ஆஸ்திரேலியா: Orphan Relative விசா: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

ஆஸ்திரேலியாவில் குடியேற விரும்புபவர்கள் விண்ணப்பிப்பதற்கென பல விசா பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்று Orphan Relative விசா(subclass 117) ஆகும். இந்த விசாவிற்கு விண்ணப்பிக்க யார் தகுதியானவர்கள் என்பதைப் பார்ப்போம்.

ஏனைய ஆஸ்திரேலியா விசா பிரிவுகளைப் போலவே Orphan Relative விசாவும் குறிப்பிட்ட சில நிபந்தனைகளைக் கொண்டுள்ளது.

இந்த நிபந்தனைகளைப் பூர்த்திசெய்பவர்கள் மாத்திரமே இவ்விசாவிற்கு விண்ணப்பிப்பதற்குத் தகுதிபெறுவர்.

இதன்படி வெளிநாடு ஒன்றில் பிறந்த குழந்தையொன்றின் பெற்றோர் இறந்துவிட்டால், அல்லது காணாமல்போய்விட்டால் அல்லது பெற்றோரால் அந்தக் குழந்தையை பராமரிக்க முடியாத நிலை காணப்பட்டால், அந்தக் குழந்தை ஆஸ்திரேலியாவிலுள்ள தனது உறவினருடன் வசிப்பதற்கென இந்த விசாவுக்கு விண்ணப்பிக்க முடியும்.

அதேநேரம் இவ்விசாவுக்கு விண்ணப்பிப்பவர் 18 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் என்பதுடன் ஆஸ்திரேலியாவிலுள்ள உறவினருடன் வாழ்வதற்கு அவர் விருப்பம் தெரிவிக்கவும் வேண்டும்.

அதுமட்டுமல்லாமல் Orphan Relative விசாவிற்கு தகுதிபெறவேண்டுமெனில் இவ்விசாவுக்கு விண்ணப்பிப்பவர் ஆஸ்திரேலியாவுக்கு வெளியே இருக்க வேண்டுமென்பதுடன் தகுதி வாய்ந்த உறவினரால் ஸ்பொன்சர் செய்யப்பட வேண்டும்.

குறிப்பாக அந்ந உறவினர் ஆஸ்திரேலிய குடியுரிமை அல்லது நியூசிலாந்து குடியுரிமை கொண்டவராக அல்லது ஆஸ்திரேலிய நிரந்தர வதிவிட உரிமை கொண்டவராக இருக்க வேண்டும்.

அத்துடன் அந்நபர் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் ஸ்பொன்சர் செய்யப்படுபவரின் சகோதரன் அல்லது சகோதரி, தாத்தா, பாட்டி, மாமா, மாமி உட்பட ஏதேனுமொரு நெருங்கிய உறவுமுறை கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

ஸ்பொன்சர் செய்யும் நபர் அதற்கான அங்கீகாரத்தை உள்துறை அமைச்சிடமிருந்து பெறவேண்டும் என்பதுடன் குறித்த நபர் மீது சிறுவர் தொடர்பிலான எவ்வித வழக்குகளோ அல்லது குற்றத்தீர்ப்புகளோ இருக்கக்கூடாது. மேலும் police clearance ஒன்றை சமர்பிக்குமாறும் உள்துறை அமைச்சு கோரக்கூடும்.

குழந்தையொன்றின் பெற்றோர் இறந்துவிட்டால், காணாமல் போய்விட்டால் அல்லது பெற்றோரால் அந்தக் குழந்தையை பராமரிக்க முடியாத நிலை காணப்பட்டால் இதற்கான ஆதாரங்களாக மருத்துவ சான்றிதழ், நீதிமன்ற கடிதங்கள் மற்றும் ஆவணங்கள் மற்றும் மரண சான்றிதழ் போன்றவற்றை விசா விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆதரவற்ற ஒருவர் நிரந்தரமாக ஆஸ்திரேலியாவில் குடியேறுவதற்கான வழியாக Orphan Relative விசா காணப்படுகிறது.