குருநாதர் எம்.ஜி.ஆரை விஞ்சிய ஜெயலலிதா

அரசியல் துறையில் தன்னுடைய குருநாதரான எம்.ஜி.ஆரை, மறைந்த முதல்வர் ஜெயலலிதா விஞ்சி விட்டார் என்று நடிகர் ரஜினி காந்த் கூறினார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை கோடம்பாக்கத்தில் நினைவு அஞ்சலி கூட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவுடன் சேர்த்து மறைந்த பத்திரிக்கையாளர் சோ ராமசாமிக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், மூத்த நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால் உள்ளிட்டோர் முன்னின்று நடத்தினர். அப்போது ரஜினிகாந்த் ஜெயலலிதா பற்றிய தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது:-கார்பன் வெப்பத்தாலும், அழுத்தத்தாலும் காலப்போக்கில் வைரமாக மாறும். அதுபோல், ஜெயலலிதாவும் பல்வேறு போராட்டங்களால் வைரமாக மாற்றப்பட்டார். பொதுவாழ்க்கையில் ஜெயலலிதா வைரம் போன்றவர்.

துணிச்சல் எதிர்நீச்சல் போன்றவற்றை ஜெயலலிதாவிடம் இருந்து கற்க வேண்டும். ஆணாதிக்கம் மிகுந்த சமுதாயத்தில் தன்னுடைய முயற்சியால் முன்னேறி வந்தவர்.

1996 தேர்தலில் நான் பேசிய அரசியல் பேச்சால் அவர் மனம் துன்பப்பட்டார். இருப்பினும், என்னுடைய அழைப்பை ஏற்று மகளின் திருமணத்திற்கு வந்தார்.

அவரைப் போல் சோதனைகளை சாதனையாக்கியவர் யாரும் இல்லை. இது பெண்களுக்கு மட்டுமல்ல எல்லோருக்கும் முன் உதாரணம். பொதுவாழ்க்கைக்காக தனது சொந்த வாழ்க்கையை தியாகம் செய்தவர். இவ்வாறு அவர் பேசினார்.