பெண்கள் மீதான தாக்குதல் சாத்தானுக்கு சமமானது- போப் பிரான்சிஸ்

பெண்கள் தைரியமாக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். மீண்டு வரவேண்டும் என்று போப் பிரான்சிஸ் கூறினார்.

போப் ஆண்டவர் பிரான்சிஸ் இத்தாலி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். இதில் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் உள்பட 4 பேருடன் கலந்துரையாடினார். அப்போது அவர்கள் போப் ஆண்டவரிடம் தங்களது பிரச்சினைகள் பற்றி பேசி ஆலோசனைகளை கேட்டனர்.

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்ட இத்தாலி பெண் ஜியோவானா என்ப வர் தனது நிலை பற்றி கூறினார். இதற்கு போப் ஆண்டவர் பிரான்சிஸ் பதில் அளித்து பேசியதாவது:-

பெண்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது. தங்களது கணவர்களால் கூட வீடுகளில் பெண்கள் தாக்கப்படும், துஷ்பிரயோகம் செய்யப்படும் எண்ணிக்கை மிக மிக அதிகம். இது எனது பார்வையில் கிட்டத்தட்ட சாத்தானியமானது.

ஏன் என்றால் அது தங்களை தற்காத்துக்கொள்ள முடியாதவர்களின் பலவீனத்தை பயன்படுத்துகிறது. இது மிகவும் அவமானகரமானது.

மேரி மாதா பல இன்னல்களை சந்தித்தார். ஆனால் அவர் தனது கண்ணியத்தை எப்போதும் இழக்கவில்லை. நான் உங்களிடம் (பெண்கள்) நிறைய கண்ணியத்தை பார்க்கிறேன். நீங்கள் கண்ணியத்தை இழந்தால் இங்கு இருக்க மாட்டீர்கள். எனவே பெண்கள் தைரியமாக பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டும். மீண்டு வரவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.