தமிழக முதல்வராக இருந்து மறைந்த ஜெயலலிதாவிற்கு தமிழகம் மட்டும் அல்லாமல் நாட்டில் பல மாநிலங்களில் அஞ்சலி செலுத்திய நிலையில்,
கடல் கடந்து வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களும் அஞ்சலி மற்றும் இரங்கல் கூட்டம் நடத்திவருகின்றனர்.
தமிழ் கலை மற்றும் பண்பாட்டு கழகம் சார்பில் அவுஸ்ரேலியாவின் சிட்னி நகரில் உள்ள இந்திய தூதரக அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.
இதில் இந்திய தூதரக அதிகாரி வன்லால் வானா மற்றும் அமைப்பின் நிர்வாகிகள் அனகன் பாபு, கர்ணன் சிதம்பரபாரதி, நாராயணன் மற்றும் சிட்னி வாழ் தமிழர்களுடன் பிற மாநிலங்களை சேர்ந்த இந்தியர்களும்,இலங்கை மற்றும் மலேசியத் தமிழர்களும் கலந்துகொண்டு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை பகிர்ந்துகொண்டனர். கூட்டத்தில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழகத்தில் இருந்து வந்திருந்த இசக்கி ராஜா இரங்கற்பா இயற்றி வாசித்தார். ஜெ.,வின் உருவப்படத்திற்கு மாலைஅணிவித்து விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.
அபுதாபி தமிழ் அமைப்புகள் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தின. அபுதாபியில் நடந்த இந்த இரங்கல் கூட்டத்திற்கு அபுதாபி தமிழ்ச் சங்கத் தலைவர் ரெஜினால்ட் தலைமை தாங்கினார்.
இந்திய கலாச்சார மையத்தின் தலைவர் தாமஸ் வர்கீஸ், அய்மான் சங்கத் தலைவர் அதிரை ஷாஹுல் ஹமீது , செய்யது ஜாபர், காயிதே மில்லத் பேரவை செயலாளர் லால்பேட்டை அப்துல் ரகுமான்,
அய்மான் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஏ.சி ஹமீது , தமுமுக செயலாளர் ஷேக் தாவூத், ஸ்ரீரங்கம் கார்த்திக் சுப்பையர், கவியன்பன் கலாம், இம்தியாஸ் அகமது,
காதர் மீரான், சந்திரன், தனஞ்செயன், சர்புதீன், அன்சாரி, ரிபாயி, ஷபீக் அகமது ஆகியோர் பேசினர். ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.