பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ் இளைஞன் பிணையில் விடுதலை!

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 28 வயதான பாலகிருஸ்ணன் ரதிகரன்  என்ற இளைஞனுக்கு ஒரு வருடத்திற்குப் பின்னர் இன்று (14.12.2021) திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் குறித்த வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செளியனின் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கி தீர்ப்பளித்தார்.

மூதூர் – சம்பூர் 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞன் மாவீரர் தினத்தையொட்டி கவிதை ஒன்றினை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியமைக்காக கடந்த  27.11.2020 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இவருக்கு எதிரான வழக்கு மூதூர் நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில் இவருடைய விடுதலைக்காக பல்வேறு தரப்பினரும் முயற்சி செய்துவந்தனர்.

அந்தவகையில் சட்டத்தரணியும் மனித உரிமை செயற்பாட்டாளருமாகிய ரனித்தா மயூரனின் குழுவினரால் சிரேஷ்ட சட்டத்தரணி ரத்தினவேலின் தலைமையில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் பிணைக்கான விண்ணப்பம் கோரப்பட்டிருந்த நிலையில் இவ்வழக்கை விசாரித்த மேல் நீதிமன்ற நீதிவான் மாணிக்கராசா இளஞ்செளியன் பிணை வழங்கி தீர்ப்பளித்தார்.

அத்துடன் திருகோணமலையில் மட்டுமல்லாது பல மாவட்டங்களில் இருந்தும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பல இளைஞர்கள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.