ஐஎம்எப் அமைப்பின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய பெண் நியமனம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த கீதா கோபிநாத், சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக 3 ஆண்டாக பணியாற்றி உள்ளார்.

ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதியத்தின் முதன்மை துணை நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இது, சர்வதேச நிதியத்தில் 2-வது இடத்தில் உள்ள உயர் பதவியாகும்.
உலகப் பொருளாதாரத்துக்கு உதவுவதில் கீதா கோபிநாத்தின் அறிவுபூர்வமான தலைமையை அங்கீகரிக்கும் வகையிலும், பொருளாதார மந்தநிலையில் இருந்து உலகத்தை விடுவிக்க பாடுபட்டதற்காகவும் அவருக்கு இந்த பதவி அளிக்கப்படுகிறது என ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜிவா தெரிவித்துள்ளார்.
கீதா கோபிநாத் ஏற்கனவே சர்வதேச நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணராக 3 ஆண்டாக பணியாற்றியவர். இவர் அமெரிக்கவாழ் இந்திய பெண்மணி ஆவார். அப்பதவியை வகித்த முதலாவது பெண்ணும் இவரே ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.