அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டரான மேக்ஸ்வெல் சமீபகாலமாக பேட்டிங்கில் ஜொலிக்காததால் அணியில் இடம் பிடிக்கமுடியவில்லை. இலங்கை, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அடுத்து நடைபெறும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கான அவுஸ்ரேலியா அணிக்கு மேக்ஸ்வெல் அழைக்கப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் மேக்ஸ்வெல் அளித்த ஒரு பேட்டியில், ‘ஷெப்பீல்டு ஷீல்டு போட்டியில் விக்டோரியா அணிக்காக விளையாடுகையில் கப்டனும், விக்கெட் கீப்பருமான மேத்யூ வேட்டுக்கு பிறகு தான் எனக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கமாக விக்கெட் கீப்பர்கள் பின் வரிசையில் தான் களம் இறங்குவார்கள்.
முன்கூட்டியே மேத்யூவேட் களம் இறங்கியதால் தான் அவருக்கு டெஸ்ட் அணியில் இடம் கிடைத்தது. நான் கடைசி கட்டத்தில் களம் இறங்குவதால் பேட்டிங் செய்ய போதிய வாய்ப்பை பெறமுடியவில்லை.
இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3–வது டெஸ்ட் போட்டிக்கான அவுஸ்ரேலியா அணியில் இடம் பிடிக்க முடியாமல் போய்விட்டது’ என்று விமர்சனம் செய்து இருந்தார்.
மேக்ஸ்வெல்லின் இந்த கருத்து சர்ச்சையாக வெடித்து இருக்கிறது. சக வீரரை விமர்சனம் செய்ததற்காக மேக்ஸ்வெல்லுக்கு, அவுஸ்ரேலிய அணியின் பயிற்சியாளர் டேரன் லீமான், கப்டன் ஸ்டீவன் சுமித் உள்பட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் அணியின் சக வீரரை அவமரியாதையாக விமர்சித்த குற்றத்துக்காக மேக்ஸ்வெல்லுக்கு அபராதம் விதித்து அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal