உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பிரதான தற்கொலைதாரியான சஹ்ரான் ஹாசிம் உள்ளிட்ட கடும்போக்குவாதிகளை உடனடியாக கைது செய்யுமாறு 340 அறிக்கைகளை சமர்ப்பித்து கோரிக்கை விடுக்கப்பட்டன என நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது.
2015 ஆம் ஆண்டில் இருந்து 2019 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியிலேயே இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டது என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டதாக முன்னாள் அரச புலனாய்வு தலைமை அதிகாரி சிரேஷ்ட பிரதி காவல் துறை மா அதிபர் நிலந்த ஜயவர்தன தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் காவல் துறை மா அதிபரான வழக்கு இன்றும் (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான நாமல் பலல்லே, ஆதித்ய பட்டபெதிகே மற்றும் மொஹமட் இஸ்ஸதீன் ஆகியோர் முன்னிலையில் சாட்சி விசாரணை இன்று (24) ஆரம்பமானது.இதன் போதே நிலந்த ஜயவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சஹ்ரான் ஹாசிம் தொடர்பிலான சுமார் 340 அறிக்கைகளை அவ்வேளையில் பாதுகாப்பு செயலாளர், பொலிஸ்மா அதிபர் மற்றும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளிடம் சமர்ப்பித்து, அவர்களை கைது செய்யுமாறு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டது என முன்னாள் அரச புலனாய்வு தலைமை அதிகாரி சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
உயித்த ஞாயிறு தாக்கல் மேற்கொள்ளப்படும் வரை அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையென அவர் குறிப்பிட்டுள்ளார்.
வண்ணாத்துவில்லு பிரதேசத்தில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டமை மற்றும் மாவனெல்லையில் புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்பட்டமை போன்ற சம்பவங்களின் போது திரட்டிய புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில், சஹ்ரான் ஹாசிமுடன் சமய கடும்போக்குவாதிகளின் பெயர் மற்றும் முகவரியுடன் தகவல்களை வழங்கியதாக அவர் கூறியுள்ளார்.
அவ்வேளையில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு பேரவை கூட்டத்தின் போது பல சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு பொறுப்பாகவுள்ள அமைச்சர்களுக்கும் இது தொடர்பில் அறிவித்ததாக சிரேஷ்ட பிரதி காவல் துறை மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal