டூட்டூ: சமநீதியின் உரத்த குரல்

தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறிக்கு எதிரான இயக்கத்தில் முன்னணியில் நின்றவரும் சமாதானத்துக்காக நோபல் பரிசு வென்றவருமான பேராயர் டெஸ்மண்ட் டூட்டூவின் மரணச் செய்தியை அடுத்து, பௌத்தத் துறவியும் அமைதிப் போராளியுமான தலாய் லாமா பேசிய வீடியோ ஒன்று பார்க்கக் கிடைத்தது. “எனது மரணவேளையில் உன்னை நான் நினைவில் வைத்திருப்பேன்” என்று தனது உயிர் நண்பரான டெஸ்மண்ட் டூட்டூவிடம் சொல்லும் வாக்கியம்தான். வேறு வேறு பண்பாடுகள், வேறு வேறு பின்னணிகளைக் கொண்ட இரு ஆளுமைகளிடையே இருந்த நிறைவான நட்பை மட்டும் இந்த வாக்கியம் தெரிவிக்கவில்லை. பிரிவினையில் போரிட்டு மனிதகுலம் உழன்றுகொண்டிருக்கும் காலத்தில், அமைதிக்காகவும் நல்லிணக்கத்துக்காகவும் தமது வாழ்நாளை முழுக்கச் செலவிட்டவர்கள், பிறருடனான நட்புறவில் மகிழ்ச்சியையும் நகைச்சுவையையும் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பதையும் தெரிவிக்கும் காட்சி அது.

சமநீதி இல்லாத இடத்தில் அமைதியும் இருக்க முடியாது என்பதைத் தனது சிறுவயதிலேயே வாழ்ந்து உணர்ந்தவர் டெஸ்மண்ட் டூட்டூ. அரிய இயற்கை வளங்களும் மலைகளும் பாடும் பறவைகளும் செழித்திருந்த நாடுகளில் ஒன்றான தென்னாப்பிரிக்காவை நிறவெறி எப்படி அழித்தது என்பதைத் தனது நோபல் பரிசு உரையில் பகிர்ந்துகொண்டார். தென்னாப்பிரிக்காவில் 20% மட்டுமே இருந்த வெள்ளையர்கள் தங்கள் அதிகாரம், படைபலத்தால் அங்குள்ள 87% நிலத்தை எடுத்துக்கொண்டனர்.

மிச்சமுள்ள 13%-ஐ அங்குள்ள பூர்விகக் கருப்பின மக்கள் பகிர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. கருப்பின மக்கள் தாங்கள் பிறந்த நாட்டில் அரசியல்ரீதியாகத் தீர்மானம் எடுக்க முடியாத நிலையில் நிறவெறிக் கொள்கையின் பெயரால் விலக்கிவைக்கப்பட்டனர். அரசமைப்பு கமிட்டிகளில் கருப்பினத்தவரின் பிரதிநிதித்துவம் கிடையாது. வறுமை, குறைவான கூலி, ஒதுக்கப்பட்ட வாழ்க்கை நிலைகளில் சிக்கிப் பிறந்த நாட்டிலேயே படிப்படியாக உரிமைகள் மறுக்கப்பட்ட அநாதைகளாக அவர்கள் மாறினார்கள். இந்நிலையில், நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் நெல்சன் மண்டேலாவின் சமகாலத்தவர் டெஸ்மண்ட் டூட்டூ.

1931-ல் ட்ரான்ஸ்வாலில் உள்ள க்ளெர்க்ஸ்டார்ப் பகுதியில் ஆசிரியராகப் பணியாற்றிய தந்தைக்குப் பிறந்தவர். தென்னாப்பிரிக்கப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்து உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகச் சில ஆண்டுகள் பணியாற்றியவரை இறையியல் கல்வி ஈர்த்து 1960-ல் பாதிரியாராக மாறினார். இறைப்பணிக்காக உலகம் முழுவதும் பயணிக்க வாய்ப்புக் கிடைத்தது. தென்னாப்பிரிக்கச் சமூகத்தை இனரீதியான பாகுபாடுகள் இல்லாத நாடாக, ஜனநாயகமும் சமநீதியும் நிலவும் சமூகமாக மாற்ற வேண்டும் என்ற அடிப்படையில், அவரது கனவுகள் இறையியல் பணியைத் தாண்டி விரிந்தன. எல்லாருக்கும் சம உரிமை, தென்னாப்பிரிக்கக் கடவுச்சீட்டுக் கொள்கைகள் ஒழிப்பு, பொதுக் கல்வி முறை, கட்டாய நாடுகடத்தல் நடைமுறைகளை ஒழிப்பது போன்ற செயல்திட்டங்களை வகுத்துக்கொண்டார்.

சுதந்திரம், சமநீதியை நோக்கிய தென்னாப்பிரிக்காவின் பயணம் அத்தனை துயரங்களைக் கொண்டது. பேராயர் டெஸ்மண்ட் டூட்டூ இல்லாத அந்த சுதந்திரக் கதையைக் கற்பனையும் செய்து பார்க்க முடியாது. நிறவெறிக்கு எதிராகப் போராடிய தலைவர்கள் பாதியிலேயே கொல்லப்பட்ட நிலையில், நாடுகடத்தப்பட்ட நிலையில் கைதுக்கான சூழ்நிலைகளில் ஒரு கொடும் நிறவெறி அரசாங்கத்தின் பாசாங்கைத் தொடர்ந்து அம்பலப்படுத்தியவர் டூட்டூ. வெள்ளையின அரசாங்கத்துக்கு முட்டுக்கொடுத்துவந்த மேற்கத்திய அரசுகளைக் கண்டித்து, நாஜிக்களுக்கு இணையானவர்கள் என்று சொல்லித் தென்னாப்பிரிக்க வெள்ளையின அரசை ஒதுக்குவதற்கான தார்மிக வழிகாட்டியாக இருந்தவர்.

தென்னாப்பிரிக்காவில் ஜனநாயக அரசு ஏற்பட்டபோது, வெள்ளையின அரசு அதிகாரத்தில் இருந்த காலத்தில் அது செய்த குற்றங்களை விசாரிப்பதற்கான உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் தலைவராகவும் சிறப்பாகச் செயல்பட்டார். ஆழமாக ஏற்பட்டுவிட்ட வரலாற்றுக் காயங்களைக் குணமாக்கும் பணி அது. அந்த விசாரணை வழியாக ‘புனரமைப்பு நீதி’யைச் செயல்படுத்தினார்.

இதற்கான முதல் விசாரணை 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்தது. அந்த விசாரணைகள் அனைத்தும் நேரடியாகத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டன. இந்த விசாரணைகள் தென்னாப்பிரிக்கச் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. 1998, அக்டோபர் மாதம் ஒரு பெரிய பொது நிகழ்ச்சியில் ஐந்து பாகங்களாகத் தொகுக்கப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் அறிக்கை நெல்சன் மண்டேலாவிடம் வழங்கப்பட்டது. இதுபோன்ற விசாரணை கமிட்டிகளின் பரிந்துரைகள் முழுமையாக நடைமுறைப்படுத்த முடியாத நிலை இருந்தாலும், நீண்டகால அடிப்படையிலான நல்லிணக்கத்துக்கான முக்கியமான ஏற்பாடாக இந்த விசாரணை அறிக்கை கருதப்படுகிறது.

சமாதானம் என்பது சமநீதியின் அடித்தளத்தில் உருவாவது என்ற நம்பிக்கை கொண்டிருந்த டூட்டூ, உலகளவில் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தவர். அத்துடன் தன்பாலின உறவினர், திருநங்கைகள் உரிமைகளுக்காகவும் தன்பாலினத் திருமணங்களுக்காகவும் உரத்து குரல்கொடுத்தவர். தன்பாலின உறவுக்கு எதிரான மனநிலையுள்ள கடவுளை நான் வணங்க மாட்டேன் என்று தைரியமாக மதநிறுவனச் சட்டகத்தில் இருந்துகொண்டே குரல்கொடுத்தவர் அவர்.

தென்னாப்பிரிக்காவில் பெருந்தொற்றைப் போலப் பரவி மக்களை அழித்துக்கொண்டிருந்த எய்ட்ஸ் நோய்த்தொற்றைக் கண்டும் காணாமலும் இருந்த தென்னாப்பிரிக்க அரசைக் கண்டித்துப் பேசியவர் அவர். “நிறவெறி நமது மக்களை அழித்தொழிக்க நினைத்தது. அது தோற்றது. நாம் எய்ட்ஸ்க்கு எதிராகச் சரியான நடவடிக்கையில் இறங்கவில்லையெனில் அது நமது மக்களை வெற்றிகரமாக அழித்துவிடும்’’ என்று பேசியவர். நிறவெறிக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அரசு தவறுகள் செய்தபோதும் அதை வெளிப்படையாகத் தொடர்ந்து விமர்சித்துவந்தவர் டூட்டூ.

டூட்டூவின் வெடிச்சிரிப்பும் நகைச்சுவையும் அவரது போராட்டங்களைப் போலவே புகழ்மிக்கது. மக்களுக்காக எப்போதும் போராட்டங்களை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து செய்துகொண்டிருந்த அவர் மிகவும் மகிழ்ச்சியான மனிதராகவும் இருந்தார். தென்னாப்பிரிக்காவில் 2010-ல் நடைபெற்ற உலகக் கால்பந்து தொடக்க விழாவில் சிரித்தபடியே அவர் நடனமாடிய காட்சி புகழ்பெற்றது. சம காலத்தின் முக்கியமான காந்தியர்களுள் ஒருவராக மதிக்கப்படுபவர் டூட்டூ. காந்திக்குச் சமாதானத்துக்கான நோபல் பரிசு கிடைக்கவில்லையென்றாலும், டெஸ்மண்ட் டூட்டூ (1983-ல்) போன்றோருக்குக் கிடைத்த நோபல் பரிசெல்லாம் காந்திக்கும் கிடைத்தது போன்றதுதான். 2005-ல் ‘காந்தி அமைதி விருது’ டூட்டூவுக்கு வழங்கப்பட்டது.

“நான் நேசிக்கப்படுவதை நேசிப்பவன்’’ என்று சொன்னவர் டூட்டூ. ஆமாம். அது உண்மைதான். டூட்டூ போன்றவர்கள் நேசிக்கப்பட்டுக்கொண்டே இருப்பார்கள்.

– ஷங்கர், தொடர்புக்கு: sankararamasubramanian.p@hindutamil.co.in