சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குடபட்ட மாதகல் கிழக்கு கிராம அலுவலர் பிரிவுகளில் இடம்பெறவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் பொதுமக்கள் மற்றும் அரசியல்வாதிகளின் பலத்த எதிர்ப்பினால் இன்று கைவிடப்பட்டது.
மாதகல் கிழக்கு ஜே /150 கிராம அலுவலர் பிரிவில் மூன்று பரப்புக் காணியை சுவீகரிக்க வந்த நில அளவை திணைக்களத்தினரை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது “நமது இந்த காணிகளில் கடல் அரிப்பு ஏற்பட்ட போது இந்த காணியை பாதுகாக்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? எங்களுடைய வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் இவ்வாறு கடற் தொழில்ரீதியான காணிகளை அளவீடு செய்வதை நிறுத்துங்கள்” எனவும் பொதுமக்களால் கோஷம் எழுப்பப்பட்டது.
மேலும் பிரதேச செயலகத்தில் முடிவினை எடுத்து விட்டு இவ்வாறு காணி அளவில் மேற்கொள்வது தவறு என கூறப்பட்ட நிலையில் காணி அளவீடு கைவிடப்பட்டது.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ. சரவணபவன், மாவை சேனாதிராஜா, வலி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபநேசன், வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளர் சுகிர்தன், பிரதேச சபை உறுப்பினர்களான ஜிப்ரிக்கோ, சிவனேஸ்வரி, ரமணன்.அனுசன், வலி மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான சச்சிதானந்தம், இலங்கேஸ்வரன், ஸ்ரீ ஜீவா, மற்றும் கரைச்சி பிரதேச சபை உறுப்பினரான ஜீவன் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான சஜீவன், கலையமுதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது போராட்டத்தில் பங்கு கொண்டவர்களை மிரட்டும் விதத்தில் கடற்படையினர் காணொளி படம் எடுத்தோடு வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.