ஜெயலலிதாவின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளது- ரிச்சர்டு பீலே

முதலமைச்சரின் உடல்நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் தொடர்ந்து சிறப்பான சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை மற்றும் அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து அறிக்கை மூலம் தெரியப்படுத்தி வந்தது. முதல்வர் உடல்நலம் பெற்றுவிட்டதாகவும், விரைவில் வீடு திரும்ப வாய்ப்பு உள்ளதாகவும் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டதால் தொண்டர்கள் மிகுந்த நம்பிக்கையில் இருந்தனர்.

ஆனால், நேற்று மாலை திடீரென முதல்வருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அதன்பின்னர் மீண்டும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவதாக தகவல் வெளியானதால் கட்சியினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அப்பல்லோ மருத்துவமனை முன்பு விடிய விடிய காத்து நின்ற தொண்டர்கள், முதலமைச்சர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்தனர். இதனால் மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

முதல்வரின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக அப்பல்லோ இன்று பிற்பகல் புதிய அறிக்கை வெளியிட்டதால் தொண்டர்கள் கதறி அழுதனர்.

இந்நிலையில், முதல்வருக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பீலே ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதில், முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை தற்போது மிகவும் மோசமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், உலகின் மிக உயர்ந்த உயிர் காக்கும் சிகிச்சை வழங்கப்பட்டதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.