ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் டி வி்ல்லியர்ஸ், விராட் கோலி, டேவிட் வார்னர் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
சமீபத்தில் அவுஸ்ரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அவுஸ்ரேலியாவில் நடைபெற்றது. இதில் அவுஸ்ரேலியா 3-0 என நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது.
இந்த தொடரில் டேவிட் வார்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடைசி இரண்டு போட்டியிலும் சதம் அடித்து அசத்தினார். 3 போட்டியில் 299 ரன்கள் குவித்தார்.
இதனால் இன்று வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தரவரிசையில் வார்னர் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நேற்று(10) வெளியிடப்பட்டுள்ள பட்டியலின்படி தென்ஆப்பிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் 861 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். 13 புள்ளிகள் பின்தங்கிய நிலையில் விராட் கோலி (848) 2-வது இடத்தில் உள்ளார். டேவிட் வார்னர் 786 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார். விராட் கோலியைவிட 62 புள்ளிகள்தான் பின்தங்கியுள்ளார்.
விரைவில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 15-ந்திகதி தொடங்குகிறது.
அதேபோல் பாகிஸ்தான் – அவுஸ்ரேலியா அணிகளுக்கு இடையில் ஜனவரி மாதம் 13-ந்திகதி முதல் 26-ந்திகதி வரை ஐந்து ஒருநாள் போட்டி கொண்ட தொடர் நடைபெற இருக்கிறது. அதேவேளையில் தென்ஆப்பிரிக்கா – இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்து ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 28-ந்திகதி முதல் பிப்ரவரி 10-ந்திகதி வரை நடக்க இருக்கிறது.
இந்த மூன்று தொடர்களிலும் யார் அதிக அளவு ஆதிக்கம் செலுத்துகிறார்களோ, அவர்கள் ஒருநாள் கிரிக்கெட் தரவரிசையில் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது. டி20 கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி முதல் இடத்திலும், டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் விராட் கோலி 3-வது இடத்திலும் உள்ளார்.