“உன்னைப் பற்றிக் கேட்ட கேள்வி எதுக்குமே நான் தெரியாது எண்டுதான் சொன்னனான் ராதா. நீ பயப்படாத. நீ கட்டாயம் வெளியில போயிருவாய். குழந்தையோட தனியா உள்ளுக்க வெச்சிருக்க மாட்டங்கள்.”
மெல்போர்ன் அகதிகள் தடுப்பு முகாமில் வந்திருந்த நீதனைப் பற்றி மாத்திரமன்றி, சகல அகதிகளினதும் தலையில் புள்ளிவைத்து சித்திரம் வரைந்து, அவர்களின் பூர்வீகம், நட்சத்திரம் முதற்கொண்டு அனைத்தையும் தகவல்களாகச் சேகரித்துக்கொண்டிருந்தது ஆஸ்திரேலிய புலனாய்வுத்துறை. வெவ்வேறு முகாம்களில் வந்திருந்தவர்களின் படங்களைக் காண்பித்து, `இவரைத் தெரியுமா?’ – என்ற கணக்கில் ஏராளம் கேள்விகளைக் கொட்டி விசாரணைகளை ஆரம்பித்தார்கள்.
போரிலிருந்து உயிர்தப்பி தஞ்சம் கேட்டு வந்தவர்கள் என்ற எந்த தாட்சண்யமும் இல்லாமல், வந்தவர்களிலிருந்து கிரிமினல்களை வடிகட்டி எடுக்க வேண்டும் என்ற அதீத அவதானத்துடன் புலனாய்வுப் பிரிவினர் நாடெங்குமுள்ள அகதி முகாம்களில், பதி கருவிகளோடு பாசிபோல ஒட்டிக்கிடந்தார்கள்.
இஸ்லாமிய தேசங்களிலிருந்து வருகிற அகதிகள் குறித்து அவதானமாக இருக்க வேண்டும் என்று ஆஸ்திரேலியப் பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள், மைக் நீட்டிய ஊடகங்கள் அனைத்திடமும் மந்திரம்போல உச்சாடனம் செய்துகொண்டிருந்தார்கள். பெரிய பெரிய இராச்சியங்களின் சரிவுதான் பல உதிரிப் போராளிக்குழுக்களை உருவாக்குவது வழக்கம் என்றும், தனியாக இயங்கும் பயங்கரவாதிகளைப் பிரசவிப்பது வரலாறு என்றும் ஆவணங்களை முகத்துக்கு முன்னால் ஆட்டியபடி `ஆய்வாளர்கள்’ என்ற பெயரில் பலர் ஆஸ்திரேலிய மக்களை பயம் காட்டினார்கள்.
ஆஸ்திரேலியாவை நோக்கி வருகிற அகதிப்படகுகள் அனைத்தையும், தற்கொலைத் தாக்குதலுக்குக் குண்டு நிரப்பிக்கொண்டு வருகின்ற படகுகள்போலவே கண்டு, தேசம் அச்சம்கொள்ள வேண்டும் என்று அரசின் கொள்கைகளுக்கு சாம்பிராணி தூவுகிற ஊடகங்களில், ஆஸ்தான ஆய்வாளர்கள் பலர் அறைகூவிக்கொண்டிருந்தார்கள்