இந்த நாட்டில் நிலவிய எந்த ஒரு அரசியல் சாசனங்களும் மக்களுடைய சம்மதத்துடன் அல்லது கூடுதலான அரசியல் கட்சிகளின் சம்மத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. இனி வரும் தினங்களில் நிறைவேற்றப்படவுள்ள அரசியல் சாசனம் சகல மக்களினதும் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும் என எதிர் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
சம்பூர்- நாவலடி பிரதான வீதிப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று(13) மக்களிடம் அதனைக் கையளிக்கும் நிகழ்வு நாவலடிச் சந்தியில் இடம்பெற்ற வேளை அதில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், இந்த நாட்டில் வாழும் சகல மக்கள் மத்தியிலும் ஒரு நல்லிணக்கம், புரிந்துணர்வு ஏற்பட்டிருப்பதனை நாங்கள் அவதானிக்கின்றோம். அதற்கு மக்கள் மத்தியில் சமாதானம், புரிந்துணர்வு, நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற தற்போதைய அரசின் கொள்கையே காரணமாகும்.
அத்துடன் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டியுள்ளது. நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வாழ வேண்டுமாக இருந்தால் தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்காது எல்லோரும் புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும்.
இந்த நாட்டில் வாழும் சகல மக்களும் இந்த நாட்டில்தான் வாழ்ந்தாக வேண்டும். வேறு வழியில்லை. அதுவே சிறந்த வழியாகும். நீண்டகால யுத்தத்தின் பின்னர் இந்த நல்லாட்சி சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது இந்த நாட்டில் தேசிய அரசாங்கம் ஒன்று இயங்கி வருகிறது.
அதில் இரண்டு பிரதான கட்சிகளும் அங்கம் வகிக்கின்றன. இதற்குள் சிறு குழப்பங்களை ஏற்படுத்த யாரும் முயலக் கூடாது. சிலர் அவ்வாறு முயற்சிக்கின்றனர். பாராளுமன்றம் அரசிலமைப்புச் சபையாக மாற்றப்பட்டுள்ளன. பல குளுக்கள் அமைக்கப்பட்டு கருமங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. நாங்கள் ஒரு அரசில் சாசனம் விரைவில் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கின்றோம்.
அந்த அரசியல் சாசனம் பாராளுமன்றத்தின் மூன்றில் இரண்டு அதிகப்படியான வாக்குகளால் நிறைவேற்றப்படும். அவ்வாறு நிறைவேற்றப்படும் அந்த சாசனம் ஒரு சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் சகல மக்களது விருப்புடன் நிறைவேற்றப்பட வேண்டும். அந்த அரசியல் சாசனம் சகல பிரிவு மக்களாலும் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்க வேண்டும். இந்த நாட்டின் பெரும் பான்மையினர், தமிழ் மக்கள் மற்றும் தமிழ் பேசும் முஸ்லிம் மக்கள் ஆகியோரால் அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.
அவ்வாறான ஒரு முயற்சியே இந்த நல்லாட்சி அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இது வரையில் நாட்டில் நிலவிய எந்த ஒரு அரசியல் சாசனங்களும் மக்களுடைய சம்மதத்துடன் அல்லது கூடுதலான அரசியல் கட்சிகளின் சம்மத்துடன் நிறைவேற்றப்பட்டிருக்கவில்லை. ஆகவே நிறைவேற்றப்படவுள்ள அரசியல் சாசனம் சகல மக்களினதும் அங்கீகாரத்துடன் நிறைவேற்றப்பட வேண்டும்.
இன்றைய நிகழ்வைப் பொறுத்த வரை இந்த சம்பூர் மக்களின் காணிகள் விடுவிக்கப்படுமா? என்ற கேள்வியே நிலவி வந்தது. நாட்டில் நிகழ்ந்த மாற்றம் காரணமாக மக்கள் மீளக் குடியமர்த்தப்படும் நிலமை ஏற்பட்டுள்ளது.
சம்பூரில் உள்ள மக்களின் காணிகள் தொழிற்சாலைகளுக்கு எடுக்கப்பட்ட நிலையில் அவை நிறுத்தப்பட்டு மக்களுக்கு வழங்கி அவர்கள் மீளக் குடியமர்த்தப்பட்டனர். இன்னும் அனல் மின் நிலயத்திற்கு ஒதுக்கிய காணி 500 ஏக்கர் மற்றும் அதற்கான நீர், நிலக்கரி கொண்டு செல்லும் பாதைகளுக்கென எடுக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளன. அதனால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்பொழுது பல காரணங்களால் அனல் மின் நிலயம் நிறுத்தப்பட்டிருக்கிறது. மக்களின் காணிகள் முற்றாக விடுவிக்கப்பட்டால் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படும்.
பலர் வாழ்வாதார தொழில் முயற்சிகள் பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் கோரி வருகின்றனர். அதனை அவர்கள் திருப்பித் தர வேண்டும் என விரும்புகின்றார்கள். அவற்றை நாம் தீர்த்து மக்களுக்கு வழங்க வேண்டியுள்ளது. அதனை ஏல்லோரும் இணைந்து அதனை நாம் தீரக்க வேண்டியுள்ளது.
மக்களுக்கு பல்வேறு தேவைகள் உள்ளன. அதனை அவர்கள் கடிதங்கள் மூலம் தந்துள்ளனர். 30 வருடங்களாக யுத்தம் நடைபெற்றது. அதன் மூலம் இலட்சக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டனர். அவ்வாறே வடகிழக்கில் இடம்பெயர்ந்த மக்கள் எல்லோரும் எல்லா மாவட்டங்களிலும் பூரணமாக தமது தேவைகள் நிறைவேற்றப்பட்டு மீளக் குடியமர்த்தப்படவில்லை.
அந்த வகையில் இங்குள்ள மக்களுக்கும் பல தேவைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. அவற்றைப் படிப்படியாக நிறைவேற்ற சம்மந்தப்பட்டோர் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என நாம் சந்திப்புக்களில் எல்லாம் வலியுறுத்தி வருகின்றோம். எனவே மக்களும் இவற்றைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பாராளமன்ற உறுப்பினர் கே.துரைரெட்ணசிங்கம், கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெனார்டோ, கிழக்கு மாகாண அமைச்சர்களான சி.தண்டாயுதபாணி, ஆரியவதி கலப்பதி, துரைராஜசிங்கம், மாகாண உறுப்பினர் கே.நாகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Eelamurasu Australia Online News Portal