வலிகாமம் வடக்கில் உள்ள கோவில் விக்கிரகங்களை கடத்தி விற்பனை செய்து வந்த இருவரையும், எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
வலிகாம் வடக்கு பிரதேசத்தில் உள்ள கோவில்களில் இருந்த பிள்ளையார் உள்ளிட்ட கடவுள் விக்கிரகங்களைக் கடத்தி கொழும்பில் விற்பனை செய்த குற்றச்சாட்டில், கீரிமலை – நல்லிணக்கபுரம் மற்றும் புத்தூர் – நவக்கிரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த இருவர், கடந்த 24ஆம் திகதியன்று, காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், கடந்த 09ஆம் திகதி முதல் 23ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில், கொழும்புக்கு கடத்தி விற்பனை செய்யப்பட்ட சிலைகள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், கொழும்புக்கு விரைந்த பொலிஸ் குழுவினர், 25ஆம் திகதியன்று, கொழும்பில் விற்பனை செய்யப்பட்ட 20 சிலைகளை மீட்டு வந்தனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் (26), சந்தேக நபர்களை, மல்லாகம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியதை அடுத்து, அவர்களை எதிர்வரும் 05ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு, நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal