ராமன் விளைவு’க்காக சர்.சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது பலருக்கும் தெரியும். இந்தக் கண்டுபிடிப்பில் முக்கியப் பங்காற்றிய கே.எஸ்.கிருஷ்ணனைப் பற்றிப் பலருக்கும் தெரியாது. வத்திராயிருப்புக்கு அருகில் உள்ள விழுப்பனூர் என்ற குக்கிராமத்தில் 1898, டிசம்பர் 4-ம் தேதியன்று பிறந்தவர் கரியமாணிக்கம் ஸ்ரீனிவாச கிருஷ்ணன். இவர் தனது தொடக்கக் கல்வியை வத்திராயிருப்பில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில்தான் படித்தார். இரவு நேரங்களில் வானத்தில் மிளிரும் விண்மீன்களைக் காட்டி இவரது ஆசிரியர், கிருஷ்ணனுக்கு அறிவியல் ஆர்வத்தை ஊட்டினார்.
ஆரம்பக் கல்வியை வத்திராயிருப்பில் முடித்த பின்பு திருவில்லிபுத்தூர் குருஞானசம்பந்தர் உயர்நிலைப் பள்ளியில் கிருஷ்ணன் தனது அடுத்த கட்ட கல்வியைத் தொடர்ந்தார். அதன் பிறகு, மதுரை அமெரிக்கன் கல்லூரியிலும் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் மேற்படிப்பை முடித்தார். கிருஷ்ணன் சில காலம் வத்திராயிருப்பு இந்து மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகவும் பணியாற்றினார்.
அவரது நினைவாக இந்து உயர்நிலைப் பள்ளியில் அறிவியல் ஆய்வகமும் அவரது உருவச் சிலையும் இன்றும் உள்ளன. அதன் பிறகு, அவருக்கு சென்னை கிறித்துவக் கல்லூரியில் வேதியியல் துறையில் செய்முறை விளக்கமளிப்பவராகப் பணி கிடைத்தது. இயற்பியலில் பட்டம் பெற்றிருந்தாலும் வேதியியலிலும் தான் சளைத்தவரல்ல என்பதை கிருஷ்ணன் நிரூபித்தார்.
அணு ஆற்றல் ஆணையம், பல்கலைக்கழக மானியக் குழு, அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் போன்ற அத்தனை முன்னோடி அமைப்புகளிலும் கிருஷ்ணனின் பங்களிப்பு இருந்தது. அவர் தனது அறிவியல் கருத்துகளைத் தமிழில் அழகாகவும் எளிமையாகவும் எடுத்துரைக்க முடியும் என்பதைத் தீவிரமாக நம்பினார். சிக்கலான அறிவியல் கருத்துகளைக்கூடத் தமிழில் எளிமையாக எடுத்துரைக்க முடியும் என்ற எண்ணத்தைத் தனக்கு விதைத்தது, தனது பள்ளி அறிவியல் ஆசிரியர் திருமலைக்கொழுந்து என்பதை கிருஷ்ணன் தான் எழுதிய கட்டுரை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
கே.எஸ்.கிருஷ்ணன் தமிழ், சம்ஸ்கிருதம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் நல்ல தேர்ச்சிபெற்றிருந்தார். அவர் நல்ல விளையாட்டு வீரரும்கூட. டென்னிஸ் விளையாட்டிலும் கால்பந்திலும் அளவு கடந்த ஆர்வம் கொண்டவர். கிருஷ்ணன், 1920-களில் கல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் வளர்ச்சிக் கழகத்தில் இணைந்தார். அந்தக் காலகட்டத்தில்தான் கிருஷ்ணனின் பங்களிப்போடு சர்.சி.வி.ராமன் ‘ஒளிச்சிதறல் விளை’வைக் கண்டுபிடித்தார். ‘ஒளிச்சிதறல் விளை’வைக் கண்டறிவதில், கே.எஸ்.கிருஷ்ணன் அளவுகடந்த ஈடுபாட்டைக் காட்டினார். தினசரி காலை நடைப்பயிற்சி முடித்த பின்பு, குளிர்ந்த நீரில் குளித்து முடித்து, காலை 6 மணிக்கு முன்பாகவே ஆய்வகத்தில் இருப்பது கிருஷ்ணனின் அன்றாட நடவடிக்கையாகும்.
சர்.சி.வி.ராமனுடன் இணைந்து, ஒளிவிலகல் சம்பந்தமான 20-க்கும் மேற்பட்ட கட்டுரைகளை ‘நேச்சர்’ இதழில் கிருஷ்ணன் எழுதியுள்ளார். காந்தப் படிகங்கள் உள்ளிட்டவற்றைப் பற்றி ஆய்வுசெய்து ஏராளமான கட்டுரைகளை கிருஷ்ணன் எழுதியுள்ளார். ‘ஒளிச்சிதறல் விளை’வைக் கண்டுபிடித்ததற்காக கிருஷ்ணனின் வழிகாட்டியும் ஆலோசகருமான சர்.சி.வி.ராமனுக்கு 1930-ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
பிறகு, அந்தக் கண்டுபிடிப்பு சர்.சி.வி.ராமன் பெயரிலேயே அழைக்கப்படலானது. நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி.ராமன், ‘‘ராமன் விளைவைக் கண்டறிந்ததில் கிருஷ்ணனின் பங்களிப்பு அளப்பரியது’’ என்று பாராட்டினார். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ராமன் விளைவைப் பெருமைப்படுத்தும் விதமாக பிப்ரவரி 28-ம் தேதியை அறிவியல் தினமாகக் கொண்டாடுகிறோம்.
கிருஷ்ணனும் “சர்.சி.வி.ராமனுடன் தான் பணிபுரிந்த நாட்கள் தனக்கு மிகுந்த மனநிம்மதியை அளித்தவை’’ என்று கூறினார். அதன் பிறகு, டாக்கா பல்கலைக்கழகத்தில் கிருஷ்ணன் பணிபுரிந்தபோது, காந்தத்தன்மை பற்றி ஆய்வுகளை மேற்கொண்டார். மீண்டும் அவர் கல்கத்தாவுக்குத் திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. பிறகு, கிருஷ்ணனுக்கு அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பணி கிடைத்தது.
அலகாபாத் பல்கலைக்கழகத்தில் கிருஷ்ணன் பணியாற்றிய காலத்தில் அவரைச் சந்திக்க ஜவாஹர்லால் நேரு வருவதுண்டு. கிருஷ்ணனின் பேச்சை நேரு மிகவும் ரசித்துக் கேட்பார். கிருஷ்ணனைப் பற்றி நேரு குறிப்பிடும்போது ‘‘கிருஷ்ணன் மிகச் சிறந்த அறிவியலர் மட்டுமல்ல, அதைக் காட்டிலும் மேலானவர். அவர் முழுமையான குடிமகன், ஒருங்கிணைந்த நற்பண்புகள் கொண்ட நிறை மனிதர்’’ என்று பாராட்டினார்.
கிருஷ்ணனின் ஆர்வம் அறிவியல் ஆய்வுகளோடு நின்றுவிடவில்லை. இலக்கியம், தத்துவம் என்று நீண்டுகொண்டே சென்றது. அவர் தமிழில் எழுதிய ‘நான் விஞ்ஞானத்தில் ஈடுபட்ட விதம்’ என்ற கட்டுரையைப் படிப்பவருக்கு உடனே அறிவியல் ஆர்வம் ஏற்பட்டுவிடும். ‘சூரிய சக்தி’ என்ற கட்டுரையும், ‘பூமியின் வயது என்ன?’ என்ற கட்டுரையும் கிருஷ்ணனின் ஆழமான அறிவியல் சிந்தனைகளை வெளிப்படுத்துபவை.
அணு ஆயுதத்துக்கு எதிராக, சமாதான நோக்கில் உருவான ‘பக்வாஸ் இயக்கம்’ போன்ற பல்வேறு தளங்களிலும் கிருஷ்ணன் பங்காற்றியிருக்கிறார். கிருஷ்ணன் 1940-ல் பிரிட்டனில் உள்ள ராயல் சொசைட்டியின் ஃபெலோவாகத் தேர்வுசெய்யப்பட்டார். 1954-ல் இந்தியாவின் ‘பத்ம பூஷண்’ விருதும் பெற்றார். தேசிய இயற்பியல் ஆராய்ச்சி கமிட்டியின் இயக்குநராகவும், சுதந்திர இந்தியாவில் பிரதமரின் முதல் அறிவியல் ஆலோசகராகவும் கிருஷ்ணன் பதவி வகித்திருக்கிறார்.
கிருஷ்ணனைப் பெருமைப்படுத்தும் விதமாக, அவர் பிறந்த ஊருக்கு அருகில் உள்ள கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் உள்ள அரங்கத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டு, அரங்கத்தின் முன்பு அவரது சிலை நிறுவப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் ஒரு சாலைக்கு கிருஷ்ணனின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. கே.எஸ்.கிருஷ்ணனைப் பற்றிய வரலாறு பள்ளிப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். அறிவியல் துறையில் ஏற்படும் முன்னேற்றம் தேசத்தை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும். அதற்கு கே.எஸ்.கிருஷ்ணன் போன்ற உத்வேகமிக்க அறிவியலர்களை நம் முன்னுதாரணங்களாகக் கொண்டு நடைபோடுவது முக்கியம்.
– எஸ்.ராஜசேகரன், தலைமை ஆசிரியர், இந்து மேல்நிலைப் பள்ளி, வத்திராயிருப்பு. தொடர்புக்கு: watrapian@gmail.com
டிசம்பர் 4: கே.எஸ்.கிருஷ்ணன் பிறந்த நாள்