அவுஸ்ரேலியாவின் விக்ரோறிய மாநிலத்தில் பாடசாலை ஆசிரியர்கள் அகதிகளுக்கு ஆதரவான போராட்டமொன்றை எதிர்வரும் வாரம் தொடங்கவிருப்பது பெரும் சர்ச்சையை அரசியல்மட்டத்தில் உருவாக்கியுள்ளது.
விக்ரோறிய மாநிலத்தில் – குறிப்பாக மெல்பேர்ண் நகரத்தில் 16 பாடசாலைகளைச் சேர்ந்த 500 வரையான ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் குதிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவுஸ்ரேலிய பெருநிலப்பரப்புக்கு அப்பால் தடுப்பு முகாம்களை மூடவேண்டுமென்றும் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு வரவேண்டுமென்றும் வாசகங்கள் பொறித்த மேற்சட்டைகளை அணிந்து இந்த ஆசிரியர்கள் கடமையில் ஈடுபடுவார்கள் என்றும், அகதிகளுக்கு ஆதரவான பரப்புரையையும் விளக்கத்தையும் மாணவர்களுக்கு வழங்குவார்கள் என்றும் இந்தப் போராட்டத்தை நடாத்தும் ‘அகதிகளுக்கான ஆசிரியர்கள்’ என்ற அமைப்பு அறிவித்துள்ளது.
அவுஸ்ரேலியாவில் அண்மைக்காலமாக அகதிகளுக்கு ஆதரவான இயக்கங்கள் பல்கிப் பெருகி வருவதும், அகதிகளுக்கான தாதியர் சங்கம், அகதிகளுக்கான மருத்துவர் சங்கம், அகதிகளுக்கான மூதாட்டிகள் சங்கம் போன்ற அமைப்புக்களோடு அகதிகளுக்கான ஆசிரியர்கள் என்ற சங்கமும் வலுவாக இயங்கி வருகின்றது.
இதற்கிடையில் இந்த போராட்ட அறிவிப்பு அவுஸ்திரேலியாவில் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. விக்ரோறிய மாநிலத்தின் எதிர்க்கட்சியாகவிருக்கும் லிபரல் கட்சி கடுமையாக இதைக் கண்டித்துள்ளது. அதேவேளை பிரதமர்ம உட்பட மத்தியில் ஆட்சியிலிருக்கும் லிபரல் கட்சியின் பிரமுகர்கள் இதை மிகக்கடுமையாக எதிர்த்துள்ளார்கள். அத்தோடு ஆசிரியர்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் எச்சரித்துள்ளார்கள்.
இவ்வகையான போராட்டம் சட்டத்துக்கு உட்பட்டதா என்ற விவாதமும் ஊடகங்களில் அலசப்படுகிறது. ஆனால் தமது போராட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை திட்டமிட்டதைப் போல நடக்கும் எனவும், பல்வேறு தரப்புக்களிலிருந்து தமக்கு ஆதரவு பெருகி வருவதாகவும் ‘அகதிகளுக்கான ஆசிரியர்கள்’ அமைப்பு தெரிவித்துள்ளது.
சிலநாட்களின் முன்னர் அவுஸ்திரேலிய நடாளுமன்றில் நாற்பது வரையான அகதிச் செயற்பாட்டாளர்கள் போராட்டம் நடாத்தி நாடாளுமன்ற நடவடிக்கைகளை நிறுத்தியிருந்தமை பெரும் விவாதங்களைத் தோற்றுவித்துள்ள நிலையில்ல ஆசிரியர்களின் இந்தப் போராட்ட அறிவிப்பு மேலும் சர்ச்சையாக உருமாறியுள்ளது.