புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் அதிகார பகிர்வு எவ்வாறு அமையலாம்?

சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இடம்பெற்ற புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின்போதான முன்மொழிவுகள் குறித்து அரசியல் அமைப்பு நிபுணரான சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன, பேராசிரியர் ரொஹான் சமரஜீவ, சட்டத்தரணி ஜாவிட் யூசுப், கலாநிதி சுஜாதா கமகே ஆகியோருடன் அதிகாரப் பகிர்வு – மொழி ஆகிய விடயதானங்கள்  எவ்வாறு அமைதல் வேண்டும் எனும் தலைப்பில்  முன்னாள் நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜ் ஆற்றிய உரையின் தொகுப்பு. கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் செயற்பட்ட அரசியலமைப்பு பேரவையின் ‘மத்தி- சுற்றயல் அதிகாரங்கள்’ (Centre and Peripheries) உப குழுவின் உறுப்பினராக மயில்வாகனம் திலகராஜ் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப் பகிர்வு 

துணைத்தத்துவ கோட்பாட்டின் (Principle of Subsidiarity) அடிப்படையில் அதிகபட்சம் சாத்தியமான எல்லா வழிவகைகளினாலும் அதிகாரப் பகிர்வானது அமைதல் வேண்டும். அதாவது, அதிகார அலகுகளின் எல்லாப்படிநிலையிலும் (Tiers) வினைத்திறனாகக் கையாளக்கூடிய விடயதானங்கள் அத்தகைய படிநிலைக்கு வழங்கப்படல் வேண்டும். உள்ளூராட்சி மன்ற படிநிலையானது அரசாங்கத்தின் அடுக்கு ஒன்றாக அங்கீகரிக்கப்படுதல் வேண்டும்.

அரசாங்கத்தின் மூன்று அடுக்குகளுக்குமான விடயதானங்களும் தொழிற்பாடுகளும் துணைத்தத்துவ கோட்பாட்டின் (Principle of Subsidiarity) வழிகாட்டுதலின்படி ஒதுக்கீடு செய்யப்படுதல் வேண்டும். அத்தகைய ஒதுக்கீடுகள் தெளிவானதாக இருக்கவேண்டுமென்பதுடன், அரசியலமைப்பு திருத்தம் ஒன்றின் மூலம் தவிர மேலெழுதப்படவோ அல்லது ஆக்கிரமிப்பு தன்மை கொண்டதாகவோ, தெளிவற்றதாகவோ மாற்றப்படலாகாது.

அதிகாரப் பகிர்வின் முதன்மை அலகாக மாகாணம் இருக்கும்.

ஒரு மாகாண சபையின் பதவிக்காலம் ஐந்து வருடங்களாகும். அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல் ஒரே நாளில் நடத்தப்படும். நாடாளுமன்ற தேர்தல் போலவே அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒழுங்குமுறையிலமைந்த தேர்தல்கள் நடாத்தப்படுவதை அரசியலமைப்பு ஏற்பாடுகள் உறுதிசெய்தல் வேண்டும்.

ஒரு மாகாண சபையின் நிர்வாகத்தினால் நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டால்  அல்லது வரவு ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (பாதீடு) அல்லது கொள்கை விளக்க அறிக்கை மாகாண சபையில் தோற்கடிக்கப்பட்டால் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட நிர்வாகம் பதினான்கு நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெறவில்லையாயின், மாகாண சபை கலைக்கப்படுவதுடன்,  மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் வரை ஆளுனரின் பொறுப்பில் மாகாண நிர்வாகம் இருத்தல் வேண்டும்.

மாகாண சபைப் பட்டியலில் உள்ள விடயதானங்கள் தொடர்பான நாடாளுமன்றச் சட்டமானது, அத்தகைய விடயங்களின் நிர்வாகத்தை மத்திய அரசு எடுத்துக்கொள்வதாக, பாதகமான விளைவை ஏற்படுத்துவதாக இருக்கக்கூடாது.

மாகாண சபைப் பட்டியலில் உள்ள விடயதானங்கள் குறித்த தேசியக் கொள்கை வகுப்பின்போது, மத்திய அரசாங்கமானது மாகாண சபைகளுடன் ஒரு பங்கேற்பு செயல்முறையை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசானது தேசியக் கொள்கையை வரைவதில் உள்ள சூழ்நிலைகளை அரசியலமைப்பு வழங்குதல் வேண்டும்.

மாகாணப் பட்டியலில் உள்ள விடயங்கள் மீதான பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்கள் சார்ந்து மாகாண சபையினால் இயற்றப்பட்ட சட்டங்களை தேசியக் கொள்கை மீறக்கூடாது.

அரசியலமைப்பு விதிகளின்படி (அத்தகைய தேசியக் கொள்கையை நடைமுறைப்படுத்த) அதிகாரப் பகிர்வுடன் தொடர்புடைய சட்டத்தை மத்திய அரசு இயற்றினால், குறித்த மாகாண சபையினால் நிறைவேற்றப்பட்டச் சட்டங்கள் அத்தகைய தேசிய சட்டத்திற்கு உட்பட்டு வாசிக்கப்படவேண்டும். அத்தகைய சட்டவாக்கத்துக்கு இரண்டாவது அவையின் ஒப்புதல் அவசியமாகும்.

மாகாணப் பட்டியல் விடயதானத்துடன் தொடர்புடைய தேசியக் கொள்கை ஒன்றை உருவாக்கும்போது, பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரத்தை செயல்படுத்துவது தொடர்பாக நிறைவேற்று அல்லது நிர்வாக அதிகாரங்களை அமுல்படுத்தும்போது, கூறப்பட்ட பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரம் தொடர்பான நிறைவேற்று அல்லது நிர்வாக அதிகாரங்களை மாகாணம் தக்கவைத்துக் கொள்ளவேண்டும்.

மாகாணங்களுக்கென ஒதுக்கப்பட்ட பட்டியலில் தேர்ந்தெடுக்கப்பட்ட விடயதானங்களை அமுல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்திற்கு சட்டப்படி அனுமதி வழங்கப்படலாம்.

உள்ளூராட்சி அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய குறிப்பிட்ட தொழிற்பாடுகளை அவற்றின் எல்லைக்குள் அமுல்படுத்துவதற்கு நாடாளுமன்றம் அல்லது மாகாண சபைகளுக்கு சட்டம்/ நியதிச் சட்டத்தின் மூலம் அனுமதி வழங்கப்படலாம்.

மாகாண ஆளுநர் ஒருவர் நியமனம் செய்யப்படுவதற்கு முன்பதான உடனடி மூன்று வருட காலப்பகுதியில் அரசியல் ரீதியாக அவர் செயற்பட்டிருக்கக் கூடாது என்பதுடன், பதவிக்காலத்தில் அரசியலில் ஈடுபடவும் கூடாது.

ஒரு மாகாணத்தின் பிரதம செயலாளர் தேசிய பொதுச் சேவை ஆணைக்குழுவினால் முதலமைச்சரின் உடன்பாட்டுடன் நியமிக்கப்பட வேண்டும்.

மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் சம்பந்தப்பட்ட மாகாண அமைச்சர்களுடன் கலந்தாலோசித்து நியமிக்கப்படல் வேண்டும்.

மாகாண பொதுச் சேவை அதிகாரிகளின் நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம், பணிநீக்கம் மற்றும் ஒழுக்காற்று கட்டுப்பாடு ஆகியவை ஒவ்வொரு மாகாணத்திற்கும் அமைக்கப்பட்ட ஒரு சுயாதீனமான மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் (PPSC) மேற்கொள்ளப்படும்.

PPSC உறுப்பினர்கள், ஆளுநரால் சம்பந்தப்பட்ட மாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் கரிசனையுடன் நியமிக்கப் படுவார்கள்.

அதேநேரம், நியமனம் தொடர்பில் முதலமைச்சருக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் பொது உடன்பாடு இல்லாத பட்சத்தில், முதலமைச்சர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருடன் கலந்தாலோசித்த பின்னர் அரசியலமைப்புச் சபை பிரேரணைகளைச் செய்யும்.

அனைத்து மாகாணங்களின் முதலமைச்சர்கள், பிரதமர் உள்ளடங்கிய முதலமைச்சர்கள் மாநாடு அமைதல் வேண்டும், இதில் மாகாணங்களுக்கு இடையேயான பொதுவான பிரச்சினைகள் விவாதிக்கவும் மற்றும் மத்திய-மாகாண ஒத்துழைப்பை மேம்படுத்தவும் சீரான இடைவெளியில் இந்த மாநாடு கூட்டப்படல் வேண்டும். முதலமைச்சர்கள் மாநாட்டிற்கு பிரதமர் தலைமை வகிப்பார்.

சமுதாயப் பேரவைகள் ( Community councils) :

அரசாங்கத்தின் பல்வேறு அடுக்கு நிலைகளிலும், வேறுபட்ட புவியியல்சார் பகுதிகளிலும், அத்தகைய பகுதிகளுக்குள் சிறுபான்மையினராக உள்ள சமூகங்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் இத்தகைய சமுதாயப் பேரவைகள் உருவாக்கப்படுவதை அரசியலமைப்பு ஏற்பாடுகள் மூலம் உறுதி செய்யப்படல் வேண்டும்.

மொழி

சிங்களமும் தமிழும் இலங்கையின் உத்தியோகபூர்வ மொழிகளாக இருக்கவேண்டும். ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கவேண்டும் என இந்த முன்மொழிவு கூறினாலும் தமிழ் மொழி அமுலாக்கம் குறித்து அரசியலமைப்பில் இறுக்கமான சரத்துகள் சேர்க்கப்படுதல் வேண்டும்.

எது எவ்வாறாயினும் 1987ஆம் ஆண்டு அதிகாரப் பகிர்வு முறைமை ஒன்றாக மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதற்கு வலுசேர்க்கும் விதமாக, அதுவரை நடைமுறையில் இருந்த ‘கம்சபா’ முறைமை பிரதேச சபை முறையாக மாற்றப்பட்டபோது, கம்சபா முறைமையில் உள்வாங்கப்பட்டிருக்காத மலையகப் பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்ற பிரதேச சபைச் சட்டத்திலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

எனவே, புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது எத்தகைய அதிகாரப்பகிர்வு முறைமையாயினும் அது நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் ஏற்புடையதாகவும் அமைதல் வேண்டும் என கொள்கை வகுப்பாளர்களும் அரசியலமைப்பு நிபுணர்களும் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும்.