ஆ‌ஷஸ் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு கொரோனா

ஆ‌ஷஸ் தொடரில் பங்கேற்று இருந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டி கொண்ட ஆ‌ஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் 3 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வென்று தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகளும் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி வருகிற ஜனவரி 5-ந் தேதி சிட்னியில் தொடங்குகிறது.
இந்த நிலையில் ஆ‌ஷஸ் தொடரில் பங்கேற்று இருந்த ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.
டிராவிஸ் ஹெட்
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:-
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் டிராவிஸ் ஹெட்டுக்கு பரிசோனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அவருக்கு அறிகுறி ஏதும் இல்லை. அவர் அடுத்த 7 நாட்கள் மெல்போர்னில் தன்னை தனிமைப்படுத்தி கொள்வார்.
ஆஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. டிராவிஸ் ஹெட் விரைவில் குணமடைந்து 5-வது டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்துள்ளது.
4-வது டெஸ்டில் டிராவிஸ் ஹெட் விலகலை அடுத்து ஆஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ், நிக் மேடிசன், ஜோஷ் இங்கீஸ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.