எமது இன தனித்துவத்தை வலியுறுத்திக்கொண்டே தேசியத்தை நோக்கி முன்னேற வேண்டும்

எமது இன தனித்துவத்தை வலியுறுத்திக்கொண்டே தேசியத்தை நோக்கி முன்னேற வேண்டும்.

சர்வோதய அமைப்பின் நல்லிணக்க வேலைத்திட்டத்தின் கீழ் நல்லிணக்கம் மீதான வடக்கு, கிழக்கு மக்களின் விரிந்துரைகள் எதிர்பார்ப்புகள் குறித்த பிரகடனத்தை வெளியிடும் விசேட வைபவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் வீரசிங்கம் மண்டபத்தில் ஆரம்பமாகியது. இதில் முதலமைச்சரின் பிரதிநிதியாகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் முதலமைச்சரின் உரையை வாசித்துள்ளார்.

அந்த உரையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

சர்வோதய சபைகள் கூடி தேசிய நல்லிணக்கத்தினை தேடி தரும் சந்தர்ப்பம் இது. உங்கள் கலந்துரையாடல்களின்பொழுது சில அடிப்படை விடயங்களில் ஒற்றுமை கண்டுள்ளதாக அறியப்பெற்றுள்ளேன். அவையாவன தேசிய நல்லிணக்கத்திற்கான செயன்முறை ஒன்று அவசியம். இனவாத அடிப்படியில் அல்லாமல் சகல மக்களையும் ஒன்றிணைத்து செயற்படும் கலாச்சாரம் அவசியம்; அரசியலமைப்பில் திருத்தம் ஒன்று அவசியம்; கடந்த கால குற்றங்களுக்கு பக்கசார்பற்ற நீதி விசாரணை அவசியம்; பாதிக்கப்படடவர்களின் வாழ்க்கையினை மறுசீரமைப்பது அவசியம்; மக்கள் பங்கெடுப்புடன் விரைவான அபிவிருத்தி அவசியம்; காணாமல் போனோரை துரிதமாக கண்டு பிடித்தல் அவசியம்; சமூகச் சீரழிவை கட்டுப்படுத்த துரித வேலை திட்டம் ஒன்றினை ஆரம்பித்து அமுல்படுத்துதல் அவசியம், அரச குழுக்கள் நிறுவனர் ஆகியவற்றில் சர்வ இனங்களையும் உள்ளடக்கல் அவசியம், மரணித்த உறவுகளை நினைவுகூர சகலருக்கும் சம வாய்ப்பு வழங்குதல் அவசியம், பாடசாலை பாடவிதானங்களில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த கூடிய பாடங்களை உள்ளடக்கல் அவசியம்; மக்கள் மத்தியில் நல்லிணக்கம் சம்பந்தமான கருத்துக்களை பரப்புதல் அவசியம்; இன, மத வேறுபாடுகளை களைந்து இலங்கை பிரைஜைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு தலைமைத்துவம் அவசியம்; போதிய அரசியல் கலாசாரம் ஒன்றினை உருவாக்குவதே அவசியம்; ஆகிய 16 விடயங்கள் எம்மால் கவனத்தில் எடுக்கப்பட வேண்டியவையே.

இவற்றினை முன்மொழிந்தவர்களுக்கு எமது வாழ்த்துக்கள். உங்கள் சிந்தனைகளுக்கும் எங்கள் சிந்தனைகளுக்கும் இடையில் பாரிய வேற்றுமைகள் இல்லை. சில விடயங்களை நாங்கள் சற்று வித்தியாசமாக பகிருவோம் என்பதை வலியுறுத்தி கூறுகிறோம். இன ரீதியான சிந்தனைகளை தவிர்த்து தேசிய ரீதியாக சிந்திக்க வேண்டும் என்றும் அதற்கான கலாசாரம் உண்டாக்கப்படவேண்டும் எனவும் நீங்கள் முடிவெடுத்துள்ளீர்கள்.

உங்கள் முடிவு 1919ம் ஆண்டு பொன்னம்பலம் அருணாச்சலம் எடுத்த முடிவை எட்டியுள்ளது. அவரும் நாம் யாவரும் இலங்கையர் என்ற சிந்தனையில் செயற்படவேண்டும் என்ற கருத்தை கொண்டிருந்தார். அதனால் தான் பிரிந்திருந்த சமூகங்களை ஒன்றிணைக்கும் நோக்குடன் இலங்கை சீர்திருத்த கழகம், இலங்கை தேசிய சங்கம், யாழ்ப்பாண சங்கம் ஆகியவற்றை ஒன்றிணைத்து இலங்கை தேசிய காங்கிரஸ் என்ற சங்கத்தை அமைத்தார்.

அவர் மனித குலத்தின் ஒற்றுமையும் சகோரத்துவத்தையும் மதித்தார். அந்த காலத்தில் ஆங்கிலம் சகல இன படித்த மக்களாலும் பேசப்பட்டு வந்தது. இதனால் ஆங்கில மொழி சகலரையும் ஒன்றிணைத்தது. இலங்கை மக்களின் அரசியல் ரீதியான கோரிக்கைகளில் ஒற்றுமை இருந்தால் ஆங்கில ஆட்சியாளர்கள் எமக்கு தன்னாட்சி மூலமான ஆட்சி கிடைக்க முடியும் என கூறி இருந்தார்கள். அதனால் தான் மிகவும் பேராசைபட்டு ஒற்றுமை உருவாக்கினார்  சேர் பொன் அருணாச்சலம். இன ரீதியாக செயற்பட்ட யாழ்ப்பாண சங்கத்தை இனரீதியான சடடசபை பிரதிநித்துவத்திற்கு பதிலாக பிரதேச ரீதியான பிரநிதித்துவத்தினை ஏற்க செய்தார்.

அனால் ஒரு விடயம் சேர் பொன்னம்பலம் அருணாச்சலத்திற்கு புரிந்திருக்கவில்லை. இலங்கையின் ஐக்கியத்தினை விரும்பினாரே ஒழிய சில இனத்தவரின் உள்ளக்கிடைக்கைகளை புரிந்து கொள்ளவில்லை.

கொழும்பில் அப்போது பெருமளவு தமிழர்கள் வாழ்ந்தார்கள். கொழும்பில் தமிழ் பேசும் மக்களுக்கு என்று ஒரு ஆசனம் வழங்குவதாக அப்போது உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆயினும் ஆங்கிலேயர் சுயாட்சிக்கு ஒத்துக்கொண்ட போதே தமது வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்ட்னர். இதை அருணாசலம் எதிர் பார்க்கவில்லை அப்போதே தமிழ் மக்கள் அரசியல் அனாதைகளாக்கப்பட்டுவிட்டார்கள்.

எனவே இனரீதியான பிரதிநிதித்துவத்தையும் பிரதேச ரீதியான பிரதிநிதித்துவத்தையும் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இன ரீதியாக சிந்திப்பது தவறு என கூறப்பட்டு வந்தது. அவ்வாறான இனரீதியான சிந்திப்பு இல்லை என்றால் சிறிய இனம் பெரிய இனத்தினுள் சங்கமம் ஆகிவிடும் என்பதை நாங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

இனவாத அடிப்படையை தவிருங்கள் எனும் கூறும் போது பெருன்பான்மை மக்களுக்கு எமது உரித்துக்களை தரைவார்த்து கொடுப்பது போல் ஆகிவிடுகிறது. சிறுபான்மையினரின் உரிமைகளை மதித்து அவர்களின் அடிப்படை உரிமைகளை வழங்கிய பின்னரே தேசிய ரீதியில் நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்க வரவேண்டும். இல்லை என்றால் நாங்கள் பெருன்பான்மை சமூகத்தின் ஒரு அங்கமாக மாறிவிடுவோம்.

டான் யுவான் தர்மபாலா என்ற அரசனுக்கு முடி சூட்டுவதற்காக மதுரையில் இருந்து 400 வருடங்களுக்கு முன்னர் வந்த தமிழர்கள் சிங்கள இடங்களாகிய அம்பலன்கொடை, கல்லுப்பிட்டிய போன்ற இடங்களில் குடியேறினார்கள். காலப்போக்கில் அவர்களும் சிங்களவர்களாகவே மாறிவிட்டார்கள். மலைநாடுகளில் இருந்து வேறு இடங்களில் குடியேறியவர்கள் தங்களை சிங்களவர்களாகவே பெயர் மாற்றி கொண்டார்கள்.

தென்னாபிரிக்காவில் அரசியல் பிணக்குகளை தீர்த்த பின்னரே நல்லிணக்க முயட்சிகளில் இறங்கினார்கள். அரசியல் ரீதியான உரிமைகளும் அடையாளங்களும் உத்தரவாதப்படுத்தபட்ட பின்னரே தேசிய ரீதியில் செயலாற்ற வேண்டும். அதனால் தான் அரசியல் முன்மொழிவுக்களை சமஷ்டியாக முன்வைக்கிறோம்.

வடக்கு கிழக்கு தமிழ் பேசும் கிராமங்களாகும். தமிழினை சட்டபடி ஏற்று கொண்டால் தமிழ் வாழும் தமிழர்கள் வாழ்வார்கள். தமிழர்கள் கலாசாரம் வளரும். அவ்வாறு இல்லை என்றால் நாம் பெரும்பான்மை மொழி கலை காலாசாரங்களுக்குள் அமுக்கபட்டுவிடுவோ என்ன அச்சம் கொள்ள தோணுகிறது. அவ்வாறு அமிழ்ந்துவிட வைப்பது இனப் படுகொலைக்கு ஒப்பானது என சட்டம் சொல்லுகிறது.

எமது இன தனித்துவத்தை வலியுறுத்திக்கொண்டே தேசியத்தை நோக்கி முன்னேற வேண்டும். சிறுபான்மையினர் தமக்கு அங்கீகாரம் கிடைக்க முன்னர் தேசிய ரீதியாக செயற்பட்டால் அவர்கள் பெருன்பான்மை இனத்திற்குள் இரண்டற கலந்து விடுவார்கள். கிறிஸ்துக்கு முன்னரே வடக்கு கிழக்கில் பேசப்பட்டு வந்த தமிழ் மொழியினை கொச்சைபடுத்த வேண்டுமா என்ன நீங்களே சிந்தியுங்கள்.