மன்னாரில் எரிவாயு எடுக்கும் வேலைத்திட்டத்தை அரசு இந்தியாவிடமே கொடுக்க வேண்டும். மாறாக சீனாவிடம் கொடுத்தால் கடுமையான எதிர்ப்புகளைச் சந்திக்க நேரிடும். இதுவே எமது நிலைப்பாடு என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி.யான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மின்சக்தி அமைச்சு, வலுசக்தி அமைச்சு ஆகியவற்றின் நிதி ஒதுக்கீடுகள் மீதான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில்,
வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தனது கருத்துகளை வெளிப்படையாகச் சொல்பவர். மன்னாரில் இருக்கின்ற எரிவாயு மூலம் இந்த நாட்டின் கடனை அடைக்க முடியுமென தெட்டத் தெளிவாக தனது கருத்தை தெரிவித்திருந்தார். நாங்கள் மன்னாரைச் சார்ந்தவர்கள். எங்களுடைய பிரதேசத்தில் எரிவாயு இருக்கின்றது என்பது
பெருமைப்படக்கூடிய விடயம். அதேவேளை இதனால் மக்களுக்குள்ள நன்மைகள் என்ன என்பது தொடர்பிலும் இந்த விடயத்தை கையாள யாருக்கு, அதாவது எந்த நாட்டுக்கு கொடுக்கப் யோகின்றீர்கள் என்பதும் கேள்வியாகவுள்ள விடயம். இது தொடர்பில் நீங்கள் வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.
சீனா என்றால் யாருமே பேச மாட்டார்கள். சீனா சம்பந்தமாக என்ன நடந்தாலும் கருத்துக்களைச் சொல்வதில் ஆளும் கட்சி மௌனமாகவே உள்ளது. ஆனால் இந்தியா,அமெரிக்கா என்றால் துள்ளிக்குதிக்கின்ற ஒரு செயற்பாடு காணப்படுகின்றது.
எங்களைப் பொறுத்த மட்டில் இந்த எரிவாயு உற்பத்தியைப் பெருக்குவதற்கான ஒரு வேலைத்திட்டத்தை நீங்கள் செய்வதாக இருந்தால் அது இந்தியாவிடமே கொடுக்கப்பட வேண்டும் என்பதை ஆணித்தரமாக நான் சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். அதனை விடுத்து சீனாவிடம் கொடுப்பதாக இருந்தால் அங்கே நீங்கள் எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டி வரும் என்பதையும் நான் இங்கு சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன். இது எச்சரிக்கை அல்ல. இது தான் உண்மை, யதார்த்தம்.
இந்த எரிவாயு எடுக்கும் வேலைத்திட்டத்தை இந்தியாவிடம் கொடுத்து அதன் மூலம் கிடைக்கின்ற நன்மைகளை இந்த நாடு அனுபவிக்க வேண்டும் என்றார்.