மத்திய வங்கியின் கையிருப்பு அதிகரிப்பதற்கு அரசாங்கத்துக்கு டொலர் எந்த அடிப்படையில் கிடைக்கப்பெற்றது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷடி சில்வா தெரிவித்தார்.
மத்திய வங்கியின் கையிருப்பு 3.1பில்லியன் டொலர்களாக உயர்வடைந்திருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்
அப்படியாயின் அந்த நிதி எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பதை பாராளுமன்ற உறுப்பினர்கள் என்றவகையில் எமக்கு தெரியப்படுத்த அவர்கள் கடமைப்பட்டிருக்கின்றார்கள்
ஆனால் இந்த பணம் எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்ற விடயத்தை மறைப்பதற்கு முயற்சிக்கின்றனர். எதற்காக மறைக்கவேண்டும் என கேட்கின்றேன். உண்மையில் மத்திய வங்கி தெரிவிப்பதுபோல் பணம் கிடைத்திருந்தால் அதனை எங்கிருந்து கிடைக்கப்பெற்றது என்பதை பகிரங்கமாக தெரிவிக்க முடியும்.
வருடத்தின் இறுதியில் இருப்பதால், மத்திய வங்கி ஆளுநர் என்றவகையில் எம்மிடம் எந்தளவு பணம் இருக்கின்றது என்பதை காண்பிப்பதற்கே அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார் என்றே நினைக்கின்றேன்.
உண்மையில் எமது கையிருப்பு அதிகரித்திருந்தால், துறைமுகத்தில் தேங்கிக்கொண்டிருக்கும் அத்தியாவசிய உணவுப்பொருட்கள் அடங்கிய ஆயிரத்து 500 கொள்களன்கள் விடுவிக்கப்பட வேண்டும். ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெறவேண்டும். அவ்வாறு இடம்பெற்றால், மத்திய வங்கி தெரிவிப்பதுபோல் டொலர் கிடைத்திருக்கின்றதை ஏற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்
Eelamurasu Australia Online News Portal