அறிவியல் எழுத்தாளர் ராஜாஜி

தமிழுக்கான சாகித்ய அகாடமி விருது பெற்றவர்களில் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரும் ஒருவர். ராமாயணக் கதையைக் குழந்தைகளும் படிக்கும் வகையில் அவர் எழுதிய ‘சக்கரவர்த்தித் திருமகன்’ புத்தகத்துக்கு 1958-ல் சாகித்ய விருது கிடைத்தது. பாரதக் கதையை ‘வியாசர் விருந்து’ என்ற பெயரிலும் உபநிடதங்களின் சாராம்சத்தை ‘உபநிஷதப் பலகணி’ என்ற தலைப்பிலும் அவர் எழுதியிருக்கிறார்.

தவிர, அறிவியல் பார்வையை வளர்க்கும் வகையில் ‘திண்ணை ரசாயனம்’ என்ற புத்தகத்தையும் அவர் எழுதியுள்ளார். அதே தலைப்பில் ‘கல்கி’ இதழில் தொடராக வெளிவந்த ஏழு கட்டுரைகள் 1946-ல் புத்தகமாக வெளிவந்தன. ஆங்கிலம் தெரிந்த ஒருவருக்கும் ஆங்கிலம் அறியாத ஒரு பழைமைவாதி ஒருவருக்கும் இடையிலான உரையாடல் வடிவத்தில் எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. வேதியியல் துறையைப் பற்றிய எளிய அறிமுகத்தைச் சாமானியர்க்கும் அளிக்க வேண்டும் என்பதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம்.

ஆங்கிலத்தில் ‘கெமிஸ்ட்ரி’ என்ற வார்த்தைக்குப் பதிலாக ‘வேதியியல்’ என்ற சொல் இன்று பொதுவழக்குக்கு வந்துவிட்டது. தொடக்கத்தில் ‘ரசாயனம்’ என்ற வார்த்தையே பயன்பாட்டில் இருந்தது. அதுபோல, இயற்பியலுக்கு ‘பௌதிகம்’ என்று பெயர். அறிவியல் நூல்களை எழுதும்போது அதன் கலைச்சொற்களைத் தமிழிலேயே எழுத வேண்டும் என்பது ராஜாஜியின் விருப்பம். ஆக்ஸிஜனுக்கு அனலம், ஹைட்ரஜனுக்கு நீரகம், நைட்ரஜனுக்கு வளிரம், பெட்ரோலுக்கு கல்லெண்ணெய் என்பதுபோலப் பல தனித்தமிழ்ச் சொல்லாக்கங்களை இந்தப் புத்தகத்தில் பயன்படுத்தியிருக்கிறார் ராஜாஜி.

கார்பனுக்குக் ‘கரி’ என்பதைத் தவிர, இவற்றில் பெரும்பாலானவை இன்றும் வழக்கத்துக்கு வரவில்லை. கார்பன் டையாக்ஸைடை ‘கரி-ஈர்- அனலதை’ என்றும் இன்னார்கானிக் கெமிஸ்ட்ரியை ‘அல்யாக்கை ரசாயனம்’ என்றும் அவர் அழைத்திருக்கும் வார்த்தைகள் இனிவரும் காலங்களிலும்கூடச் சாத்தியமில்லை. தனித்தமிழ் சொல்லாக்கங்களை விரும்புபவர் என்றபோதும் அப்படித்தான் எழுத வேண்டும் என்று யாரையும் கட்டுப்படுத்தக் கூடாது என்ற எண்ணமும் ராஜாஜிக்கு இருந்திருப்பதை நூலின் முன்னுரையிலிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

நீர் ஆவியாக மாறுவதும் ஆவி மீண்டும் நீராவதும் இயற்பியல், இரண்டு வாயுக்கள் கூடி நீர் உருவாவது வேதியியல் என்பது போன்ற எளிய விளக்கங்கள் நிறைந்த நூல் இது. வேதியியலை ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு நகைச்சுவைப் பனுவலாகவும் இந்த உரையாடல்களைப் படிக்கலாம். அறிவியல் தமிழில் ஆர்வம் கொண்ட ராஜாஜி தனித்தமிழ் கலைச் சொல்லாக்கத்திலும் ஆர்வம்கொண்டவராக இருந்துள்ளார்.

கலைச் சொல்லாக்கங்களில் மக்களின் பொதுப் பயன்பாட்டுக்கு வருவனவே நிலைநிற்கும். ஆனாலும், அதற்கான முயற்சிகள் தொடர்ந்தபடியே இருக்க வேண்டும். 1938-ல் அகில இந்திய வானொலி நிலையத்தைத் திறந்துவைத்து ராஜாஜி ஆற்றிய உரை, வானொலி இயங்கும் அறிவியல் அடிப்படையை எளிமையாக விளக்குவதாகவே அமைந்திருந்தது. காசநோய்த் தடுப்பூசிக்கு ஆதரவாகப் பெரும் பிரச்சாரத்தை நடத்தியவர் அவர். கரோனா காலத்திலும்கூட தடுப்பூசி எதிர்ப்புப் பிரச்சாரங்கள் தொடரும் நிலையில், ராஜாஜியின் அறிவியல் பார்வை நமது தலைமுறைக்கும் தேவையாக இருக்கிறது.

டிசம்பர் 25: ராஜாஜி நினைவு நாள்