Home / செய்திமுரசு / கொட்டுமுரசு / தமிழக நாடோடிகளின் அவலங்கள்

தமிழக நாடோடிகளின் அவலங்கள்

‘தமிழக நாடோடிகள் கூட்டமைப்பு’ தங்களை ‘நாடோடிப் பழங்குடியினர்’ (Nomadic Tribes) எனத் தனி இனத்தவராகக் கருதவும், கல்வி, வேலைவாய்ப்பில் 5% இடஒதுக்கீடு வேண்டியும் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து கோரிக்கை வைத்துவருகிறது. இது சாதி அட்டவணைப்படுத்துதலின் போதாமையையே சுட்டிக்காட்டுகிறது. நாட்டின் பூர்வகுடிகளான இவர்களை அலைகுடிகள், காலோடிகள் எனவும் அழைக்கலாம்.

சங்க காலத்தில் பாணர், பொருநர், விறலியர், பாடினியர், கூத்தர், அகவுநர் போன்ற நாடோடிக் குழுக்கள் இருந்தது, சங்க இலக்கியங்கள் வழி அறியப்படுகிறது. இவர்கள் குறவர், எயினர், ஆயர், உழவர், பரதர் போன்ற நிலைகுடிகளின் கொடையில், அலைகுடிகளாக வாழ்ந்தனர். வீரயுக அலைகுடிகளான ‘பாணர்’ சமூகத்தில் மட்டும் துடியர், கோடியர், வயிரியர், கண்ணுளர் போன்ற 17 வகைக் குடிகள் இருந்ததாக ‘பாணர் இனவரைவியல்’ நூலில் மானுடவியல் அறிஞர் பக்தவத்சல பாரதி குறிப்பிடுகிறார்.

நிலைகுடிகளுக்குக் கலைச்சேவை செய்த இவர்கள், ஜந்து நிலங்களிலும் பயணித்திருக்கிறார்கள். பின்னர், இடைக்காலத்தில் மன்னர்களின் புகழ்பாடி வாழ்ந்த சில நாடோடி இனக்குழுக்களையும், காலனிய ஆட்சிக் காலத்தில் சரக்கு நாடோடிகள், வணிக நாடோடிகள், குறி சொல்லிய மற்றும் நிகழ்த்துக்கலை சார்ந்த நாடோடிகள் இருந்ததையும் வரலாற்று ஆய்வாளர்கள் இனங்காட்டுகிறார்கள்.

கணினி யுகத்திலும் நாடோடிக் குழுக்கள் இருப்பது நமக்கு வியப்பளிக்கலாம். 30 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், இந்திய அளவில் ஏறத்தாழ 15 கோடி நாடோடிகள் (அன்றைய மக்கள்தொகையில் 6%) 120 குழுக்களுக்கும் மேலாக இருக்கின்றனர். இன்று, தமிழகத்தில் 25-க்கும் மேற்பட்ட நாடோடிக் குழுக்களின் மக்கள்தொகை 10 லட்சம். பொதுவாக, இவர்கள் ஊருக்கு வெளியே, சாலை ஓரங்களில் தற்காலிக முகாமிட்டு, சில மாதங்கள் வாழ்ந்துவிட்டு, அடுத்த இடத்துக்கு அலைகுடிகளாக இடம்பெயர்கின்றனர்.

சாதியால் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர் ஆகியோருக்கும் பழங்குடியினருக்கும் இடையேயான அடிப்படை வேறுபாடு என்ன? குறிப்பாக, சிலரைத் தாழ்த்தப்பட்டவர்களாக நம் சமூகம் ஒதுக்கி வைத்திருக்கிறது. ஆனால், காலங்காலமாகத் தனித்த சூழ்நிலையில் வாழும், சமூகப் பொது ஓட்டத்துக்கு அப்பாற்பட்டவர்களே பழங்குடிகள் எனும் பூர்வகுடிகள். வனவாசிகள் அல்லது ஆதிவாசிகள் என அறியப்படும் இப்பழங்குடியினரை அறிவியல் தொழில்நுட்பமும் அணுகவில்லை; சாதியமும் தீண்டவில்லை.

சமூகநீதி அடிப்படையில், இந்திய அரசமைப்புச் சட்டம் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் என்று வகைப்படுத்தி, கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு வழங்கியது. பின்னர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இடஒதுக்கீடு விரிவுபடுத்தப்பட்டது.

நாடோடிகளைப் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராகப் பாவித்தே சான்றிதழ் வழங்கப்படுகிறது. நாடோடிகளின் ஒரு பிரிவினரான வாக்ரிகள் (நரிக்குறவர்கள்) மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களாக வகைப்படுத்தப்படுகிறார்கள். சிலரைக் காட்டுநாயக்கர் என வகைப்படுத்திப் பழங்குடியினர் சான்றிதழும் வழங்கப்படுகிறது.

அரசின் இந்த மூன்று அட்டவணை வகைப்பாடுகளுக்குள் திணிக்க முடியாதவர்கள் நாடோடிகள். இவர்களிடம் சாதி இல்லை. எனவே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அவர்களை வகைப்படுத்துவதில் நியாயம் இல்லை. அலைகுடிகளான நாடோடிகள் நிலைகுடிகளான சீர்மரபினரும் இல்லை.

இவர்களைத் தாழ்த்தப்பட்டவர் என்ற வகைப்பாட்டிலும் பகுக்க முடியாது. அதே வேளையில், நாடோடிகள் மலைகளில் வாழ்கின்ற வனவாசிகளும் அல்லர். எனவே, இவர்களை பழங்குடியினர் என்றும் வகைப்படுத்த முடியாது. வனப் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களைக் கூறி, நாடோடிகளில் சிலர் மலைகளிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர். இவர்கள் சமவெளிப் பகுதியில் அலைகுடிகளாகத் திரிபவர்கள்.

தமிழ்நாட்டு நாடோடிகள் சிலர் அரசிடம் சாதிச் சான்றிதழ் கேட்டபோது, மாவட்ட ஆட்சியர்கள் இவர்களை ‘காட்டுநாயக்கர்’ என்று வகைப்படுத்திப் பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தனர். வேறு சில ஆட்சியர்கள் “காட்டுநாயக்கர்கள் எப்படி நாட்டில் வாழ முடியும்?” என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, சாதிச் சான்றிதழ் தர மறுத்தனர்! இங்குதான் சிக்கல் தொடங்குகிறது. நாடோடி இன மாணவர்கள் சிலர் பொதுத்தேர்வுகளில் 90%-க்கு மேல் மதிப்பெண்கள் எடுத்தபோதும், மேற்படிப்புக்குச் செல்ல முடியாத அவலம் நிலவுகிறது. காரணம், இவர்களிடம் சாதி, இருப்பிடச் சான்றிதழ்கள் இல்லை. நாடோடிகளைப் பிற்படுத்தப்பட்டவர், பட்டியலினத்தவர் அல்லது பழங்குடியினராக அட்டவணைப்படுத்துவதால், அந்தந்தப் பிரிவுகளில் எண்ணிக்கையிலும், சமூக, பொருளாதார நிலைகளிலும் வலுவாக உள்ளவரோடு இவர்களால் போட்டியிட முடியுமா?

‘தமிழக நாடோடிகள் கூட்டமைப்பு’ சார்பில் மதுரையில் முதலாவது மாநாடு 2010-ல் நடத்தப்பட்டது. இதில் சாட்டையடிக்காரர், பூம்பூம் மாட்டுக்காரர், குருவிபிடிப்போர், பாம்பாட்டிகள், நரிக்குறவர், நாட்டுவைத்தியர் எனப் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டு நாடோடிகள் தங்களுக்கான அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருப்பதன் வெளிப்பாடே ஆண்டுதோறும் கூட்டப்படும் இம்மாநாடுகள்.

இக்கூட்டமைப்பின் தலைவி மகேஸ்வரி கூறுகிறார்: “பழங்குடியினரில் மலையாளிகள், குறும்பர், இருளர், தோடர், ஊராளி போன்றவர்கள் மட்டும் பயன்பெறுகின்றனர். ஆனால், ‘காட்டுநாயக்கன்’ என்ற பட்டியலில் உள்ள பாம்பாட்டிகள் குருவிபிடிப்போர், குடுகுடுப்பைக்காரர்கள், ஆதியன் என்ற பெயரில் உள்ள பூம்பூம் மாட்டுக்காரர்கள், சோழகா என்ற பெயரில் உள்ள பாம்பாட்டிகள் போன்றவர்களால் அவர்களோடு போட்டிபோட முடியாத நிலை இருக்கிறது.”

நாடோடி இனத்தவருக்குத் தனி இடஒதுக்கீடு வழங்கினால்தான் வாழ்வில் முன்னேற முடியும் என்பதே இவர்களின் அழுத்தமான கோரிக்கை. மேலும், நாடோடி இனத்தவர் பின்வரும் கோரிக்கைகளைத் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர். நாடோடிப் பழங்குடியினருக்கு எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தக்கூடிய தேர்தல் அடையாள அட்டை, குடும்ப அட்டை வழங்க வேண்டும். நாடோடிகளின் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

கேட்பாரற்றவர்கள் என்பதால், இவர்கள் மீது பொய் வழக்குகள் அதிக எண்ணிக்கையில் பதிவாகி, அநியாயமாகச் சிறையில் அவதியுறுகின்றனர். பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர் பயன்பெறும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். நாடோடிகளின் கலாச்சாரத்தைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும். எனவே, அவர்களுக்கான தனி நலத் துறை உருவாக்கப்பட வேண்டும். தேசிய அளவில் நலவாரியம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், மாநில அளவில் இல்லை. இவர்களில் ஒரு பிரிவினரான வாக்ரிகளுக்கு (நரிக்குறவர்களுக்கு) மட்டுமே தமிழ்நாடு அளவில் நலவாரியம் உள்ளது.

எனவே, நாடோடிகளை ‘நாடோடிப் பழங்குடியினர்’ எனத் தனி இனமாக அடையாளப்படுத்துவதும், அவர்கள் மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்குவதுமே சமூகநீதி ஆகும். அதுவே, அரசின் சமூகநலத் திட்டங்கள் அவர்களுக்கு முழுமையாகச் சென்றடைய வழிவகுக்கும்.

– சி.பேசில் சேவியர், ‘பிலாசஃபி ஆஃப் மார்ஜின்ஸ்’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர். தொடர்புக்கு: basilboston2122@gmail.com

 

About குமரன்

Check Also

அரிய தமிழ்க் கல்வெட்டு திருகோணமலையில் கண்டுபிடிப்பு!

புகைபடர்ந்திருக்கும் இலங்கைத் தமிழரின் ஆதிகால, இடைக்கால வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டி வருவதில் தொல்லியற் கண்டுபிடிப்புக்களுக்கு முக்கிய இடமுண்டு. அக்கண்டுபிடிப்புக்களில் கல்வெட்டுக்கள் ...