கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீதான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் புறநகர்ப்பகுதியான ரோவில்லே பகுதியில் ஆஸ்திரேலிய-இந்திய சமூக மையம் உள்ளது. இங்கு மகாத்மா காந்தி முழு உருவ வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. இந்தியாவின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய அரசு பரிசாக கொடுத்த அந்த சிலையை, கடந்த வெள்ளிக்கிழமையன்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்திய தூதர் ராஜ்குமார் மற்றும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆனால், திறக்கப்பட்ட சில மணி நேரங்களில் காந்தி சிலையை மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சிலையை அவமதித்து சேதப்படுத்தியவர்கள் பற்றி தெரிந்தால் தகவல் கொடுக்கலாம் என காவல’ துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
காந்தி சிலை அவமதிக்கப்பட்டதற்கு ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த அளவுக்கு காந்தியை அவமரியாதை செய்வதை பார்ப்பது வெட்கக்கேடானது மற்றும் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது என அவர் கூறி உள்ளார்.
கலாச்சார நினைவுச்சின்னங்கள் மீதான தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும், ஆஸ்திரேலிய இந்திய சமூகத்திற்கு மிகுந்த அவமரியாதை செய்தவர்கள் வெட்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal