சிட்னியில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஸ்மித் சதத்தால் 68 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது அவுஸ்ரேலியா.
அவுஸ்ரேலியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் அவுஸ்ரேலியா மண்ணில் இன்று தொடங்கியது.
சிட்னியில் நடைபெற்ற முதல் போட்டியில் டாஸ் வென்ற அவுஸ்ரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. வார்னர், பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். பிஞ்ச் தான் சந்தித்த முதல் பந்திலேயே போல்டாகி ரன் கணக்கை துவக்காமல் வெளியேறினார். வார்னர் 24 ரன்கள் சேர்த்தார்.
ஆனால், அதன்பின் வந்த கேப்டன் ஸ்மித் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 157 பந்தில் 14 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 164 ரன்கள் குவித்தார். ட்ராவிஸ் ஹெட் 60 பந்தில் 52 ரன்னும், விக்கெட் கீப்பர் வடே 22 பந்தில் 38 ரன்களும் குவிக்க அவுஸ்ரேலியா 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது.
325 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில், லாதம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லாதம் 2 ரன்கள் எடுத்த நிலையிலும், அடுத்த வந்த கேப்டன் வில்லியம்சன் 9 ரன்கள் எடுத்த நிலையிலும் ஹசில்வுட் பந்தில் ஆட்டம் இழந்தார்.
ஆனால், கப்தில் 102 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 114 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 6-வது வீரராக களம் இறங்கிய முன்றோ 49 ரன்னும், 4-வது வீரராக களம் இறங்கிய நீசம் 34 ரன்களும் எடுக்க நியூசிலாந்து அணி 44.2 ஓவர்களில் 256 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் ஆஸ்திரேலியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.