2016-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா முதலிடம் பெற்றுள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகைகளில் ஒருவரான பிரியங்கா சோப்ரா, குவாண்டிகோ என்னும் ஹாலிவுட் சீரியலின் மூலம் உலகளவில் புகழ் பெற்றார். தொடர்ந்து ஆஸ்கர் விருது விழாவில் விருது வழங்கும் நபர்களில் ஒருவராக பிரியங்கா சோப்ரா இடம் பெற்றது உலகளாவிய அவரது புகழை மேலும் அதிகப்படுத்தியது.
ஹாலிவுட் நடிகர் டுவைன் ஜான்சன் ஜோடியாக பிரியங்கா நடித்திருக்கும் ‘பே வாட்ச்’ திரைப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகவுள்ளது. இதுதவிர ஐக்கிய நாடுகள் சபையின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் (யூனிசெப்) நல்லெண்ணத் தூதராக நடிகை பிரியங்கா சோப்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் 2016-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்டவர்கள் பட்டியலில் பிரியங்கா சோப்ரா முதலிடம் பெற்றுள்ளார். ஆஸ்கர் ரெட் கார்பெட் நிகழ்வில் பங்கேற்றவர்கள் குறித்து கூகுளில் அதிகம் பேர் தேடியுள்ளனர். அதில் குறிப்பாக பிரியங்கா சோப்ரா குறித்தே பெரும்பாலோனோர் தேடியதாக கூகுள் தெரிவித்துள்ளது.
அதிகம் தேடப்பட்ட ஆடை வடிவமைப்பாளர்களின் பட்டியலில் இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட ரேச்சல் ராய்க்கு முதலிடமும், இந்தியாவின் பிரபல ஆடை வடிவமைப்பாளர் அனிதா டோங்ரேவுக்கு ஏழாவது இடமும் கிடைத்துள்ளது.
விளையாட்டுகளில் போக்கிமான் கோவை அதிகம் பேர் தேடியுள்ளனர். அதிகம் தேடப்பட்ட தனிநபர் பட்டியலில் டொனால்ட் டிரம்ப், ஹிலாரி கிளிண்டன் இருவரும் இடம் பெற்றுள்ளனர். அதிகம் தேடப்பட்ட நடிகர் பட்டியலில் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் முதலிடம் பிடித்துள்ளார். நடிகை ஏஞ்சலினா ஜோலியுடனான விவாகரத்து காரணமாக பிராட் பிட்டை அதிகம் பேர் தேடியுள்ளது குறிப்பிடத்தக்கது.