அவுஸ்ரேலியாவிற்கு வஹாப் ரியாஸ் எச்சரிக்கை

பிரிஸ்பேனில் ஆக்ரோஷமான பந்து வீச்சை வெளிப்படுத்துவேன் என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் வஹாப் ரியாஸ் அவுஸ்ரேலியாவிற்கு எச்சரித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவின் அடிலெய்டு மைதானத்தில் பாகிஸ்தான் – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையிலான 2015-ம் ஆண்டின் உலகக்கோப்பை காலிறுதி ஆட்டம் நடைபெற்றது. இதில் வாட்சனுக்கு எதிராக வஹாப் ரியாஸ் ஆக்ரோஷமாக பந்து வீசினார். இந்த பந்து வீச்சை யாராலும் மறக்க முடியாது. இவரது பந்தில் வாட்சன் கொடுத்த கேட்சை பிடிக்க தவறியதால் அவுஸ்ரேலியா வெற்றி பெற்றது. இல்லையென்றால் அந்த அணிக்கு கடினமானதாகியிருக்கும்.

பிரிஸ்பேனில் நடக்கும் போட்டியிலும் அதேபோல் ஆக்ரோஷமாக பந்து வீசுவேன் என்று அவுஸ்ரேலிய பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் வஹாப் ரியாஸ்.

பிரிஸ்பேன் டெஸ்ட் குறித்து வஹாப் ரியாஸ் மேலும் கூறுகையில் ‘‘வாட்சனுக்கு எதிராக நான் பந்து வீசியது, நான் விளையாடியதில் மிகவும் சிறந்த போட்டி. பிரிஸ்பேனில் முதல் டெஸ்டில் விளையாடுவது மிகவும் அற்புதமாக இருக்கும்.

உலகக்கோப்பையில் சிறப்பாக பந்து வீசியதுபோல் இந்த டெஸ்டிலும் பந்து வீச விரும்புகிறேன். உலகக்கோப்பையில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்த ஆசைப்பட்டேன். ஆனால் சில விக்கெட்டுக்கள் கிடைக்காமல் போனது. ஆனால் தற்போது அதிக விக்கெட் வீழ்த்துவதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நான் எதை சிறப்பாக செய்ய நினைத்தேனோ, அதை செய்வேன். நான் ஆக்ரோசமாக பந்து வீசுவேன். ஷார்ட் பந்து அதிக அளவில் வீசுவேன். இதுதான் எனது திட்டத்தில் ஒன்று. இதுவெல்லாம் ஆட்டத்தின் சூழ்நிலையைப் பொறுத்தது. சூழ்நிலைக்கு ஏற்ப எப்படி பந்து வீச வேண்டுமோ அப்படி பந்து வீசுவேன்.