ஐஸ்வர்யா ராய் இப்போது மிகுந்த உற்சாகமாய் காணப்படுகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் ‘ஏ தில் ஹே முஷ்கில்’ படத்தின் அதிரடி வெற்றி அவருக்கு அதிக மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது. தனக்காக வடிவமைக்கப்படும் விசேஷ கவுனை அணிந்து அழகு தேவதையாக பொது இடங்களில் வலம் வரும் அவர், பரபரப்பு காட்டாமல் எல்லோருடனும் இயல்பாக பேசுகிறார். எண்ணற்ற செல்பிகளுக்கு ‘போஸ்’ கொடுக்கிறார்!
“எப்போதுமே, அவசர அவசரமாக தலையைக் காட்டிவிட்டுப் போவதும், படபடவென்று பேசிவிட்டு கிளம்பிவிடுவதும் எனக்குப் பிடிக்காது. நான் ஈடுபடும் ஒவ்வொரு விஷயத்துக்கும் போதுமான நேரத்தை ஒதுக்க விரும்புவேன். எனக்கும் மற்றவர்கள் அதுபோல நேரம் ஒதுக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன்” என்று விளக்கம் தருகிறார்.
தனது திரை உலக அறிமுகம் பற்றி அவர் கூறுகையில்..
“நான் எப்போதுமே என் இதயம் சொன்னபடிதான் செயல்பட்டிருக்கிறேன். கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவள் நான். அந்தவகையில், சினிமாவில் நடிப்பது என்பது நான் எடுத்த கடினமான முடிவு. நான் ஒரு கவர்ச்சிக் கதாபாத்திரத்தில் எனது திரையுலகப் பயணத்தைத் தொடங்கியிருக்கலாம். ஆனால் நான் அறிமுகத்துக்கு ‘இருவர்’ படத்தைத் தேர்வு செய்தேன். மணிரத்னம் இயக்கத்தில், ஒரு வித்தியாசமான படத்தில் நடித்ததில் அப்போது நான் ரொம்ப சந்தோஷம் அடைந்தேன்.”
தமிழகத்தின் இரு பெருந்தலைகளை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட ‘இருவர்’, வசூலில் சோபிக்கவில்லை. ஆனால் ஐஸ்வர்யா உள்ளிட்ட அப்படத்தின் நடிக, நடிகைகள், தங்களின் நடிப்புக்காகப் பாராட்டப்பட்டனர்.
அதன் பின்பு கடந்துபோன 20 ஆண்டுகளில் ஐஸ்வர்யா 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டார். அவற்றில், ‘தி பிங் பேந்தர் 2’ ‘புரொவோக்டு’, ‘தி மிசஸ் ஆப் ஸ்பைசஸ்’ போன்ற ஆலிவுட் படங்களும் அடக்கம். ஆனால் படங்களை விட, பல சர்வதேச ‘பிராண்டுகளின்’ விளம்பரத் தூதராக இருப்பதுதான் இவருக்கு அதிக உலகப் புகழைத் தேடித் தந் திருக்கிறது. உதாரணமாக, ‘லாங்கின்ஸ்’ கைக்கடிகாரம்.
“அந்த நிறுவனத்துடன் நான் நீண்டகாலமாக இணைந்து செயல்பட்டு வருகிறேன். இந்த நிறுவனம் என்னைத் தங்களின் சர்வதேச விளம்பரத் தூதராக இருக்க முடியுமா என்று கேட்டு 1999-ல் அணுகியபோது, நான் உடனடியாகப் புன்னகையுடன் சம்மதித்தேன். அதற்குக் காரணம், கைக்கடிகாரத் தயாரிப்பில் அவர்களுக்கு 180 ஆண்டுகால வரலாறு இருக்கிறது. சர்வதேச ஜாம்பவான்கள் ஏற்கனவே அதற்கு விளம்பரத் தூதர்களாக இருந்திருக்கிறார்கள். எனது திரை- விளம்பர உலக வாழ்வின் ஆரம்பத்திலேயே இதுபோன்ற ஒரு நிறுவனத்தில் இருந்து வந்த அழைப்பு எனக்கு சந்தோஷ திகைப்பை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட கைக்கடிகார நிறுவனத்துடனான தொடர்பு, தற்போது ஒரு குடும்ப உறவாகவே மாறிவிட்டது” -என்று வார்த்தைகளில் நிறைவை வழியவிடுகிறார், ஐஸ்வர்யா.
விமர்சகர்கள் தன்னைப் பற்றி என்ன கூறுவார்கள் என்று யோசிக்காமல், புதிய புதிய சோதனை முயற்சிகளில் இறங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார், ஐஸ். இதோ இந்த ‘ஏ தில் ஹே முஷ்கில்’ படத்தில்கூட அதிரடியான கவர்ச்சி வேடம்.
“நான் வருடத்துக்கு மூன்று, நான்கு படங்களில் நடிக்கிறேன் என்றால், ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் வித்தியாசமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் 2002-ம் ஆண்டில் ‘தேவதாஸ்’ படத்தில் நடித்த பின்பு, அடுத்து மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட் படத்தில்தான் நடிப்பேன் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் நான், ‘சோக்கர் பாலி’, ‘ரெயின்கோட்’ போன்ற சிறிய படங்களில் நடித்தேன். கடந்த ஆண்டில்கூட சில வித்தியாசமான படங்களில் நடித்தேன்..” என்று ஐஸ் எடுத்துச் சொல்கிறார்.
பாலிவுட்டின் வசூல் சாதனை படங்களில் ‘ஏ தில்…’ படமும் இணைந்திருக்கிறது. அந்த படத்தின் முதல் ஒரு மாத வசூல், ரூ.182 கோடியை எட்டியிருக்கிறது.
இப்படத்தின் கவர்ச்சிக் கதாபாத்திரத்தில் வெகு இயல்பாக, வெகு நளினமாக நடித்திருக்கிறார் ஐஸ்.
“கரண் ஜோகர் இப்படத்தின் கதையுடன் என்னிடம் வந்தபோது, நான் தயாராக இருந்ததுபோல சம்மதித்துவிட்டேன். இதனை நண்பர்களுக்காக, நண்பர்களுடன் இணைந்து செய்த சினிமா என்று கூறலாம்” என்கிறார்.
இப்படி திரைப்படங்கள், விளம்பரங்கள் தாண்டி இவரது பெரும்பாலான நேரத்தை எடுத்துக்கொள்பவர், மகள் ஆரத்யா. பள்ளி செல்லும் நேரம் போக மற்ற நேரங்களில் அம்மாவின் படப்பிடிப்புகள், அவருடன் கேரவனில் படிப்பு வேலைகள் என்று கழிக் கிறார், ஆரத்யா.
“கேரவன்தான் அவளுக்கு ‘அம்மாவின் ஆபீஸ்!” என்று சிரிக்கிறார், ஐஸ்.
“ஆரத்யாவின் ஹோம்-ஒர்க், வீட்டில் செய்ய வேண்டிய பாட சம்பந்தப்பட்ட வேலைகள் எல்லாவற்றையும் நாங்கள் இங்கே கேரவனுக்கு கொண்டு வந்துவிடுவோம். அதன்மூலம், நாங்கள் ஒன்றாக அதிக நேரத்தைக் கழிக்க முடிகிறது” என்று சொல்லும் ஐஸ், இன்னும் ஒரு விஷயத்தையும் கூறுகிறார்…
“அவள் குட்டிக் குழந்தையாக இருந்தபோது, ஊரெங்கும் சிரிக்கும் எனது விளம்பர பேனர்களைக் காட்டி, ‘அதோ பாரு, அம்மா உன்னைப் பார்த்து கையாட்டுறாங்க’ன்னு சொல்வேன். ஆனால் நான் அவளுடன் அமர்ந்து எனது ஒரு படத்தைக் கூடப் பார்த்ததில்லை. ஒருவேளை ஆரத்யா எனது பாடல்கள், பட டிரெய்லர்களை போகிறபோக்கில் பார்த்திருக்கலாம். நான் எப்படி சாதாரணமாக வளர்க்கப்பட்டேனோ அப்படித்தான் அவளையும் சாதாரணமாக வளர்க்கிறேன்” என்கிறார்.
தாய்மைப் பொறுப்பு, படங்கள், விளம்பரங்களில் ஐஸ்வர்யா நடிப்பதை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை. எல்லாவற்றையும் வெகு லாவகமாகக் கையாள இவர் கற்றுக்கொண்டுவிட்டார்.
“அன்றாட வாழ்வில் நாம் எது எதற்கு எவ்வளவு நேரம் ஒதுக்க வேண்டும் என்று திட்டமிட்டுக்கொண்டால் போதும், எல்லாவற்றையும் சிறப்பாக செய்யலாம். ஆரத்யா பிறந்தது முதலே நான் அப்படித்தான் தெளிவாகத் திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறேன். எப்போதுமே ஏதாவது புதுமையான, திடீர் ஆச்சரியமான விஷயத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்க வேண்டும் என்பது எனது ஆசை” என்கிறார்.
எங்கு போனாலும் தனியாக, விசேஷமாக கவனிக்கப்படு கிறார், ஐஸ். இப்படி கோடிக்கணக்கானவர்கள் அவர் மீது கொட்டும் அன்பு சங்கடமூட்டுகிறதா?
“நான் ஒரு சராசரி பெண்ணாக இருக்கத்தான் முயற்சிக் கிறேன். ஆனால் அளவுக்கு மீறி கவனிக்கப்படுகிறேன். எல்லோரும் என் மீது பொழியும் அன்புக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி. ஆனால் அது சமயங்களில் கூச்சத்தை ஏற்படுத்துகிறது. மக்களின் பாராட்டு, கொஞ்சம் ‘ஓவர்’தான்!” என்று சிரிப்புடனே முடிக்கிறார் ஐஸ்வர்யா ராய்.