ஆண் துணை இல்லாமல் பெண்கள் பயணிக்க தடை – தலிபான்கள் அதிரடி உத்தரவு

ஹைஜாப் அணியாத பெண்களை ஓட்டுநர்கள் வாகனங்களில் அனுமதிக்கக்கூடாது என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதையடுத்து அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தற்போது பயணம் செய்பவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்து தலிபான்கள் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-
ஆப்கானிஸ்தானில் 72 கிலோ மீட்டர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது. பயணம் செய்யும் பெண்கள் கண்டிப்பாக ஹைஜாப் அணிய வேண்டும். ஹைஜாப் அணியாத பெண்களை ஓட்டுநர்கள் வாகனங்களில் அனுமதிக்கக்கூடாது. பயணம் செய்யும் அனைவரும் வாகனங்களில் பாடல்கள் கேட்கக்கூடாது.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த வாரம் பெண்கள் நடித்திருக்கும் தொலைக்காட்சி தொடர்களை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்பக்கூடாது என தலிபான்கள் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.