உலகப்பட விழாவில் தேசிய கீதத்துக்கு அவமதிப்பு

கேரள மாநிலத்தில் நடைபெற்றுவரும் உலகப்பட விழாவில் திரைப்படம் போடுவதற்கு முன்னர் தேசியகீதம் இசைக்கப்பட்டபோது எழுந்துநின்று மரியாதை செலுத்த மறுத்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

உச்ச நீதிமன்ற  உத்தரவுப்படி நாடு முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில் திரைப்படம் போடுவதற்கு முன்னால் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற நடைமுறை தற்போது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் தற்போது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது. கன்னாகக்குன்னு நிஷாகாந்தி திறந்தவெளி திரையரங்கத்தில் நேற்று தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது, அங்கிருந்த பலரும் தங்களது இருக்கையை விட்டு எழுந்து நின்று தேசிய கொடிக்கு மரியாதை செலுத்தினர்.

ஆனால், படம்பார்க்க வந்திருந்த ஆறுபேர் மட்டும் எழுந்திருக்காமல் தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் தங்களது இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். இதைக் கண்டதும் அங்கு பணியில் இருந்த போலீசார் அவர்களை எழுந்து நின்று மரியாதை செலுத்துமாறு அறியுறுத்தினர். இருப்பினும், அவர்கள் மறுத்து விட்டனர்.

படவிழா ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தியும் அவர்கள் எழுந்திருக்க மறுத்து விட்டதால், அவர்கள் ஆறுபேரையும் கைதுசெய்த போலீசார், அருகாமையில் உள்ள மியூசியம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

இதற்கிடையில், தொடர்ந்து நடைபெற்றுவரும் திரைப்பட விழாவின்போது தேசிய கீதத்தை அவமதிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்யும்படி கேரள மாநில போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெஹ்ரா உத்தரவிட்டுள்ளார்.