள் மீது யுத்த காலத்திலும் அதன் பின்னருமாக கட்டவிழ்த்துவிடப்பட்ட இலங்கை பாதுகாப்பு படைகளது வன்முறை தற்போது தென்னிலங்கைக்கும் பரவியுள்ளது.
கடந்த காலங்களில் இலங்கை பாதுகாப்பு தரப்புகளாலும் அவற்றினால் இயக்கப்பட்ட துணை இராணுவ குழுக்களாலும் கொல்லப்பட்ட காணாமல் போயுள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களிற்கு நீதி வேண்டி வடகிழக்கிலிருந்து எழுப்பப்பட்ட குரல்கள் வெற்றுக்கோசங்களாக ஆட்சி கதிரையிலிருப்பவர்களால் பார்க்கப்பட்டு வருகின்றது.
நீதி கேட்கும் எமது குரலை எட்டிநின்று வேடிக்கை பார்த்த தெற்கிற்கு அம்பாந்தோட்டையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட கடற்படையினரது அராஜகம் வடக்கிழக்கினில் என்ன நடந்தது , என்ன நடந்து கொண்டிருக்கின்றதென்பதை அப்பட்டமாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
 ஊடகவியலாளர்களது உரிமைகள் இனம்,மொழி என அனைத்தினையும் தாண்டியவையாகும்.அந்த உரிமைகள் வடக்கு – தெற்கு,கிழக்கு –மேற்கு என எந்தவித பாகுபாடுமின்றி கிடைக்க வேண்டுமென்பதே யாழ்.ஊடக அமையத்தின் நிலைப்பாடாகும்.அதற்காகவே அது தொடர்ந்தும் குரல் கொடுத்துவருகின்றது.
நல்லாட்சி எனும் அரசு ஆட்சி பீடமேறிய பின்னராக மாறி மாறி ஆட்சியிலிருந்த அரசுகளது ஆசீர்வாதத்துடன் கொல்லப்பட்ட காணாமல் போயுள்ள தமிழ் ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்களிற்கு நீதி வேண்டி யாழ்.ஊடக அமையம் பல தடவைகள் வேண்டுகோள்களை விடுத்திருந்தது.
நாடாளுமன்றில் இலங்கை ஜனாதிபதி,பிரதமர்,ஊடக அமைச்சரென அனைவரையும் அண்மையினில் ஒரே மேடையில் சந்தித்த வடக்கு ஊடகவியலாளர்கள் நீதி விசாரணையினையை மீண்டும் கோரியிருந்தனர். ஆனால் அரசு தனது வாயை கூட அதற்கு பதிலளிக்க திறந்திருக்கவில்லை.
 கடந்த ஒக்டோபர் 19ம் திகதி படுகொலையான சக ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் நினைவு நாளன்று வடக்கு ஊடகவியலாளர்கள் ஒன்று திரண்டு யாழில் நீதிவேண்டி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருந்தனர்.இவை அனைத்துமே இந்த அரசின் காதிலும் செவிடன் காதில் ஊதிய சங்கு போன்றேயுள்ளது.
தற்போதும் எந்தவித மாற்றமின்றி பெண் ஊடகவியலாளர் ஒருவர் படை அதிகாரியொருவரால் மிகமோசமாக அச்சுறுத்தப்பட்ட சம்பவமும் யாழில் நடந்துள்ளது.ஆனால் இவை எவற்றிற்கும் நீதி கிட்டப்போவதில்லை.ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி தெற்கில் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள் அம்பாந்தோட்டையினில் கடற்படை தளபதியால் தாக்கப்பட்ட சகோதர ஊடகவியலாளரிற்கான நீதியை பெற்று வழங்குகின்ற அதே வேளை எமக்கான நீதியையும் கோருவதாக இருக்க வேண்டுமெனக்கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் அம்பாந்தோட்டை தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதுடன் ஊடக சுதந்திரத்திற்கான போராட்டங்களிற்கு தனது முழுமையான ஆதரவை யாழ்.ஊடக அமையம் நல்கி நிற்கின்றதென்பதையும் தெரியப்படுத்திக்கொள்கின்றோம். என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளது.