மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு, அரசாங்கத்தால் தீர்வு காண முடியாது என்பதையே, நாடாளுமன்றத்தில் கடந்த 12ஆம் திகதி, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவால் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம், தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
அதாவது, இதற்கு முன்னைய வரவு செலவுத் திட்டங்களால், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட்டது என்பதல்ல இதன் அர்த்தம். கடந்த பல தசாப்பதங்களாகச் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டங்களும் இவ்வாறானவைதான். ஆனால் அவற்றில், மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு தரும் ஏதாவது பிரேரணைகள், குறைந்த பட்சம் இதை விடக் கூடுதலாக இருந்தன.
எந்த அரசாங்கம் அதிகாரத்தில் இருந்தாலும், ஒரே வரவு செலவுத் திட்டத்தால், மக்கள் தற்போது எதிர்நோக்கி இருக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று, கனவு காண முடியாது.
ஆனால், கொவிட்- 19 பெருந்தொற்றால் வருமானத்தையும் இழந்து, செலவும் அதிகரித்து பெரும் கஷ்டங்களை எதிர்நோக்கி இருக்கும் மக்களை, அதிலிருந்து மீட்க, நீண்ட காலத் திட்டமொன்றாவது அரசாங்கத்திடம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், அவ்வாறானதொரு திட்டம் அரசாங்கத்துக்குத் தேவை இல்லை என்பது, இந்த வரவு செலவுத் திட்டத்தால் மேலும் தெளிவாகியது.
இது, ஓர் ‘உற்பத்தி வரவு செலவுத் திட்டம்’ என, நிதி அமைச்சர் தமது வரவு செலவுத் திட்டத்தை வர்ணித்தார். அது உண்மையாக இருந்தால், உண்மையிலேயே மக்கள் அதைப் பற்றி மகிழ்ச்சியடைய வேண்டும்.
ஏனெனில், நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான அடித்தளத்தை, அதன் மூலம் அமைக்க முடியும். ஆனால், இதுவோர் ‘உற்பத்தி வரவு செலவுத் திட்டம்’ என்று கூறுவது, அப்பட்டமான பொய்யாகும்.
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க, அரசாங்கத்திடம் திட்டம் இருக்கின்றது என்று வைத்துக் கொண்டாலும், அவற்றை நடைமுறைப்படுத்த அரசாங்கத்திடம் பணம் இல்லை. போதாக்குறைக்கு வெளிநாட்டு பணத்துக்கும், குறிப்பாக டொலருக்கும் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது.
உள்நாட்டிலும் அரசாங்கத்திடம் பணம் இல்லை. கடந்த ஒன்றரை வருடங்களாக, நாட்டின் கைத்தொழில், வர்த்தகம் போன்றவை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக, பெருமளவு உள்ளூர் வருமானத்தை, அரசாங்கம் இழந்துள்ளது.
அத்தோடு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவிக்கு வந்து சில நாள்களில், அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் நோக்கத்துடன், பல்வேறு துறைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த வரிகளை இரத்துச் செய்தார். சில வரிகள் பெருமளவில் குறைக்கப்பட்டன.
இதன் விளைவாக, அரசாங்கம் உடனடியாகவே 65,000 கோடி ரூபாய் வருமானத்தை இழந்ததாக, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கூறியிருந்தார். அதாவது, இந்த இரண்டு வருடங்களில் அரசாங்கத்தின் வரிக் குறைப்பு நடவடிக்கையால் மட்டும், 130,000 கோடி ரூபாய் வரிப் பணத்தை அரசாங்கம் இழந்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு 228,400 கோடி ரூபாயாகும். செலவு 391,200 கோடி ரூபாயாகும். அதன்படி, துண்டு விழும் தொகை 162,800 கோடி ரூபாயாகும். அதாவது, நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இரத்துச் செய்யப்பட்ட 130,000 கோடி ரூபாய் வரிப் பணம் இருந்திருந்தால், துண்டு விழும் தொகை மிகச் சொற்பமாகவே இருந்திருக்கும்.
2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம், சீனி விலையைக் குறைப்பதற்காகவென, சீனிக்கான சுங்க வரியை 50 ரூபாயிலிருந்து 25 சதமாகக் குறைத்தது. இறுதியில், வர்த்தகர்கள் சீனியின் விலையைக் குறைக்கவும் இல்லை; வரிச்சலுகையை பெற்றுக் கொண்டார்கள்.
அதன் மூலம், இந்த வருடத்தில் மட்டும் அரசாங்கம் 9,000 கோடி ரூபாயை இழந்ததாக கூறப்படுகிறது. அடுத்த வருடமும் இந்தத் தொகையை அரசாங்கம் இழக்க நேரிடும். அந்தத் தொகையும் இருந்திருந்தால், துண்டு விழும் தொகை சுமார் 20,000 கோடி ரூபாயாகவே இருந்திருக்கும்.
கடந்த சில மாதங்களில், வர்த்தகர்களுக்கு 14 முறை வரிச் சலுகை வழங்கியுள்ளதாக, நாடாளுமன்றத்தின் பொது நிறுவனங்கள் தொடர்பான குழுவின் (கோப் குழு) முன்னாள் தலைவர் டியூ குணசேகர, கடந்த வாரம் கூறியிருந்தார். அரச தலைவர்களின் இவ்வாறான சந்தர்ப்பவாதத்தின் காரணமாக, பாரியதொரு தொகை பணத்தை, அரசாங்கம் இழந்துள்ளது. இதன் விளைவுகளால் இப்போது, மக்கள் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்தில், வேடிக்கையான பல பிரேரணைகள் இருக்கினறன. அவை, எந்தவொரு வகையிலும் நாட்டில் தற்போதைய பிரச்சினைகளுக்குத் தீர்வை வழங்கமாட்டா! அவை வெறுமனே, மக்களிடம் நற்பெயரைப் பெறும் நோக்கத்துடனேயே முன்வைக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓய்வூதியம் பெறுவதற்காக, ஐந்து வருடங்கள் எம்.பியாக இருக்க வேண்டும் என்பது அவற்றில் ஒன்றாகும்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் ஒன்றரை இலட்சமாகும். தற்போது நாடாளுமன்றத்தில் உள்ளவர்கள் அனைவரும் புதியவர்கள் என்று கருதினால், இந்தப் புதிய ஆலோசனையின் படி, தற்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக் காலம் முடிவடைந்தவுடன், எவரும் ஓய்வூதியம் பெற மாட்டார்கள்.
அதன் மூலம், அடுத்த ஐந்து வருடங்கள் வரை, அரசாங்கம் சேமிக்கும் தொகை 160 கோடி ரூபாயாகும். அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை விட, ஏனைய கொடுப்பனவுகளே அதிகம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக, வருடமொன்றுக்கு 2,600 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது; அது குறைக்கப்படவில்லை.
ஓர் அமைச்சரைப் பராமரிக்க, அரசாங்கம் மாதமொன்றக்கு 75 இலட்சம் ரூபாய் செலவிடுவதாக, அண்மையில் ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது. அவ்வாறு இருக்க, அரசியல்வாதிகளின் சம்பளத்தையோ, ஓய்வூதியத்தையோ குறைப்பதால், பெரிதாக எதுவும் கிடைக்கப் போவதில்லை.
கொவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக, தொழில் ரீதியாகப் பாதிக்கப்பட்ட ஓட்டோ உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்க, இந்த வரவு செலவுத் திட்டத்தில் 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. நாட்டில் 11 இலட்சம் ஓட்டோக்கள் உள்ளன. அவற்றில் 10 இலட்சம் வாடகை வாகனங்கள் என்று கருதினால், ஒரு ஓட்டோவுக்கு நிவாரணமாக, 550 ரூபாயே கிடைக்கும்.
இதேபோல், கொவிட்-19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தனியார் பஸ் உரிமையாளர்களுக்கும் பாடசாலை வான் உரிமையாளர்களுக்கும் நிவாரனம் வழங்க, இதுபோன்ற சிறு தொகைகளைத் தான் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது.
இவ்வாறு அரசியல்வாதிகளின் சலுகைகளைக் குறைப்பதாகவும் இது போன்ற நிவாரணங்களை வழங்குவதற்காகவும் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைகள், வெறும் ஏமாற்றுவித்தைகளேயாகும். இவற்றால், நாடு தற்போது எதிர்நோக்கி இருக்கும் பாரிய நெருக்கடிக்கு, எவ்விதத் தீர்வும் கிடைக்கப் போவதில்லை.
ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பள முரண்பாட்டை நீக்க, அரசாங்கம் 3,000 கோடி ரூபாயை ஒதுக்கப் போவதாக நிதி அமைச்சர் கூறினார். இது பாராட்டக்கூடிய விடயம் தான். ஏனெனில், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடானது, கடந்த 24 வருடங்களாகத் தீர்க்கப்படாமல் இருந்து வந்துள்ளது. ஆயினும், அதைப் பெறுவதற்காக ஆசிரியர்களும் அதிபர்களும் கடந்த ஓகஸ்ட் மாதம் எட்டாம் திகதி முதல் பெரும் போராட்டத்தில் ஈடுபட நேர்ந்தமை தெரிந்ததே.
அரசாங்கம் இரசாயன உரத்தையும் இரசாயன கிருமிநாசினி போன்றவற்றையும் இறக்குமதி செய்வதைத் தடைசெய்ததன் விளைவாக, நாடெங்கிலும் விவசாயம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சில மாதங்களில் நாட்டில் பெரும் உணவுப் பஞ்சம் ஏற்படும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், நிதி அமைச்சர் அவ்வாறானதொரு பிரச்சினை இருப்பதை உணர்ந்துள்ளாரா என்பது சந்தேகமே. ஏனெனில், அந்த நிலைமையை எதிர்நோக்கத்தக்கதாக வரவு செலவுத் திட்டத்தில் எந்தவோர் ஆயத்தமும் இருப்பதாகத் தெரியவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கமநல காப்புறுதி திட்டத்தின் கீழ், நட்டஈடு வழங்கப்படும் என சில ஆளும் கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர். எனினும், அதற்காகவும் நிதி ஒதுக்கீடு செய்திருக்க வேண்டும்.
வரவு செலவுத் திட்டம் என்பது, அரசாங்கத்தின் வருடாந்த கொள்கைப் பிரகடனம் என்றே கருதப்படுகிறது. சர்வதேச ரீதியிலும் தேசிய ரீதியிலும் வருடாவருடம் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப, நீண்ட மற்றும் குறுகிய கால ரீதியாக நிறைவேற்றக்கூடிய திட்டங்களை வகுத்து, முன்வைப்பதே அதன் நோக்கமாகும்.
எனவே, வரவு செலவுத் திட்டதின் மூலம், குறிப்பிட்ட பொருட்களின் விலை உயர்வையோ, விலைக் குறைப்பையோ எதிர்பார்க்க முடியாது. ஆனால், இலங்கையில் அரசாங்கங்கள் மாறும் நிலைமைகளுக்கு ஏற்ப, புதிய திட்டங்களை முன்வைப்பதோ அல்லது, இருக்கும் திட்டங்களில் மாற்றங்களைச் செய்வதோ இல்லை.
அடுத்த வருடத்தில், அரசாங்கத்தை நடத்தத் தேவையான பணத்தைப் பெறுவதற்காக, நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவது மட்டுமே, இங்கு வரவு செலவுத் திட்டங்களால் நடைபெறுகிறது. இம்முறையும் அதுவே நடைபெறப் போகிறது.
பொருளாதாரப் பிரச்சினைகளை தீர்க்க, அரசாங்கத்திடம் நீண்ட, குறுகிய காலத் திட்டங்கள் இல்லாத நிலையில், எதிர்வரும் காலங்களில் மக்கள் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருக்கும். இது, தேர்தல் காலங்களில் ஆளும் கட்சியை, வெகுவாகப் பாதிக்கும். எனவே, பெரும்பான்மை மக்களை இன ரீதியாகத் தூண்டி, மக்களின் கவனத்தை திசைதிருப்ப அரச தலைவர்கள் முயலலாம். ஏற்கெனவே, ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ தொடர்பான செயலணி போன்ற உத்திகள் தயாராக இருக்கின்றன.
எம்.எஸ்.எம். ஐயூப்