சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய, இப்போது பல புதிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மிக மலிவானது, வளைந்து கொடுக்கும் தன்மை உள்ளது; ‘பெரோவ்ஸ்கைட்’ என்ற பொருள் தான் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அண்மையில் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள், பெரோவ்ஸ்கைட்டை பயன்படுத்தி உருவாக்கிய சூரிய ஒளி மின் அமைப்பு, மின் தயாரிப்பில் சாதனை படைத்துள்ளது. கால்சியம் டைட்டானேட் என்ற பொருளை அதிகம் கொண்ட மஞ்சள், பழுப்பு மற்றும் கறுப்பு நிறங்களில் கிடைக்கும் தாதுவைத்தான், பெரோவ்ஸ்கைட் என்கின்றனர் விஞ்ஞானிகள்.
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பெரோவ்ஸ்கைட் தகடுகள் மூலம் சூரிய ஒளியின் சக்தியிலிருந்து, 12.1 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளனர். அதாவது வெறும், 16 சதுர செ.மீ., பரப்பளவுள்ள பொரோவ்ஸ்கைட் தகடு இதை சாதித்திருக்கிறது. இவர்கள் தயாரித்த பெரோவ்ஸ்கைட் கலவை, சுவற்றில் சாயம் போலவும் பூச முடிகிற அளவுக்கு வளைந்துகொடுக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.
பெரோவ்ஸ்கைட் தாதுக்களின் அமைப்பு நுண்ணிய மேடு பள்ளங்களைக் கொண்டவை. இதனால் அவற்றின் மேற்பரப்பளவு அதிகம். எனவே, அதிக சூரிய ஒளியை இவற்றால் உள்வாங்கி, மின்சாரமாக மாற்ற முடியும்.
பரவ லாக தற்போது சூரிய மின் தகடு களில் பயன்படுத்தப்படும் சிலிக்கானை விட, இவை செறிவானவை, மலிவானவை என்பதால், பெரோவ்ஸ்கைட் சூரிய மின் தகடு ஆராய்ச்சியில் இன்று உலகெங்கும் பெரிய போட்டியே நடக்கிறது. நியூ சவுத் வேல்சின் ஆராய்ச்சி யாளர் அனிதா ஹோ பாய்லி. விரைவில் பெரோவ்ஸ்கைட்டை வைத்தே, சூரிய ஒளியிலிருந்து, 24 சதவீத மின் உற்பத்தி சாதனையை எட்டுவோம் என, அறிவித்து இருக்கிறார்.