கடந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட மலையக பல்கலைக்கழகம் எங்கே என கேள்வி எழுப்பிய நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார், இன்னுமா பல்கலைக்கழகம் அமைக்க காணியை தேடுகிறீர்கள்? எனவும் கேலி செய்துள்ளார்.
வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான நேற்றைய (17) விவாதத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டு மக்களால் குறுகிய காலத்திலேயே வெறுத்து ஒதுக்கிய அரசாங்கமாக தற்போதைய அரசாங்கம் இருக்கிறது. எந்தவிதமான சலுகைகளும் இல்லாத வரவு செலவு திட்டமாக இது இருக்கிறது எனவும் தெரிவித்தார்.
நாட்டின் உற்பத்தி பாரிய அளவில் குறைவடைந்துள்ளது. இதனால் நாட்டில் எதிர்காலத்தில் பஞ்சம், பட்டிணி ஏற்படும் அபாயம் இருக்கிறது. அரச ஊழியர்களை சுமையென கூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். பெருந்தோட்ட மக்களையும் வரவு செலவு திட்டத்தில் ஏமாற்றியிருக்கிறார்கள் என்றார்.
கடந்த வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டதாகக் கூறும் மலையக பல்கலைக்கழகம் எங்கே? இன்னும் பல்கலைக்கழகத்தை அமைக்க காணி தேடுகிறீர்களா? எனவும் கேள்வி எழுப்பினார்.