ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா!

எதிர்வரும்  பெப்ரவரி வந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஐயாவிற்கு 89 வயது கழிந்து, தனது 90வது ஆண்டில் அவர் அடியெடுத்து வைக்க இருக்கிறார். பிரித்தானிய முடியின் கீழான கொலனியாக இலங்கை இருந்தபோது பிறந்தவர் இராஜவரோதயம் சம்பந்தன். டொனமூர் அரசியலமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பிறந்தவர். இலங்கை 1948ல் சுதந்திரம் பெறும் போது அவருக்கு 15 வயது கழிய ஒரு நாள் குறைவு.

இலங்கைச் சட்டக் கல்லூரியில் கற்று சட்டத்தரணியாக பணிபுரிந்த அவர், 1977ம் ஆண்டு ​பொதுத் தேர்தலில், தனது 44 ஆவது வயதில், திருகோணமலையில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு பாராளுமன்றம் செல்கிறார். 1983 செப்டெம்பரில் பாராளுமன்ற ஆசனத்தை இழந்த இரா. சம்பந்தன், அதன் பின்னர் 1989, மற்றும் 1994 தேர்தல்களில் தோல்வியடைந்திருந்தார்.

1994 ஆம் ஆண்டு தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணி சார்பாகப் போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்த சட்டத்தரணி அருணாசலம் தங்கத்துரை, 1997 ஜூலை 5 ஆம் திகதி திருகோணமலை ஶ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி நிகழ்வில் கலந்துகொண்டு வௌியேறும் போது அடையாளமறியா நபர்களினால் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகள்தான் படுகொலை செய்தார்கள் என்று பொலிஸ் விசாரணைகள் குறிப்பிட்டிருந்தன. அருணாசலம் தங்கத்துரையின் படுகொலையின் பின், ஏற்பட்ட வெற்றிடத்திற்கு 1997ஆம் ஆண்டு சம்பந்தன் நியமிக்கப்பட்டார். 1983ஆம் ஆண்டு பாராளுமன்ற ஆசனத்தை இழந்த சம்பந்தன் 1997 ஆம் ஏறத்தாழ 14 ஆண்டுகளின் பின் பாராளுமன்றம் ஏகினார். மறுபடியும் 2000ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி கண்ட சம்பந்தன், 2001ஆம் ஆண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு, அதன் சார்பில் பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.

அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் திருகோணமலை மாவட்டத்தில் 2004, 2010, 2015, மற்றும் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார். 2015 – டிசெம்பர் 2018 வரை எதிர்க்கட்சித் தலைவராக இருந்ததன் மூலம், அந்தப் பதவியை வகித்த இரண்டாவது தமிழர் என்ற பெருமையையும் பெற்றுக்கொண்டார். தனது 89 வருட வாழ்வில் 29 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்திருக்கிறார் இரா. சம்பந்தன்.

இலங்கைத் தமிழர் அரசியல் வரலாற்றின் முக்கிய காலகட்டங்கள், திருப்பு முனைகள் என்பவற்றை நேரடியாகப் பார்த்த, அதில் பலவற்றில் பங்காளியாக இருந்த பழுத்த அனுபவம் மிக்க தலைவர் இரா. சம்பந்தன் என்பதில் எவருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதுபோலவே பாராளுமன்ற மரபுகளை, நடைமுறைகளை நன்கறிந்த, அனுபவம் மிக்க சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களுள் இரா. சம்பந்தன் முக்கியமானவர் என்பதிலும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இன்று கூட அவர் பாராளுமன்றத்தில் எழுந்து உரையாற்றினால், அந்த உரை பெருமளவிற்கு அமைதியாக கேட்கப்படுமளவிற்கு மதிப்பு மிக்க மனிதராகவே அவர் பார்க்கப்படுகிறார். அண்மை ஆண்டுகளில் அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றிய சந்தர்ப்பங்கள் குறைவு என்றாலும், அவர் ஆற்றியிருந்த ஒரு சில உரைகள் கூட ஆழமானதாகவும், அர்த்தபுஷ்டியுள்ளவையாகவும் அமைந்திருந்தன.

அவரது சில பாராளுமன்ற உரைகள், இலங்கைப் பாராளுமன்றம் கண்ட ஆகச் சிறந்த உரைகள் பட்டியலில் நிச்சயம் இடம்பெறும் தகை மிக்கவை. ஆனால் தற்போது அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதில்லை என்பது மட்டுமல்ல, பாராளுமன்றத்திற்கு செல்வது கூட மிகக் குறைவு என்பது வருத்தத்திற்குரிய விடயமாக இருக்கிறது.

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களின் பங்களிப்பை அளவிடும் சுயாதீன இணையத்தளமான மந்த்ரி.எல்கே பங்களிப்பு அளவீடுகளின் படி சம்பந்தன் அவர்களை 225 உறுப்பினர்களில், 219வது இடத்தில் தரமிட்டுள்ளது. இந்த முறை சம்பந்தன் அவர்கள் வெறும் 3 முறையே பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றுள்ளதாக அந்த இணையத்தளம் குறிப்பிடுகிறது.

கொவிட்-19 அபாயம், அவரது வயது மூப்பு, உடல்நிலை என சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காததற்கு பல நியாயங்களும், காரணகாரியங்களும் சொல்லப்படலாம். அவை உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் முதற் கடமை பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளுதலாகும். அதற்காகத்தான் அவர்கள் மக்கள் பணத்தில் ஊதியம் பெறுகிறார்கள். பாராளுமன்ற அமர்விலும், செயற்பாடுகளிலும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்காவிட்டால், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதன் நோக்கமும், பயனும்தான் என்ன என்ற கேள்வி எழுவது தவிர்க்க முடியாதது.

பாராளுமன்ற உறுப்பினருக்கு சம்பளம், பலவகைமைப்பட்ட கொடுப்பனவுகள், தனிப்பட்ட ஊழியர்கள் சிலருக்கான சம்பளங்கள், ஒவ்வோர் அமர்விலும் கலந்துகொள்ள கொடுப்பனவு, குறைந்த விலையில் பாராளுமன்றத்தில் உணவு, அவர்களுக்கான பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் என ஏகப்பட்ட சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பள அளவு போதுமானதா இல்லையா என்ற விவாதம் ஒருபுறமிருக்க, பெறும் சம்பளத்திற்கும், சலுகைகளுக்கும் ஏற்ற பங்களிப்பை அவர்கள் வழங்குகிறார்களா என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. குறிப்பாக இரா. சம்பந்தன் அவர்களைப் போன்ற பழுத்த அனுபவமிக்க பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளாதிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது.

ஒருவேளை பலர் சொல்வது போல அவர் வயத மூப்பின் காரணமாக, அல்லது உடல்நிலையின் காரணமாக கலந்துகொள்ள முடியாத நிலையிலிருக்கிறார் என்றால், அவர் அரசியலிலிருந்து ஓய்வு பெற விரும்பாவிட்டாலும், பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ஓய்வுபெற்று திருக்கோணமலையில் இன்னொரு இளம் அரசியல்வாதிக்கு வாய்ப்பளித்தலே உசிதமான காரியம்.

44 வயதில் பாராளுமன்றத்திற்கு வந்த இரா. சம்பந்தன், 89 வயதிலும், தன்னால் திருகோணமலை மக்களுக்கு களத்தில் நின்று முழுமையாகப் பணி செய்ய முடியாத நிலையிலும் கூட தனது திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இறுகப்பற்றிக் கொண்டிருப்பது நியாயமா என்ற கேள்வியை அவரும், அவரது ஆதரவாளர்களும் தம்மைத் தாமே கேட்டுக்கொள்ள வேண்டும்.

அண்மையில் சம்பந்தன் அவர்கள் ஓய்வுபெற வேண்டும் என்ற கருத்து அதிகமாகப் பேசப்படும் நிலையில், “வசதிகளை அனுபவிப்பதற்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. தமிழ் மக்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு முடிவு காணக்கூடிய அரசியல் தீர்வொன்றைக் காண்பதற்காகவே அரசியலுக்கு வந்தவன் நான். எனவே எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அதை பெறாமல் அரசியலில் இருந்து நான் விடைபெறப் போவதில்லை” என்ற பகட்டாரவாரப் பதிலை வழங்கியிருந்தார். அரசியலிலிருந்து விலகுவதும், விலகாமல் இருப்பதும் அவர் விருப்பத்தின் பாற்பட்டது. ஆனால், பாராளுமன்ற அமர்வுகளில் தொடர்ச்சியாகப் பங்குபற்ற முடியாத நிலையில்,  திருகோணமலை மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக மக்களை தொடர்ந்து சந்தித்து தனது கடமைகளை ஆற்ற முடியாத நிலையில் அவர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தக்கவைத்திருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதொரு விடயமல்ல.

அவரது அனுபவமும், அறிவும், அதன்பாலான ஆலோசனைகளும் தமிழர் அரசியலுக்கு தேவையான உரம். ஆனால் அவரது பங்களிப்பு அந்தளவில் அமைவதுதான் காலத்திற்கேற்றது. சம்பந்தன் அவர்களுக்கு பிறகு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உடைந்துவிடும் வாய்ப்புள்ளது, அவர் ஓய்வுபெற்றால் அடுத்த தலைவர் யாரென்ற பிரச்சினை வரும் போன்றவை சம்பந்தன் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக நீடிப்பதற்கான நியாயமாக காரணங்கள் அல்ல. சம்பந்தன் அவர்கள் அரசியலில் தொடரும் வரைதான் மேற்சொன்ன பிரச்சினைகள் ஏற்படாது என்பது, மேற்சொன்ன பிரச்சினைகளுக்கு தீர்வல்ல, மாறாக பிரச்சினையின் தீவிரத்தை தள்ளிப்போடும் வழி மட்டும்தான்.

தனது மிகநீண்ட அரசியல் வாழ்வில் தமிழர் அரசியலுக்கு கணிசமான பங்களிப்பினை வழங்கியுள்ள சம்பந்தன் அவர்களின் சிறப்பை வரலாறு சொல்லும், ஆனால் அந்த வரலாற்றில் அவர் இளைஞர்களுக்கு வழிவிடாது, திருகோணமலை பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தானே தன் இறுதிவரை பற்றிக்கொண்டிருந்தார் என்பது ஒரு கரும்புள்ளியாக அமைந்துவிடக்கூடாது.

சம்பந்தன் ஐயா, நீங்கள் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வரை அரசியலில் இருக்க விரும்பினால், கூட்டமைப்பின் தலைவராக, ஆலோசகராக, வழிகாட்டியாக இருங்கள். ஆனால் பாராளுமன்றத்திற்கே போகாமல் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பது ஏற்புடையதல்ல. யாழ்ப்பாணத்திற்கு அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளை அறிமுகப்படுத்திய நீங்கள், திருகோணமலை யில் அதைச் செய்யவில்லை. இனியும் அந்த திருகோணமலை ஆசனத்தை நீங்கள் பற்றிக்கொண்டிருந்தால், திருகோணமலை மக்கள் வரும் தேர்தலில் உங்களைத் தோற்கடித்து அதை உங்களுக்குப் புரிய வைக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆட்படுவர். அது தமிழருக்கும், தமிழர் அரசியலுக்கும் அழகானதொன்றாக இருக்காது.

ஆகையால் ஓய்வு பெறுங்கள், சம்பந்தன் ஐயா!

என்.கே.அஷோக்பரன்