ஐநா பருவநிலை உச்சிமாநாட்டின் போது 2030 ஆம் ஆண்டிற்குள் காடு அழிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உறுதியளித்த பல நாடுகளில் பிரேசிலும் ஒன்று.
பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் மழைக்காடுகள் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, அதிக பரப்பளவில் அழிக்கப்பட்டுள்ளதாக தேசிய விண்வெளி ஆய்வு அமைப்பு புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதாவது முந்தைய ஆண்டை விட அழிந்த அமேசான் மழைக்காடுகளில் விகிதம் 22 சதவீதம் ஆகும். 2006க்கு பிறகு அதிகபட்சமாக, 2020-21ம் ஆண்டில் 13,235 சதுர கிமீ மழைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐநா பருவநிலை உச்சிமாநாட்டின் போது 2030 ஆம் ஆண்டிற்குள் காடு அழிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உறுதியளித்த பல நாடுகளில் பிரேசிலும் ஒன்று. இந்த வாக்குறுதியில் இருந்து பின்வாங்குவதையே, இந்த காடு அழிப்பு புள்ளிவிவரம் காட்டுகிறது.
அமேசான் காடுகளில் சுமார் மூன்று மில்லியன் வகையான தாவரங்கள், விலங்குகள் மற்றும் ஒரு மில்லியன் பழங்குடியின மக்கள் உள்ளனர். புவி வெப்பமடைதலின் வேகத்தை குறைப்பதில் அமேசான் காடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆனால், பிரேசிலின் அதிபராக போல்சனரோ பதவியேற்ற பிறகே இவ்வளவு அழிப்பு ஏற்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து சுற்றுச்சூழல் மந்திரி ஜோகிம் லீட் கூறுகையில், இந்த தரவு நமக்கு முன் உள்ள சவாலை உணர்த்துவதாகவும், இந்த குற்றங்கள் தொடர்பாக நாம் இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். அதேசமயம், கடந்த சில மாதங்களின் நிலைமையை இந்த தரவு சரியாக பிரதிபலிக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
போல்சனரோ ஆட்சியின் கீழ் அமேசான் காடுகளை அழிப்பது அதிகரித்துள்ளது. மழைக்காடுகளில் விவசாயம் மற்றும் சுரங்க நடவடிக்கைகளை போல்சனரோ ஊக்குவிக்கிறார்.