கேணல் கிட்டு வெற்றிக் கிண்ணப் போட்டிகள் – 2022 – பேர்த்

வங்க கடலில் காவியமான தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதி கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் 29 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு தமிழ் தேசிய கலை பண்பாட்டுப் பேரவை மற்றும் அவுஸ்திரேலிய தமிழர் பேரவை இணைந்து நடாத்திய வெற்றிக்கிண்ண போட்டியில் கால்பந்தாட்டம், மட்டைப்பந்தாட்டம் மற்றும் கரப்பந்தாட்டம் உட்பட பல விளையாட்டுகள் 09/01/2022 அன்று சிறப்பாக இடம் பெற்றன.

காலை 8:00 மணிக்கு ஆரம்பமான நிகழ்வில் அவுஸ்திரேலிய தேசியக் கொடியை திரு. நந்தன் அவர்கள் ஏற்றிவைக்க, அவுஸ்திரேலிய பூர்வீக மக்களின் கொடியை திரு. பிரதீபன் அவர்களும் தமிழீழத் தேசியக் கொடியினை திரு. அமுதன் அவர்களும் ஏற்றி வைத்தனர். தேசியக்கொடிகள் ஏற்றப்பட்டதை தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது.

தொடர்ந்து ஈகைச்சுடரினை திரு.விமல் அவர்கள் ஏற்றி வைக்க கேணல் கிட்டு உட்பட பத்து மாவீரர்களது திருவுருவப்படத்திற்கு நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மலர்வணக்கம் செலுத்தினர்.

மட்டைப்பந்தாட்டத்தை தொடந்து மதிய நேர இடைவேளையில் போட்டியில் சிறுவர்கள் பெரியவர்களுக்கான போட்டிகளில் கலந்து கொண்டவர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது. போட்டி நாளுக்கான தண்ணீர்ப் பந்தலும் ஏற்பாட்டாளர்களினால் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.

இடைவேளையை தொடர்ந்து மாலை 8.00 மணிவரை போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் மட்டைப்பந்தாட்டத்தில் முதல் இடத்தினை வேலவன் அணியும் இரண்டாம் இடத்தினை நாயகன் அணியும் தட்டிச் சென்றன. ஆட்ட நாயகனாக திரு. கிஷாந்தன் அவர்களும், தொடர் நாயகனாக திரு. பில் கிளிங்ரன் அவர்களும் தெரிவுசெய்யப்பட்டனர்.

சிறுவர்களுக்கான கால் பந்தாட்டத்தில் முதல் இடத்தினை ஜீவா அணியும் இரண்டாம் இடத்தினை விக்ரர் அணியும் தட்டிச்சென்றன. பெரியவர்களுக்கான கால்பந்தாட்டப் போட்டியில் முதல் இடத்தினை வாகை அணியும் இரண்டாம் இடத்தினை காந்தள் அணியும் தட்டிச்சென்றன. கால்பந்தாட்ட ஆட்ட நாயகனாக திரு. பிரபாநந்தன் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்.

கரப்பந்து போட்டியில் முதல் இடத்தினை சங்கர் அணியும் இரண்டாம் இடத்தினை மாலதி அணியும் தட்டிச்சென்றன. கரப்பந்தாட்டத்தில் ஆட்ட நாயகனாக திரு. இளங்கீரன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்.

போட்டி இடைவேளைகளில் மகளீர் கலந்ததுகொண்ட நட்பு ரீதியான மட்டைப்பந்து மற்றும் கரப்பந்தாட்டம் என்பனவும் நடைபெற்றது.

போட்டிகளில் பதின்மூன்றிற்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். ஒருநாள் விளையாட்டு நிகழ்வு ஏராளமான பார்வையாளர்களினால் உற்சாகப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாலை 8:00மணிக்கு தேசியக் கொடிகள் இறக்கப்பட்டதை தொடர்ந்து நிகழ்வு இனிதே நிறைவடைந்தது.