அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கம்ப்யூட்டருக்கு நிகரான வேகத்தில் இயங்கும் என கூறப்படுகிறது.
மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 2017 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன. தனித்துவம் வாய்ந்த மொபைல் போன் ஒன்றை உருவாக்கி வருவதாக மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார். எனினும் இது சர்ஃபேஸ் போன் தானா அல்லது வேறு ஏதேனும் மாடல் போனா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.
தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் இது சர்ஃபேஸ் போன் தான் என்றும் இது ஒரு ஹைப்ரிட் போனாக இருக்கும் என்பது தெரியவந்திருக்கிறது. உலகம் அறிந்த முன்னணி பிராண்ட் ஆக இருக்கும் மைக்ரோசாஃப்ட் தான் தயாரித்து வரும் உயர் ரக ஸ்மார்ட்போன் ஆப்பிள் ஐபோன்களுக்கு போட்டியளிக்கும் விதமாக அமையும் என சந்தை வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் போன் குவால்காம் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் கொண்டிருக்கும் என்றும் இது வாடிக்கையாளர்களின் மொபைல் போன் பயன்பாட்டை அடியோடு மாற்றிவிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போன் அடுத்த ஆண்டு மைக்ரோசாஃப்ட் வெளியிட இருக்கும் விண்டோஸ் 10 ரெட்ஸ்டோன் 3 அப்டேட் கொண்டு இயங்கும்.
புதிய இயங்குதளம் என்பதால் இந்த ஸ்மார்ட்போன் அதிக சக்தி வாய்ந்ததாக இருப்பதோடு அதிநவீன சர்ஃபேஸ் போனாகவும் இருக்கும். விண்டோஸ் 10 இயங்குதளம் கொண்டிருப்பதால் இந்த ஸ்மார்ட்போனினை கணினியாக மாற்ற முடியும். இந்த ஸ்மார்ட்போனினை மானிட்டர் அல்லது தொலைக்காட்சியுடன் இணைத்தாலே போதுமானது. மைக்ரோசாஃப்ட் புதிய ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு நிச்சயம் வெளியிடப்பட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 5 சாதனத்துடன் வெளியிடப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய சர்ஃபேஸ் ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை 699 டாலர் (இந்திய மதிப்பில் ரூ.47,179) முதல் 1100 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.74,244) வரை இருக்கும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.