மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களையும் ஒரு வருட போராட்டத்துக்குப் பின் பிரதமர் மோடி திரும்பப் பெற்றுள்ளார்.
மோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களும் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும், ஆகவே அந்த சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பெருமக்கள் பல மாதங்களாக இந்த போராட்டத்தை நடத்தி வந்தனர்.
விவசாயிகளுக்கு ஆதரவாகவும், மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தியும் நடிகர் கார்த்தி முன்பு அறிக்கை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இன்று காலை மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக பிரதமர் மோடி அறிவித்தார். தமிழக முதல்வர் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் இந்த முடிவை வரவேற்றுள்ளனர்.

நடிகர் கார்த்தி, “மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறுவதாக நம் பிரதமர் அறிவித்திருப்பது, தங்கள் உயிரை ஈந்து போராடிய எளிய வேளாண் மக்களின் ஒருவருட இடைவிடாத போராட்டத்திற்கு கிடைத்திருக்கும் வரலாற்று வெற்றி. போராடியவர்களுக்கும் புரிந்து கொண்ட அரசுக்கும் அன்பும் நன்றியும்” என தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
Eelamurasu Australia Online News Portal