நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் சட்டப்புலமை தமிழ் மக்களுக்கு எதையும் பெற்றுக்கொடுத்திருக்கவில்லை எனத தெரிவித்த வடமாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன், அறைகளுக்குள் விளக்கேற்றி, படங்களை பிரசுரிப்பதை விடுத்து, பொது வெளிக்கு வர வேண்டும் எனவும் கூறினார்.
கிளிநொச்சி ஊடக மையத்தில், இன்று(21) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரைத்த அவர், நம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரை மாவீரர் தினம் எனவும் அதேபோல மே 18ஆம் திகதி பொதுமக்களுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் எனவும் தற்போது ஆட்சிக்கு வந்திருப்பவர்கள் இந்த இரண்டு நிகழ்வுகளையும் தடுத்து வந்திருக்கின்ற நிலையில், கடந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு முதல்நாள் சடுதியாக அந்த ஆடைத்தொழிற்சாலையில் கொரோனா தொற்று ஏற்ப்டுள்ளதாக செய்தியை கொண்டுவந்தார்கள் எனவும் கூறினார்.
தங்களுடைய நிகழ்வுகள், போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற பொழுது, கொரோனாவை சாட்டாக வைத்துக்கொண்டு, அவர்கள் பழிவாங்குகின்ற அல்லது குரள்வளையை நெரிக்கின்ற செயற்பாட்டை முன்னெடுத்த வருகின்றார்கள் எனத் தெரிவித்த அவர், ‘கடந்த மாவீரர் தினத்திலும் இவ்வாறு நீதிமன்ற தடைகளை எடுக்கப்பட்டிருந்தது. இம்முறையும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஓடியோடி இந்த தடைகளை நீதிமன்றங்களில் பெற்றுக்கொள்ள முயற்சித்துக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் இந்த தடையை பொலிஸார் கொண்டுவர விரும்பினால், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அவர்கள் கொண்டுவர முயற்சிக்க வேண்டும்’ என்றார்.
‘அது கொண்டுவர வேண்டுமாக இருந்தால், பாராளுமன்ற கெசட் நோட்டிபிக்கேசன் கொண்டுவரப்பட வேண்டும். ஆனால் குறிப்பிட்ட ஒரு இடத்தை சொல்லாமல், வெறுமன தொகுதியை அல்லது மாவட்டத்தை மையப்படுத்தி தடைகளை எடுத்து வருகின்றார்கள். இந்த விடயத்தை சவாலுக்கு உட்படுத்தக்கூடிய சட்டத்தரணிகள் குழாம் இருக்க வேண்டும். அந்த சட்டத்தரணிகள் குழாம் தமிழ்த் தேசியம் சார்ந்து விவாதிக்க வேண்டிய வேளை வந்திருக்கின்றது. மனமுவந்து சட்டத்தரணிகள் குழாம் இதற்கு தயாராக வேண்டும். நினைவுகூரல் என்பது மனித உரிமைக்குரிய ஒரு நிகழ்வு.
‘அந்த நினைவுகூரலுக்கு கடந்த அரசாங்கமும் எமக்கு அனுமதிக்கவில்லை. ஆனால், அவர்கள் கண்டும் காணாதும் இருந்தார்கள். அதனை எமது மக்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். ஆனால் இப்பொழுது அதற்கு அனுமதிக்காத வகையில் பல்வேறு தடைகள் ஏற்படுத்தப்படுகின்றன. தடுப்பதற்கான முயற்சிகள் கடந்த வாரமே எடுக்கப்பட்டிருக்கின்றது. வழமையாக எந்த கடும் தேசிய தமிழ்க் கட்சிகளாக இருந்தாலும் பூட்டிய அறைக்குள் அல்லது தமது வளவுக்குள் நினைவேந்தலை செய்து படங்களை பிரசுரிப்பதை நாங்கள் அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது’ எனவும், அவர் கூறினார்.
உண்மையில் சுமந்திரனுடைய சட்டம், சட்ட புலமை தமிழ் மக்களுக்கு பயன்பட்டதாக இல்லை எனத் தெரிவித்த அவர், ஏனைய தமிழ் கட்சிகளினுடைய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்னேஸ்வரனுடைய கட்சியாக இருக்கட்டும் எல்லோருமே ஒன்றுபட்டு இது தொடர்பான பேச்சுக்களில் ஈடுபட்டு உடனடியாக இதனை எவ்வாறு எதிர்கொள்வது பேசப்பட வேண்டும் எனவும் கூறினார்.
வெறுமனே வீட்டுக்குள் கொழுத்துவதென்பது பொருத்தமானதல்ல எனத் தெரிவித்த அவர், தாங்கள் சொல்லாவிடினும் வீடுகளில் மாவீரர்களை நினைந்து அவர்கள் விளக்கேற்றத்தான் போகின்றார்கள் எனவும் ஆனால், உலகுக்கு சொல்வதற்கு ஒரு பொது வெளியில் வரவேண்டும் எனவும் கூறினார்.
இந்த முறையாவது அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களுக்குள் பேசி, எவ்வாறு இந்த எவ்வாறு இவ்விடயத்தை விவாதத்துக்கு கொண்டு வர வேண்டும் என்பது இப்பொழுது தேவையாக உள்ளது என, அவர் மேலும் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal