தென்னாபிரிக்க நிறவெறி நிறுவனக் கட்டமைப்பிற்கெதிராக, கறுப்பின அடக்குமுறைக்கெதிராக முற்போக்குச் சிந்தனையோடு போராடிய ஒரு விடுதலைப் போராளி பேராயர் டெஸ்மண்ட் டுட்டுவின் பயணம் நிறைவடைந்தமையிட்டு வடக்கு-கிழக்கின் நீதிக்கும் அமைதிக்குமான குருக்கள், துறவிகள் அமைப்பு ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பில் அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
நிறுவன மயப்படுத்தப்பட்ட நிறவெறி அடக்குமுறைக்கெதிராக 1970 களிலிருந்து அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களின் குரலாகவும், அம்மக்களோடு பயணித்து மக்களின் விடுதலைக்காக உழைத்து ‘வானவில் தேசமான’ தென் ஆபிரிக்காவை கட்டியெழுப்பிய தேசப்பிதாக்களில் ஒருவரான டுட்டுவின் மறைவு நிரப்பீடு செய்யப்படமுடியாதது.
தனது பட்டறிவின் மூலம் அடக்கப்பட்ட மக்களின் அரசியல் வேணவாவை விளங்கிக் கொண்டு அதற்காகவே கொள்கை ரீதியான நிலை எடுத்து தன்னை அடக்குமுறைக்குட்படுத்தப்பட்ட மக்களின் ஒரு பொதுப்படிமமாக கட்டமைத்துக் கொண்டவர்
டுட்டுவின் அரசியல், அடக்குமுறைக்கெதிராக பல்வகை உத்திகளை விடுதலையை நோக்கிப் பயணிப்பதற்கு கையாண்டாலும் அவரது விமர்சனப் பகுப்பாய்வு நகைச்சுவையும், வன்முறையற்ற அணுகுமுறையும் மிகவும் முக்கியமானது.
அதே உத்தியை விடுதலைக்குப் பின்னர் தென்னாபிரக்க தலைவர்கள் ஊழல்களில் சிக்கிய போதும் கையாண்டார் என்பது அவரது தலைமைத்துவத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.
நிறவெறி, கிட்லரின் நாசிசத்திற்கு சமமானது எனக் குறிப்பிட்டு, ஐ.நா.சபையில் (1988) நிறவெறிக்கெதிராக தண்டனை அமுல்படுத்தாத மேற்குலக அரசியல்வாதிகளை நிறவெறியவர்கள் என சாடியதையும் வரலாறு நினைவு கூரும். பாதிக்கப்பட்ட-மக்கள்-மைய நீதிப் பொறிமுறை அணுகுமுறையே எதிர்காலத்தில் மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் என்பது அவரது பட்டறிவாக இருந்ததை அவருடைய கருத்துக்களிலிருந்து அவதானிக்க முடிகின்றது.
சர்வதேச மூதவையின் தலைவராக இருந்த போது 2013 நவம்பரில் பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தமுடியாது எனக் குரல் கொடுத்தவர்களில் டெஸ்மன் டூட்டுவும் ஒருவர். தமிழ்த்தேசிய நோக்கில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் என்ன சொல்லுகிறார்கள் என்பதைப் பொறுத்தே ‘தான் வழிநடத்தப்பட விரும்புவதாக’ குறிப்பிட்டு அவ்வாறே ஏனைய அரசாங்க தலைவர்களும் பொதுநலவாய மாநாட்டிற்கு போகக் கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து.
பொதுநலவாய மாநாடு இலங்கையில் நடத்தப்படக்கூடாது என்ற பகிஸ்கரிப்புக்கு சர்வதேச மூதவை ஊடாக வலுச் சேர்த்ததையும் தமிழினம் ஒரு போதும் மறக்காது. ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் ‘இலங்கை அரசாங்கம் நேர்மையாக செயற்படவில்லையெனில் சர்வதேச சமூகம் தன்னாலான முழு முயற்சிகளையும் முடுக்கி விட வேண்டும்’ என ஆணித்தரமாக இடித்துரைத்தவர்.’அவ்வுத்திகளில் பொதுநலவாய மாநாட்டு பகிஸ்கரிப்பும் ஒரு தந்திரோபாயம்’ எனக் குறிப்பிட்டார்.
நடுநிலை அரசியலில் நம்பிக்கை இழந்த அவர் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பான நிலைப்பாட்டில் உறுதியாயிருந்தார் தமிழினப்படுகொலைக்கு சுயாதீன சர்வதேச விசாரணை மூலமே நீதி கிடைக்க முடியும் என்ற ஈழத்தமிழரின் கோரிக்கைக்கு வலுச் சேர்த்ததையும் தமிழினம் நினைவுகூரும்.
குறுகிய வரையறைகளைக் கடந்து மதத்திற்கு அப்பால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி கிடைக்க வேண்டும் என்பதில் உண்மையாகவும் நேர்மையாகவும் ஈழத் தமிழருக்காக செயற்பட்ட ஒரு நண்பரை தமிழினம் இழந்து நிற்கின்றது.
ஈழத்தமிழ் மக்களின் அரசியல் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தது மட்டுமல்லாது சர்வதேச அரங்கில் அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தமையை நாம் நன்றியுடன் நினைவு கூருகின்றோம்.
அரசியல் தலைமைத்துவ வெறுமையில் அடக்குமுறைக்குட்பட்டோரின் குரலாக எழுந்த ஒரு குரல் மௌனித்துப் போய்விட்டது என்றுள்ளது.
Eelamurasu Australia Online News Portal