ஐரோப்பிய நாடுகளில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அடுத்த சில மாதங்களில் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஐந்து முதல் 11 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து ஃபைசர் பயோடெக் நிறுவனம் சார்பில் குறைவான அளவு கொண்ட கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. இதனையடுத்து இத்தாலி, ஸ்பெயின், ஹங்கேரி, கிரீஸ் நாடுகளில் சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
ஏதென்ஸ் நகரில் உள்ள மருத்துவமனையில் இன்று 12 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. முதல்கட்டமாக கிரீஸ் நாட்டு பெற்றோர்கள் தரப்பில் 30 ஆயிரம் குழந்தைகளுக்கான கொரோனா தடுப்பூசிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் நிக்கி கெராமியஸ் தெரிவித்துள்ளார்.
அறிவியல் தரவுகள் மற்றும் மருத்துவரின் பரிந்துரைப்படி தனது ஐந்தரை வயது குழந்தைக்கு கொரோனா தடுப்பூசி போட முடிவு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் கடந்த இரண்டு மாதங்களை விட டிசம்பர் மாதத்தில் குறைந்துள்ளது. எனினும் மாறுபட்ட கொரோனா வைரஸான ஒமைக்ரான் பரவலின் தன்மை ,அது எவ்வளவு ஆபத்தானது என்பது குறித்து விஞ்ஞானிகள் தரப்பில் இதுவரை உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை. ஒமைக்ரான் வைரஸ் பரவல் அடுத்த சில மாதங்களில் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக ஐரோப்பிய நோய் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதனால் பயணக்கட்டுப்பாடுகளை கொண்டு வரவும் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்கவும் அந்த மையம் பரிந்துரைந்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal