Home / செய்திமுரசு / பிரபாகரன் இருந்தால் வட-கிழக்கை வழங்கிவிட்டு  டொலர்களை தருமாறு அரசாங்கம் கோரியிருக்கும்!

பிரபாகரன் இருந்தால் வட-கிழக்கை வழங்கிவிட்டு  டொலர்களை தருமாறு அரசாங்கம் கோரியிருக்கும்!

பிரபாகரன் இப்போது உயிருடன் இருந்திருந்தால் அரசாங்கம் அவரிடம் வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கையளித்துவிட்டு அதற்குப் பதிலாக டொலர்களை வழங்குமாறு கோரியிருக்கும் என முன்னாள் அமைச்சரும் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினருமான விஜித் விஜயமுனி சொய்சா சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு கூறிய அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தற்போது கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகிய இரு அமெரிக்கர்களும் இணைந்துதான் நாட்டை நிர்வகிக்கின்றார்கள். மாறாக பிரதமரிடம் பெருமளவிற்கு அதிகாரங்கள் இருப்பதுபோல் தெரியவில்லை. அதனால்தான் அவர் திருப்பதிக்குச் சென்றுவந்தாரோ தெரியவில்லை.

இப்போது நாடளாவிய ரீதியில் பெறுமதிவாய்ந்த பல்வேறு இடங்களும் சொத்துக்களும் வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதுடன் கொழும்பில் முக்கியமான 19 இடங்களை விற்பனை செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதன்பின்னர் ஜனாதிபதி மாளிகை, அலரிமாளிகை மற்றும் பாராளுமன்றம் ஆகிய மூன்றுமே நாட்டில் எஞ்சியிருக்கும்.

இதேவ‍ேளை பால்மாவின் விலை அதிகரிக்கப்பட்டிருக்கின்றது. பால்மா மாத்திரமன்றி அனைத்து அத்தியாவசியப்பொருட்களினதும் விலைகள் பெருமளவால் அதிகரிக்கப்பட்டிருப்பதுடன் அவற்றில் பலவற்றுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கின்றது.

முன்னர் வெளிநாடுகளால் வழங்கப்படும் நிதியுதவிகள், பாரிய அபிவிருத்தி செயற்திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் நிதி ஆகியவற்றிலேயே மோசடி செய்தார்கள். எனினும் தற்போது அவை இல்லாத காரணத்தினால் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மக்களின் வயிற்றில் அடித்து, அதனூடாகவே அவர்கள் சம்பாதிக்கின்றார்கள்
சிறுநீரகநோய்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக இரசாயன உர இறக்குமதியை நிறுத்துவதாகக் கூறினார்கள். ஆனால் இப்போது உண்பதற்கு உணவின்றி உயிரிழக்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள்.

இவ்வாறானதொரு பின்னணியில் இன்னும் இருவருடங்கள் தற்போதைய அரசாங்கம் ஆட்சிப்பொறுப்பிலிருந்தால், மக்களின் குருதியை எடுத்து விற்பனை செய்வதற்குக்கூட அது தயங்காது.

ஆகவே இந்த அரசாங்கத்தைப் பதவி கவிழ்ப்பதற்கு நாட்டுமக்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது

தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதில் அரசாங்கத்திற்கு நெருக்கமானவர்களுக்கு நியமனங்கள் வழங்கப்பட்டிருப்பதுடன் இராணுவத்தலையீடும் அதிகரித்துள்ளது.

எனவே இவற்றை சீர்செய்வதுடன் தேர்தல்முறை மாற்றத்துடன் தேர்தலொன்றுக்குச் செல்லவேண்டும் என்றார்.

About குமரன்

Check Also

அமெரிக்காவில் 2 லட்சம் குழந்தைகள் கொரோனாவால் பாதிப்பு

அமெரிக்காவில் கடந்த வாரம் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கை 1 லட்சத்து 99 ஆயிரமாக உயர்ந்துள்ளது. ...