நம்பிக்கையைத் தகர்க்கும் செயலணி

வகுப்பறையில் மிகவும் குழப்படி செய்து கொண்டிருக்கின்ற மாணவனை, வகுப்புத் தலைவனாக அதாவது ‘மொனிட்டராக’ நியமிப்பது போல, ஒரே நாடு,  ஒரே சட்டம், அமைப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் தலைவராக, வெறுப்புணர்வின் வினையூக்கியான பொதுபல சேனாவின் செயலாளரான ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த உவமானத்தை மக்கள் கூறுவதற்கு முன்பாகவே, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் முக்கிய அமைச்சர் ஒருவரே கூறியிருக்கின்றார் என்பது கவனிப்பிற்குரியது. நமது முன்னோர்கள் இதனை வேறுவிதமாக வர்ணித்துச் சொல்வார்கள்.

ஒரே நாடு, ஒரே சட்டத்தை நிறுவுதல் என்பது, ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் தேர்தல்கால வாக்குறுதியாகும். எனவே, அதனை நிறைவேற்றுவதற்கான ஒரு நகர்வாகவே இந்த முன்னெடுப்பை அரசாங்கம் காண்பிக்கின்றது.

ஆனால், ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக ராஜபக்‌ஷ தரப்பினர் இந்த வாக்குறுதியை மட்டும் வழங்கவில்லை. இதற்கப்பால், பல உத்தரவாதங்களை வழங்கினார்கள். பொருட்கள் விலையைக் குறைப்போம் என்பதில் தொடங்கி, மக்களுக்கு மானியங்கள் வழங்கும் என்பது தொட்டு தேசிய பொருளாதார அபிவிருத்தி வரை ஏகப்பட்ட வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள்.

ஆயினும், மற்றைய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றுவதில் காண்பிக்காத அக்கறையை ஆட்சியாளர்கள், ஒரே சட்டத்தை உருவாக்கும் விடயத்தில் காண்பிக்கின்றார்கள் என்பது வெளிப்படையாக நோக்குகின்ற போது ஆச்சரியமானதுதான். ஆனால், ஆழமாகப் பார்த்தால் அதன் சூட்சுமங்கள் தெரியும்.

பெரும் பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மை இன்மை நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில், பொருட்களின் விலை அதிகரிப்பையடுத்து சிங்கள மக்களிடையேயும் அரசாங்கம் பற்றிய அதிருப்தி அதிகரித்திருக்கின்றது.

இத் தருணத்தில், மக்களை வேறு விடயங்களின்பால் திசை திருப்பி, பராக்குக் காட்டுவதற்கான நிர்ப்பந்தமும் ஆட்சியாளர்களுக்கு இருக்கின்றது. இத்தனை அவசரமாக மேற்படி செயலணி நியமிக்கப்பட்டதும் அதன் தலைமைப் பதவி கடும்போக்கு தேரர் ஒருவருக்கு கொடுக்கப்பட்டதும் இதற்காகக்கூட இருக்கலாம்.

ஒரே நாடு, ஒரே சட்டத்துக்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியில் ஒன்பது  சிங்களவர்களும் நான்கு முஸ்லிம்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள் எவரும் உள்ளடக்கப்படவில்லை என்று கடுமையான விமர்சனங்கள் மேலெழுந்ததையடுத்து, தமிழ் சமூகம் சார்பாக மூவரை நியமிக்கவுள்ளதாக சொல்லப்படுகின்றது.

உண்மையில், மேற்படி நோக்கத்துக்காக ஒரு செயலணி நியமிக்கப்பட்டது என்பதை விடவும் அதன் தலைவராக பொதுபலசேனா என்கின்ற கடும்போக்கு அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் நியமிக்கப்பட்டுள்ளமையே கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியிருக்கின்றது.

சிங்கள சமூக செயற்பாட்டாளர்கள் கூட, இந்நியமனத்தை ஜீரணிக்கவில்லை என்பது புலனாகின்றது. அத்துடன் சர்வதேச உரிமைசார் அமைப்புகளும் உள்ளூர் செயற்பாட்டாளர்களும் இவரது நியமனத்தையும், தமிழ் பிரதிநிதிகள் உள்ளடக்கப்படாமையையும் நேரிடையாக கண்டித்துள்ளனர்.

“பெரும்பான்மையினரின் சட்டங்களை சிறுபான்மையினரின் மீது திணிக்கும் முயற்சியாகவே இதனை நோக்க முடியும்” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி சுட்டிக்காட்டியுள்ளார்.

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், “இலங்கையை பௌத்த குடியரசாக மாற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கின்றது” என்று இந்திய உயர்ஸ்தானிகரிடம் தெரிவித்துள்ளார். வேறுபல தமிழ் எம்.பிக்களும், அரசாங்கத்தின் இந்நடவடிக்கையை ஆட்சேபித்துள்ளனர்.

முஸ்லிம்கள் தரப்பில், மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம், கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார். “ஞானசாரரின் நியமனமானது, இனங்களுக்கு இடையிலான முறுகல் நிலைக்கு தூபமிடுவதாக அமையும்” என்று மு.கா தலைவர் ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார். எஸ்.எம். எம். முசாரப், எச்.எம்.எம்.ஹரீஸ் போன்ற எம்.பிக்களும் கண்டித்துள்ளனர்.

இதேவேளை, ராஜபக்‌ஷர்களுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கும் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லா எம்.பியும், ஞானசாரரின் நியமனம் தொடர்பில் ஆளும் கட்சிக் கூட்டத்தில் நேரிடையாகவே தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். ‘இப்படிச் செய்தால், முஸ்லிம்களின் கொஞ்சநஞ்ச வாக்குகளும் உங்களுக்குக் கிடைக்காது’ என்று அவர் கூறியதாகச் சொல்லப்படுகின்றது.

நீதி அமைச்சராக முஸ்லிம் ஒருவர் இருக்கும்போதே, இந்தக் கூத்தெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது. எனவே, இதன்காரணமாக நீதி அமைச்சர் அலிசப்ரி விரக்தியடைந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரேநாடு, ஒரே சட்டம் என்பதன் ஊடாக, மறைமுகமாக ஒரு செய்தி சொல்லப்படுகின்றது. ஒன்று, நாடு பிரிக்கப்படாததாக இருக்கும் என்பதாகும். இரண்டாவது, யாருக்கும் பிரத்தியேக சட்டங்கள் இருக்காது என்பதாகும்.

எவ்வாறிருப்பினும், இந்த விவகாரம் நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள பின்னணியில், விலை அதிகரிப்புப் பற்றியும் பொருள் தட்டுப்பாடு பற்றியும் பேசுவது, இப்போது கொஞ்சம் குறைவடைந்து விட்டது. அதுவும் ஓர் உப இலக்காக இருந்திருக்கும் என்றால், அந்த நோக்கத்தை அவர்கள் கொஞ்சமேனும் அடைந்திருக்கின்றனர் என்று சொல்லலாம்.

ஆயினும், ஒரு முக்கியமான ஜனாதிபதி செயலணிக்கு, இனவாத அடையாளமுள்ள மதகுரு ஒருவர் நியமிக்கப்பட்டமை, ஒரே நாடு ஒரே சட்டம் மீதான நம்பிக்கையை ஆரம்பத்திலேயே சுக்குநூறாக்கியுள்ளது.

இந்த உத்தேச திட்டத்தின் மூலம், இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள பிரத்தியேக சட்டங்கள் வறிதாகிப் போகக் கூடும். குறிப்பாக, ஏற்கெனவே இலக்கு வைக்கப்பட்டுள்ள முஸ்லிம் தனியார் சட்டம், ஞானசாரரின் பிரதான இலக்காக இருக்கும். அதுபோல, கண்டியச் சட்டம், யாழ்ப்பாணத்தவருக்கான தேசவழமைச் சட்டம் ஆகியனவும் உருக்குலைந்து போகலாம்.

இந்தத் தருணத்தில், முஸ்லிம் சமூகம் சார்பில் அங்கம் வகிக்கின்ற உறுப்பினர்களாலோ அல்லது எதிர்காலத்தில் தமிழ் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டாலோ, செயலணியில் அவர்களது செல்வாக்கு மிகக் குறைவாகவே இருக்கும். வாக்குவாதம் புரிந்து, பதவியை இராஜானாமாச் செய்யும் மனநிலைக்கு அவர்கள் வந்தாலும் ஆச்சரியமில்லை. ஒரே நாடு, ஒரே சட்டம் என்பதால் சொல்லப்படுவது அல்லது மக்கள் விளங்கிக் கொள்வது என்னவென்றால், ‘எல்லோருக்கும் பொதுவான’ ஒரு சட்டமாகும்.

அப்படியென்றால், பொதுவான ஒருவர் அந்தச் செயலணியின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அத்துடன் அதில் உள்ளடங்குகின்ற ஒவ்வொருவரும் அந்தச் சமூகத்தின் அடையாளங்கள், தனித்துவங்கள் பற்றிய புரிதலுடன் மிக முக்கியமாக சட்டத்துறைசார் அறிவை கொண்டவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

யாரிடம் எந்த வேலையைக் கொடுப்பது என்ற ஒரு வரண்முறை இருக்கின்றது. ஞானசாரர் என்பவர் அவ்வாறான பொதுமைப்பாடான அடையாளம் ஒன்றை இதுகாலவரை முன்னிறுத்தாத ஒருவர் ஆவார்.

2010 இற்குப் பின்னரான ஆட்சி மாற்றங்களின் மையப் புள்ளியாகக் கருதப்படும் இனவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டவர். முஸ்லிம்கள் மீதான இனவெறுப்பை நேரிடையாகவே உமிழ்பவர். இப்பேர்ப்பட்ட ஒருவர் இந்தச் செயலணிக்குப் பொருத்தமானவரா என்ற கேள்வி சிங்கள மக்களிடையேயும் இருக்கின்றது.

அப்படிப் பார்த்தால், பௌத்த தொல்பொருள்கள் பற்றிய ஒரு செயலணிக்கு அல்லது மதகுருமார்களின் நலன் பேணும் குழுவொன்றுக்கு தலைவராக நியமிக்கக் கூடிய ஒருவரை, பல்லினங்கள் வாழும் நாடொன்றிற்கு பொதுவான ஒரே சட்டத்தை உருவாக்குவதற்கான செயலணியின் தலைவராக நியமித்தமை நல்லதொரு முன்மாதிரியாக தெரியவில்லை.

இது பற்றி விமர்சனங்கள் எழுந்தமையால், இந்த நியமனத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்ற ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. ஆயினும், “ஞானசார தேரர், எனக்கு அறிவுரை கூறுவதற்காகவே நியமிக்கப்பட்டுள்ளார்” என்று ஜனாதிபதி இப்போது கூறியுள்ளார்.

உண்மைதான், அவர் ஜனாதிபதிக்கு ஆலோசனை, பரிந்துரை செய்வதற்கான செயலணியின் தலைவர் என்பதால்தான் மக்கள் இவ்விடயத்தில் இவ்வளவு கரிசனை காட்டுகின்றனர். அவர் ஜனாதிபதிக்கு வழங்கும் ஆலோசனைகள் குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களுக்கு பாதகமாக அமைந்துவிடும் என்பதாலேயே, இந்த எதிர்ப்பு தெரிவிக்கப்படுகின்றது.

இந்த யதார்த்தத்தை ஜனாதிபதி புரிந்து கொண்டாலொழிய இச் செயலணியின் தலைமைப் பதவியில் மாற்றங்கள் நிகழ்வதற்கான நிகழ்தகவு குறைவாகவே இருக்கும். அப்படியான ஒரு சூழல் ஏற்படுமாயின் அது சிறுபான்மை மக்களிற்கு பல்வேறு துரதிர்ஷ்டங்களுக்கு வழிகோலும்.

சுதந்திரத்திற்குப் பின்னரான தனிச் சிங்கள சட்டமும், அதற்குப் பிறகு மேலெழுந்த போலி தேசியவாத சிந்தனைகளும் இனப் பிரச்சினைக்கு எண்ணெய் ஊற்றின. சமகாலத்தில் விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஆயுத இயக்கங்களும் பெருவளர்ச்சி பெற்றன. இதனால் இலங்கை சந்தித்த இழப்புகளின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை.

அவற்றுக்கு எல்லாம் தீர்வுகண்டு இன ஐக்கியத்தின் துணையுடன் ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கையை கட்டியெழுப்ப முற்பட்டுக் கொண்டிருப்பதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். அந்த இலக்கை அடைய வேண்டுமென்றால், நாடு மீண்டும் பின்னோக்கிச் செல்ல வழிகோலும் பாங்கிலான இதுபோன்ற அரசியல் தீர்மானங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.