உள்ளூராட்சி சபைகளில் நடப்பதென்ன?

கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தல்களின்போது காரைநகரில் ஒரு சுயேச்சைக் குழு போட்டியிட்டது. அப் பிரதேசத்தில் காணப்படும் சமூக வேறுபாடுகளின் அடிப்படையில் குறிப்பிட்ட சில சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சுயேட்சைக்குழுவாக அது தேர்தலில் போட்டியிட்டது. எனினும் அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெளிவான தமிழ்தேசிய நிலைப்பாட்டை அக்கட்சி வெளிப்படுத்தியது.தேசிய விடுதலை என்பது சமூக விடுதலையையும் உள்ளடக்கியதே என்பதனை அந்த தேர்தல் அறிக்கை தெளிவாக வெளிப்படுத்தியது.

தேர்தலில் அச்சுயேச்சைக் குழு மூன்று ஆசனங்களைப் பெற்றது.எனினும் பிரதேச சபையை கைப்பற்றுவதற்கு தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஏனைய கட்சிகளுடன் பேரம் பேச வேண்டிய ஒரு நிலைமை ஏற்பட்டது. அப்பொழுது அவர்களை இக்கட்டுரை ஆசிரியர் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியோடு தொடர்புபடுத்தி விட்டார். எனினும் பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறவில்லை.காரணம் ஈபிடிபியின் ஆதரவைப் பெற்ற ஒரு சுயேச்சைக் குழுவை தாம் ஆதரிக்க முடியாது என்ற நிலைப்பாட்டை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கொண்டிருந்தது. இதனால் தவிசாளர் பதவி கூட்டமைப்பிடம் சென்றது.

அண்மையில் அப்பிரதேச சபையின் தவிசாளர் இறந்து போன காரணத்தால் அப்பதவி வெற்றிடம் ஆகியது. அதன்பின் நடந்த வாக்கெடுப்பில் சுயேட்சைக் குழு வெற்றி பெற்றது.தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர் வாக்கெடுப்பில் நடுநிலை வகித்தபடியால் அந்த வெற்றி கிடைத்தது. எனினும் அதன் பின் வந்த பட்ஜெட் வாக்கெடுப்பில் சுயேச்சைக் குழுவின் தவிசாளர் தோற்கடிக்கப்பட்டார். கூட்டமைப்பு, யு.என்.பி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்று கட்சிகளும் ஒன்று சேர்ந்து அவரை தோற்கடித்தன.

இது தொடர்பில் சுயேச்சைக்குழுவை ஸ்தாபகர்களில் ஒருவர் இக்கட்டுரை ஆசிரியரோடு தொடர்பு கொண்டார்.தமிழ்தேசிய திரட்சியை சமூகங்களின் பெயரால் உடைப்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.எனவே தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் இதுவிடயத்தில் எம்மை ஏன் ஆதரிக்கவில்லை என்றும் கேட்டார்.குறிப்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இதில் எதிர்நிலை எடுப்பது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். எனவே நான் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் உரையாடினேன். கொள்கை ரீதியாக தேசிய விடுதலை என்பது சமூக விடுதலையையும் உள்ளடக்கியதுதான் என்ற அடிப்படையில் இந்த விவகாரம் அணுகப்பட வேண்டும் என்பதை அக்கட்சி ஏற்றுக்கொண்டது. இதுவிடயத்தில் ஈபிடிபி ஆதரிக்கும் ஒரு தரப்பை எதிர்ப்பது என்று முடிவெடுக்காமல் தமிழ் தேசியத் திரட்சியைப் பாதுகாப்பது என்ற நீண்டகால நோக்குநிலையின் அடிப்படையில் அக்கட்சி முடிவெடுத்தது.அதன்படி வாக்கெடுப்பில் சுயேச்சை குழுவை எதிர்ப்பதில்லை என்று முடிவெடுத்தது.

எனினும் வாக்கெடுப்பு நடந்த அன்று கட்சித் தீர்மானத்தை மீறி அக்கட்சியின் உறுப்பினர் சுயேச்சைக் குழுவுக்கு எதிராக வாக்களித்தார்.தமது கட்சிக் கட்டுப்பாட்டை மீறி முடிவெடுத்த உறுப்பினருக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருக்கிறது.

காரைநகர் பிரதேச சபை விடயத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பொறுப்போடும் தமிழ்தேசியத் திரட்சியை பாதுகாப்பது என்ற அடிப்படையிலும் முடிவுகளை எடுத்திருக்கிறது. எனினும் போதிய அளவுக்கு அரசியல் மயப்படுத்தப்படாத உறுப்பினர் ஒருவர் வாக்கெடுப்பில் கட்சியின் கொள்கை முடிவை மீறி வாக்களித்திருக்கிறார்.அதேசமயம் அவரைப் போலவே அப்பிரதேசத்தின் சமூக ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலிக்கும் விதத்தில் கூட்டமைப்பும் யு.என். பியும் முடிவுகளை எடுத்தன என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

யு.என்.பி ஒரு தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சியல்ல. ஆனால் தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகள் மத்தியில் இது போன்ற விடயங்களில் தெளிவான விளக்கங்கள் உண்டா?அண்மையில் வட்டுக்கோட்டைப் பகுதியில் நடந்த சமூக முரண்பாடுகளை கையாள்வதில் தமிழ்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகள் துரிதமாக செயல்பட தவறிவிட்டன.

தேசிய விடுதலை எனப்படுவது சமூக விடுதலையையும் உள்ளடக்கியதுதான் என்பதனை எத்தனை கட்சிகள் தமது உறுப்பினர்களுக்கு கற்பித்திருகின்றன? தேசியம் என்றால் என்ன? சமூக விடுதலையும் தேசிய விடுதலையும் ஒன்றா ? ஒரு சாதிவாதி ஏன் தேசியவாதியாக இருக்க முடியாது ?ஒரு மதத் துவேசி ஏன் தேசியவாதியாக இருக்க முடியாது? ஓர் ஆணாதிக்கவாதி ஏன் தேசியவாதியாக இருக்க முடியாது? ஒரு பிரதேசவாதி ஏன் தேசியவாதியாக இருக்க முடியாது? போன்ற கேள்விகளுக்கு கட்சி உறுப்பினர்களுக்கு பொருத்தமான விளக்கங்களை வழங்க வேண்டிய பொறுப்பு எல்லாத் தமிழ் தேசிய கட்சிகளுக்கும் உண்டு.

காரைநகர் பிரதேச சபை விவகாரம் தமிழ்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள் மத்தியில் சமூக விடுதலை குறித்து போதிய தெளிவு இல்லை என்பதை காட்டுகிறது. அதாவது தேசியவாதத்தை அதன் பிரயோக நிலையில் பல கட்சித் தொண்டர்களும் முக்கியஸ்தர்களும் விளங்கி வைத்திருக்கவில்லை என்பதைக் காட்டுகிறது.

அதுமட்டுமல்ல உள்ளுராட்சி மன்றங்களை நிர்வகிப்பது தொடர்பில் தமிழ் கட்சிகளிடம் பொருத்தமான தரிசனங்கள் போதாது என்பதைத்தான் அண்மை வாரங்களாக உள்ளுராட்சி மன்றங்களில் நடக்கும் வாக்கெடுப்பு முடிவுகள் நமக்கு உணர்த்துகின்றன.

ஒருபுறம் உள்ளூராட்சி மன்றங்களை அவற்றுக்கான உள்ளூர் நிலைமைகளோடு விளங்கிக்கொண்டு பிரதேசங்களைக் கட்டியெழுப்புவதற்குரிய வழிவரைபடத்தை உருவாக்க பெரும்பாலான தமிழ்க் கட்சிகள் தவறிவிட்டன. இன்னொருபுறம் உள்ளூர் ஏற்றத்தாழ்வுகளையும் முரண்பாடுகளையும் மேவி ஒரு தேசியத் திரட்சியை கட்டியெழுப்புவதற்கான வழிவரைபடம் தமிழ்த் தேசியக் கட்சிகளிடம் உண்டா?

பெரும்பாலான உள்ளுராட்சி மன்றங்கள் ஒன்றில் உள்ளூர் சமூக முரண்பாடுகளை;ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலிக்கின்றன.அல்லது கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளை பிரதிபலிக்கின்றன.அல்லது ஒரு கூட்டுக்குள்ளே காணப்படும் உட்கட்சி முரண்பாடுகளை பிரதிபலிக்கின்றன. இதனால் கட்சிகளால் உள்ளூராட்சி மன்றங்களில் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியவில்லை. அதேசமயம் அதைவிட முக்கியமாக தேசியத் திரட்சியையும் பாதுகாக்க முடியவில்லை.இது அதன் இறுதி விளைவாக சில சபைகளில் எதிர்த்தரப்பிடம் அதிகாரத்தை கொடுப்பதில்தான் முடிவடைந்திருக்கிறது.

மாகாணசபை தேர்தல் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலை போலன்றி பிரதேச சபைகளுக்கான தேர்தல் எனப்படுவது உள்ளூர் யதார்த்தங்களை;உள்ளூர் உணர்வுகளை; அபிமானங்களை;ஏற்றத்தாழ்வுகளை பிரதிபலிப்பது.எனவே அங்கே பிரதிநிதிகளை தெரிவு செய்யும்பொழுது பிரதேச உணர்வுகளும் அப்பிரதேசத்தில் காணப்படும் சமூக வேறுபாடுகளும் சமூக ஏற்றத் தாழ்வுகளும் இனமத முரண்பாடுகளும் தீர்மானிக்கும் காரணிகளாக இருக்கும்.இது விடயத்தில் தீர்க்கதரிசனம் மிக்க தந்திரோபாயமான அணுகுமுறைகள் தேவை. எத்தனை தமிழ் கட்சிகளிடம் அவ்வாறான அணுகு முறைகள் இருந்தன? இருக்கின்றன?

சமூக ஏற்றத்தாழ்வுகளை, மத முரண்பாடுகளை மட்டுமல்ல பால் அசமத்துவத்தையும் தமிழ்தேசிய நோக்கு நிலையிலிருந்து அணுகுவதில் எத்தனை கட்சிகள் வெற்றிபெற்றுள்ளன? கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தில்  நடந்த கூட்டத்தில்  மேடையிலும் பெண்கள் இருக்கவில்லை,பார்வையாளர்கள் மத்தியிலும் பெண்கள் இருக்கவில்லை.

பால் சமத்துவத்தைப் பேணும் விதத்தில் பெண் வேட்பாளர்களை தெரிவு செய்யும் விடயத்திலும் பெரும்பாலான கட்சிகளிடம் நீண்டகால நோக்கிலான தயாரிப்புக்கள் இருக்கவில்லை. உள்ளுராட்சி மன்றங்களில் குறிப்பிட்ட விகிதம் பால் சமநிலை பேணப்பட வேண்டும் என்ற ஒரு சட்டரீதியான நிர்ப்பந்தம் ஏற்பட்ட பொழுது பெண் வேட்பாளர்களை தேடி எல்லாக் கட்சிகளும் ஊர்ஊராக திரிந்தன. ஏற்கனவே ஆண் வேட்பாளர்களுக்கு தட்டுப்பாடு. இந்நிலையில் பெண் வேட்பாளர்களை எங்கே கண்டுபிடிப்பது? இதனால் ஆட்பொலிவுக்கு பெண்களை தேடி கண்டுபிடித்து தேர்தலில் நிறுத்தினார்கள். அவர்களில் அனேகர் படிப்படியாக செதுக்கப்பட்ட உள்ளூர் தலைமைகள் அல்ல.

பெண் வேட்பாளர்கள் மட்டுமல்ல ஆண் வேட்பாளர்களின் நிலைமையும் அப்படித்தான். கிராம மட்ட உள்ளூர் தலைமைகளைச் செதுக்கி எடுப்பதற்குரிய பொருத்தமான அரசியல் தரிசனங்களும் பொறிமுறைகளும் எத்தனை கட்சிகளிடம் உண்டு?

கிராம மட்ட தலைமைத்துவம்தான் அடுத்தடுத்த கட்டங்களில் நகரத்துக்கும் மாவட்டத்துக்கும் மாகாண மட்டத்திற்கு அதற்கடுத்த மட்டங்களுக்கும் மேல் எழுகின்றன. எனவே உள்ளூர் தலைமைத்துவத்தை கட்டி எழுப்புவது என்பது ஒரு கட்சியின் அத்திவாரத்தை பலப்படுத்துவதுதான்.

தமிழ் கட்சிகள் உள்ளூர் தலைவர்களை எந்த அடிப்படையில் கட்டி எழுப்புகின்றன ?அல்லது தெரிந்தெடுக்கின்றன என்று பார்த்தால் ஏற்கனவே தலைவர்களாக இருப்பவர்களைத்தான் பெரும்பாலான கட்சிகள் தெரிந்தெ டுக்கின்றன. ஏற்கனவே தலைவர்களாக இருப்பவர்கள் அந்தந்த ஊரின் உள்ளூர் உணர்வுகளையும் உள்ளூர் ஏற்றத்தாழ்வுகளையும் முரண்பாடுகளையும் பிரதிபலிக்கிறார்கள்.

அவர்கள் பின்னர் தெளிவூட்டப்பட்டு அரசியல் மயப்படுத்தப்பட்டு செதுக்கி எடுக்கப்படுவதில்லை என்பதைத்தான் பெரும்பாலான உள்ளூராட்சி சபை நிலைமைகள் நமக்கு உணர்த்துகின்றன. ஒருபுறம் தேசமாகத் திரள்வதற்கு தடையாக உள்ள அக முரண்பாடுகள், ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள். இன்னொருபுறம் கட்சிகளுக்கிடையேயும் ஒரே கூட்டுக்குள்ளேயயும் பிச்சல் பிடுங்கல்கள். தொகுத்துப் பார்த்தால் தமிழ் மக்கள் ஒரு திரட்சியாக இல்லை என்பதைத்தான் அண்மைய வாரங்களில் உள்ளூராட்சி மன்ற நிலவரங்கள் நமக்கு உணர்த்துகின்றனவா?

அமெரிக்காவையும் இந்தியாவையும் கையாள்வதற்கு வெளியுறவுக் கொள்கை வேண்டும் என்று பேசப்படும் ஒரு காலகட்டம் இது. ஆனால் உள்ளூரில் தமது சொந்த மக்களைத் திரட்டுவதற்கே கட்சிகளிடம் பலமான உள்விவகாரக்  கொள்கைகள் இல்லை என்பதைத்தான் உள்ளூராட்சி சபைகள் உணத்துகின்றனவா?

நிலாந்தன்