ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினையை மூன்று தவணைகளில் வழங்காமல், ஒரே தடவையில் தீர்ப்பதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஆசிரியர் தொழிற்சங்கத் தலைவர்கள், இன்று (10) தெரிவித்தனர்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவும் இந்த முரண்பாடுகளை ஒரே தடவையில் தீர்த்து வைப்போம் என, தொழிற்சங்கங்களுக்கு உறுதியளித்ததாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் தலைவர் மஹிந்த ஜயசிங்க ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
எங்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கான 160 நாள் போராட்டம் வெற்றிகரமாக முடிவுக்கு வந்துள்ளது என்று தெரிவித்த அவர், பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தின் போது பிரதமர் மற்றும் நிதியமைச்சர் இருவரும் அரசாங்கத்தின் முடிவை எமக்கு தெரிவித்தனர் என்றார்.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலினும் இதே கருத்துக்களைத் தெரிவித்ததுடன், எங்கள் முக்கிய கோரிக்கையை நாங்கள் வென்றுள்ளோம். எமது போராட்டம் ஒரு மகத்தான வெற்றியாக மதிப்பிடப்பட்டது என்றார்.
மற்ற கோரிக்கைகளையும் வென்றெடுக்கும் போராட்டத்தை தொடரப்போவதாக இரு தொழிற்சங்க தலைவர்களும் தெரிவித்தனர்.