இந்த தொலைநோக்கியால் நட்சத்திரங்கள் மற்றும் கிரக அமைப்புகள் எவ்வாறு உருவாகின மற்றும் அண்ட சராசரம் குறித்த விரிவான தகவல்களை சேகரிக்க முடியும்.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் கனேடிய விண்வெளி நிறுவனம் இணைந்து உலகின் மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த விண்வெளி அறிவியல் தொலைநோக்கியான ‘ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி’யை உருவாக்கி உள்ளன.
பூமி தனித்துவமானதா? பூமியைப் போன்ற கிரக அமைப்புகள் இருக்கிறதா? பிரபஞ்சத்தில் நாம் மட்டும்தான் இருக்கிறோமா? போன்ற அடிப்படை கேள்விகளுக்கு பதில் தேடுவதற்கான ஆய்விற்கு, வானியலாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த தொலைநோக்கியைப் பயன்படுத்த உள்ளனர்.
மிகவும் சக்திவாய்ந்த இந்த தொலைநோக்கியானது, தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ஏவுதளமான பிரெஞ்சு கயானாவில் இருந்து ஏரியன்-5 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் செலுத்தப்பட்டது.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, விண்வெளியில் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்வதாக நாசா கூறி உள்ளது. பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர்கள், (930,000 மைல்கள்) தொலைவில் உள்ள அதன் இறுதி இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இந்த தொலைநோக்கியால் நட்சத்திரங்கள் மற்றும் கிரக அமைப்புகள் எவ்வாறு உருவாகின மற்றும் அண்ட சராசரம் குறித்த விரிவான தகவல்களை சேகரிக்க முடியும். பிரபஞ்ச ரகசியம், தோற்றம் தொடர்பான பல புதிர்களுக்கான விடைகள் இந்த தொலைநோக்கி மூலமாக கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இதுவரை அனுப்பப்பட்ட தொலைநோக்கிகளை விட மிக அதிக தொலைவுக்கு இந்த ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.