ஐ.நா வரவு – செலவுத்திட்டத்தில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் …

ஐக்கிய நாடுகள் சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்றுவருகின்றது. இவ்வரவு, செலவுத்திட்டத்தில் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்காக ஒதுக்கப்படவுள்ள நிதி மற்றும் ஆளணியில் குறைப்பைச் செய்வதற்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய பாதுகாப்புச்சபை உறுப்புரிமை நாடுகளும் இலங்கையும் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.

இருப்பினும் அவற்றின் முயற்சிகளைத் தோற்கடித்து மனித உரிமைகள்சார் செயற்திட்டங்களுக்கு உரியவாறு நிதியொதுக்கப்படுவதை உறுதிசெய்யவேண்டும் என்று ஐ.நா உறுப்பு நாடுகளிடம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

ஐக்கிய நாடுகள் சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு, செலவுத்திட்டம் தொடர்பான விவாதம் நடைபெற்றுவரும் நிலையில், மனித உரிமைகள்சார் நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்படும் நிதியைக் குறைப்பதற்கு ரஷ்யா மற்றும் சீனா தலைமையிலான நாடுகளால் முன்னெடுக்கப்படக்கூடிய நடவடிக்கைகளுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை உறுப்புநாடுகள் வெளிப்படுத்தவேண்டும்.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின்கீழ் இயங்கும் நிதிச்சபையின் ஐந்தாவது குழு, ஐக்கிய நாடுகள் சபையின் வரவு, செலவுத்திட்டம் குறித்த கலந்துரையாடல்களில் ஈடுபடும்.

கடந்த வருடம் அக்கலந்துரையாடல்களில் பங்கேற்ற ஒருவரால் வழங்கப்பட்ட நம்பத்தகுந்த தகவல்களின் பிரகாரம், மனித உரிமைகளுடன் தொடர்புடைய குறித்த சில விவகாரங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைக் குறைப்பதற்கான அழுத்தம் ரஷ்யா மற்றும் சீனாவினால் வழங்கப்பட்டதாக அறியமுடிகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள முக்கியமான சில விசாரணைப்பொறிமுறைகள் தற்போது நடைமுறையில் உள்ளன.

இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகள், பெலாரஸில் இடம்பெற்ற மிகமோசமான மீறல்கள் குறித்த விசாரணைகள், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரைணகள் மற்றும் ஆபிரிக்கர்களுக்கு எதிராக சட்ட அமுலாக்க அதிகாரிகளால் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்த சர்வதேச நிபுணர்களின் விசாரணைப்பொறிமுறை என்பன அவற்றில் பிரதானமானவையாகும்.

ஐக்கிய நாடுகள் சபைக்கென ஒதுக்கப்படும் வளங்களில் மனித உரிமைகள்சார் விவகாரங்கள் அதிக பங்கைப் பெறுவதாக எவ்வித அடிப்படைகளுமற்ற வகையில் சீனா மற்றும் ரஷ்யாவினால் வெளியிடப்பட்ட கருத்தினால் அண்மைய வருடங்களில் ஐக்கிய நாடுகள் சபையின் வரவு, செலவுத்திட்டம் குறித்த கலந்துரையாடல்கள் சர்ச்சைக்குரியவையாக மாறியிருந்தன.

இவ்வருடம் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் பொறிமுறைக்காக ஒதுக்கப்படவுள்ள நிதி மற்றும் ஆளணியில் குறைப்பைச் செய்வதற்கு மேற்படி இரு பாதுகாப்புச்சபை உறுப்புநாடுகளும் இலங்கையும் தீவிரமாக முயற்சிக்கின்றன. அதுமாத்திரமன்றி பெலாரஸில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகளுக்கான நிதியொதுக்கீட்டிற்கு சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் எதிர்ப்பு வெளியிட்டுவருகின்றன.

சுயாதீனமாக இயங்குவதாகக் கூறிக்கொள்கின்ற ஐக்கிய நாடுகள் சபைக்கான வரவு, செலவுத்திட்டத்தை மதிப்பீடுசெய்யும் குழு, மனித உரிமைகள்சார் செயற்பாடுகளுக்கான நிதிவழங்கலைக் குறைக்கக்கூடிய வகையிலான அரசியல்மயப்படுத்தப்பட்ட பரிந்துரைகளை வழங்குவதன் ஊடாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் செயற்திட்டங்களுக்கான நிதியைத் திரட்டும் முயற்சியில் பாதிப்பை ஏற்படுத்திவருவது மிகுந்த விசனத்திற்குரிய விடயமாகும்.

ஆகவே மனித உரிமைகள்சார் செயற்திட்டங்களுக்கான நிதியொதுக்கீட்டைக் குறைப்பதற்கு சீனா மற்றும் ரஷ்யாவினால் வழங்கப்படும் அழுத்தத்தை ஏனைய உறுப்புநாடுகள் தோற்கடிக்கவேண்டியது அவசியம் என்பதுடன் அனைத்து மனித உரிமைகள்சார் பொறிமுறைகளுக்கும் முழுமையாக நிதியொதுக்கப்படுவதை உறுதிசெய்வது இன்றியமையாததாகும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.